நானறிந்தவரையில் இலங்கையில் பல படைப்பாளிகள் ஆசிரியர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன வற்றில் விரிவுரையாளர்களாகவும், இலக்கியத்துறை சார்ந்த கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் கல்விப்பணிப்பாளர்களாகவும், கல்வி அதிகாரிகளாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய படைப்பாளிகளிடம் கல்வி கற்ற மாணவர்களும் பின்னாளில் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்தவகையில் இந்தப்பதிவில் சொல்லப்படும் ஏ. இக்பால் அவர்கள் ஆசிரிய பெருந்தகைகளால் வளர்க்கப்பட்ட படைப்பாளியாக மாத்திரம் திகழவில்லை, இவரும் தமது மாணவர்கள் சிலரை படைப்பாளியாக்கியிருக்கிறார்.
” நீ என்ன எழுதினாய்..? என்ன சாதித்தாய்..? என்று சொல்வதிலும் பார்க்க எத்தனைபேரை உருவாக்கினாய்..? என்பதில்தான் உனது ஆளுமை தங்கியிருக்கிறது” என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.
கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் இக்பால் கல்வி கற்ற காலத்தில், அங்கு கடமையாற்றிய ஆசிரியர்களான படைப்பாளிகள் எம்.வை.எம். முஸ்லிம், மற்றும் அ.ஸ.அப்துஸ்ஸம்மது ஆகியோரால் நன்கு இனங்காணப்பட்டு எழுத்துலகிற்கு அறிமுகப்படத்தப்பட்டவர். அங்கு “கலாவல்லி” என்ற கையெழுத்து இதழின் ஆசிரியராக இயங்கியிருக்கும் இக்பால், பிற்காலத்தில் தென்னிலங்கையில் தர்கா நகர் சாஹிராக்கல்லூரியில் ஆசிரியப்பணி ஏற்றதும் அங்கு படிப்பு வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி சில மாணவர்களை இனங்கண்டு எழுத்துலகத்திற்காக வளர்த்திருக்கிறார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள், திக்குவல்லை கமால், தர்காநகர் ஸபா ஆகியோர்.
இந்தத்தகவல்களிலிருந்து எம்மவர் மத்தியில் நடந்திருக்கும் இலக்கியத் தொடர் அஞ்சல் ஓட்டத்தை அவதானிக்க முடியும்.
கிழக்கிலங்கை அக்கரைப்பற்றில் 1938 இல் பிறந்து தென்னிலங்கையில் தர்கா நகரில் 2017 இல் இறுதி மூச்சை விட்டவர்தான் கவிஞர் ஏ. இக்பால்.
எனது இனிய நண்பரும் ஆசிரியரும் கவிஞரும் ஆய்வாளரும் சமூகச்செயற்பாட்டாளரும் பன்முக ஆளுமைகள் கொண்டவருமான ஏ. இக்பால் அவர்கள் மறைந்தவுடன் கனடாவில் வதியும் நண்பர் வ.ந.கிரிதரன் நடத்தும் ‘பதிவுகள்’ இணையத்தில் தரப்பட்டிருந்த தகவலில் அவரது பிறந்த ஆண்டு தவறாக பதிவாகியிருந்ததை கண்டவுடன் தாமதமின்றி தொடர்புகொண்டு அதனை திருத்துமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதனைத்திருத்தினார். நாட்கள் கடந்த நிலையில் ஏ. இக்பால் அவர்களின் பிறந்த திகதி 11-02-1938 என்பதை நண்பர் மேமன்கவி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் (109 ஆவது இதழ்- ஐப்பசி 2017) பதிவுசெய்துள்ள அஞ்சலிக்குறிப்பில் காணமுடிகிறது. எனினும் ஏ. இக்பால் . 1953.12.11 ஆம் திகதிதான் பிறந்தவர் என்ற தவறான தகவல்தான் நூலகம் இணையத்தில் தற்போதும் இருக்கிறது. என்னைவிட மூத்தவரான ஏ. இக்பால் 1953 இல் எப்படி பிறந்திருப்பார் என்ற சந்தேகத்துடன்தான் அவரது மறைவு பற்றிய செய்தி ‘பதிவுக’ளில் வெளியானபோது கிரிதரனை தொடர்புகொண்டேன். எதிர்காலத்தில் எம்மத்தியில் வாழ்ந்த – வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஆளுமைகள் பற்றிய பதிவுகளை எழுதுபவர்களுக்காகவே இந்தச் சிறிய தகவலை தெரிவித்துவிட்டு, மறைந்த நண்பர் ஏ. இக்பாலுடனான எனது நட்புறவின் ரிஷிமூலத்திற்கு வருகின்றேன்.