1. காதல் குறுங்கவிதைகள் – எட்மண்ட் ஸ்பென்ஸர் | தமிழ் மொழியாக்கம்: முனைவர் ர.தாரணி
அந்த கைதேர்ந்த வணிகர்கள் அருமந்தப்பொருடகளை நாடி
கடும் பிரயத்தனம் மேற்கொண்டு லாபமடைய
மேற்கிலிருந்து கிழக்கு வரை திசைகள் தோறும் திரிந்து
அலைந்து பொக்கிஷங்களத் திரட்ட அலைகிறார்கள்.
பாவம் பித்தர்கள்! அவசியமா என்ன
அத்துணை தொலைவு பயனற்ற தேடலுக்கு?
இதோ! என் மனத்தின் இனியவள் கொண்டுள்ளாள் தன்னகத்தே
தேசாதிதேசங்களில் தேடியும் கிடையா திரவியங்கள் அனைத்தும்.
நீலக்கண் மாணிக்கம், இதோ!
அவளின் அந்திரக்கண்மணி ஒளிக்கற்றைகள்
அவற்றை அற்பமாக்கிவிடும்.
ரத்த நிற கெம்பு ரூபி வேண்டுமோ, இதோ!
தகதகக்கும் அவளின் சிவந்த இதழ்கள்
செம்மணியைத்தோற்கடிக்குமோ?
நிர்மலமான சரவரிசையில் மிளிர்ந்து ஒளிரும்
அவளின் பல்வரிசை முன்நிற்கும்.
தந்தங்கள் தேவையோ? தந்தமே தலைவணங்கும்
அவளின் தங்க நிற நுதல் கண்களைக் கவரும்
பூவுலகின் மேல் இருக்கும் கலப்பற்ற தங்கம் தேவையெனில்,
நேர்த்தியான அவளின் தங்கக்குழல்கற்றைகள் சரிந்து விழும் அழகு
காணீர்!
வெள்ளி தேவையெனில் அவளின் வெளுத்த மினுமினுக்கும்
வாழைத்தண்டுக் கரங்கள் வெளியிடும் பளீர் ஒளியைக்கண்டு
களிக்கலாம்.
ஆயினும்,
அனைத்திலும் மேன்மையானது அனைவரும் அறிய இயலா,
எண்ணிறந்த இன்னலப்பண்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அவள்
அகம்.