“சோகங்கள் கதையாகிச் சோர்வு எனை வாட்டும்போது
தாகமெனைத்தழுவுவதால் நாடுகிறேன் போதையினை
பாவங்கள் சுமையாகிப் பலவீனம் சேரும்போது
பாவி நான் தேடுகின்றேன் மரணத்தின் தேவனை
கடந்தவைகள் மறந்தபோது காலங்கள் சென்றபோது
காசுபணம் சேரும்போது – மீண்டும்
கல்லறையால் எழும்புகிறேன்
சில்லறையாய் மாறுகிறேன்”
இப்படி ஒரு கவிதையை 03-07 – 1975 ஆம் திகதி எழுதிய கவிஞன் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டான். ஈழத்து கவிஞி சிவரமணி, தமிழகக்கவிஞர் ஆத்மநாம் வரிசையில் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் தனக்குத்தானே தூக்கிட்டு மறைந்த எனது இனிய நண்பன் சண்முகநாதன் வாசுதேவன் எங்களைவிட்டுப்பிரிந்து 24 வருடங்களாகின்றன.
காலமும் கணங்களும் தொடரில் நான் இதுவரையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி எழுதியிருக்கின்றேன். அவர்களில் சிலர் அற்பாயுளிலும் சிலர் முதுமைக்காலத்திலும் மறைந்தவர்கள். எனினும் நான் எழுதியவர்களின் வரிசையில் தற்கொலை செய்துகொண்டு அற்பாயுளில் மறைந்தவர் பற்றியும் எழுதநேர்ந்திருக்கிறது. தூக்குக்கயிற்றை முத்தமிடுகின்ற அந்தக்கணம் அவன் ஒரு செக்கண்ட் யோசித்திருப்பானேயானால் அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கிய, வானொலி ஊடகப்பணிகளில் மேலும் பல புதிய உச்சங்களைத் தொட்டிருப்பான்.
மெல்பன் கலைவட்டம் மொனாஷ் பல்கலைக்கழகத்தில், “பெற்றோர் பிள்ளைகள் உறவு” என்ற தொனிப்பொருளில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி அரைநாள் பகல்பொழுது கருத்தரங்கினை நடத்தியது. அதில் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த காலைவேளையில் எனதும் வாசுதேவனதும் நண்பரான இலங்கையில் முன்னர் ஆசிரியப்பணியிலிருந்த சம்பந்தன் தகவல் தந்தார். 1993 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் மலரவிருந்த 1994 புத்தாண்டிற்காக வாசுதேவனின் நண்பர்கள் ஒன்றுகூடல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். வாசுவும் டிசம்பர் 31 ஆம் திகதியன்று மதியம் அந்த மண்டபத்திற்குச்சென்று ஏற்பாடுகளை கவனித்தான். அலங்கார வேலைகளிலும் ஈடுபட்டான். ஆனால், புத்தாண்டு மலர்ந்த வேளையில் அவன் தனது உயிரைத் துறந்தான்.