கவிதை: கத்தலோனியா மூதாட்டி (THE OLD WOMAN OF CATALONIA: ):

- தீபச்செல்வன் -

தங்க நகரமெங்கும்
இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ
சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில்
புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி,
முன்பொருநாள், ‘மகளே! கண்ணுக்கு தெரியாத
யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!’ என
தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.

‘எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்’ என
ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில்  உரையாற்றுகையில்
பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன்
துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி
‘மகனே! நமது கூழாங்கற்களை  திருடி ருசிப்பட்டவர்கள்
சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!’ என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

Continue Reading →

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

1. காதலுடன் பேசுகிறேன்

காணாமல் போனால் ……
கண்டுபிடித்துவிடலாம்……
உனக்குள் காணாமல்……
போன என்னை எப்படி…..
கண்டுபிடிப்பாய்…..?

காதலை மறைக்க……
முடியாது…….
கழுத்தில் உள்ள……
தாலியை சேலையால்….
மறைப்பது போல்….!

Continue Reading →

பாக்கியம் ராமசாமி (ஐ.ரா.சுந்தரேசன்) மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

ஐ.ரா.சுந்தரேசன்அப்புசாமி, சீதாப்பாட்டிஎழுத்தாளர் ஐ.ரா.சுந்தரேசன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் இரா முருகன் பதிவு செய்திருந்தார். ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்பது இவரது இயற்பெயர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைப்பகிர்ந்துகொள்கின்றோம். எங்களது காலகட்டத்தில் நகைச்சுவை எழுத்தென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி – சீதாப்பாட்டி கதைகள்தாம். ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் வெளியான அப்புசாமி – சீதாப்பாட்டி ஓவியங்களை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியுமா என்ன? ஐ.ரா.,சுந்தரேசனின் புனைபெயர்களிலொன்றுதான் பாக்கியம் ராமசாமி என்பதும். ஐ.ரா.சுந்தரேசன் என்னும் பெயரிலும் இவரது தொடர்கள் எழுபதுகளில் குமுதம் இதழில் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றில் ‘கதம்பாவின் எதிர்’ அப்பருவத்தில் நாம் விரும்பிப்படித்த நாவல்களிலொன்று. தமிழ் இலக்கிய உலகில் தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ போல் பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டியும் நிலைத்து நிற்பார்கள். இவர் அப்புசாமி.காம் என்னும் புகழ்பெற்ற வலைப்பதிவொன்றினையும் நடாத்தி வந்தார். அதன் இணையத்தள முகவரி: http://www.appusami.com/nagaichuvaimenu.asp அத்தளத்தில் அப்புசாமி – சீதாப்பாட்டி நாவல்கள் பலவற்றை வாசிக்கலாம்: http://www.appusami.com/nagaichuvaimenu.asp

 

Continue Reading →

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித்தூக்க முயன்றவரின் படைப்பாக்கத்தின் ஆச்சரியங்கள்! ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள்!

கவிஞர் வைதீஸ்வரன்” கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு.”

— இந்த வரிகளுடன் தொடங்கும் கிணற்றில் விழுந்த நிலவு கவிதையுடன் 1960 ஆம் ஆண்டிலும்  அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதையுடன் 1957 இலேயே  இலக்கிய உலகிற்கு அறிமுகமானவருமான  தமிழக கவிஞர் எஸ். வைதீஸ்வரனுக்கு தற்பொழுது 82 வயது. உடலுக்குத்தான் இந்த வயது. ஆனால், இன்றும் அவரது கவிதைகளும் கதைகளும்  புதிதாக பிறந்திருப்பதுபோன்ற தோற்றம்கொள்வன. திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தேவமகள் விருது, சிற்பி அறக்கட்டளை விருது, அமெரிக்கத்தமிழர்கள் வழங்கும் புகழ்பெற்ற ‘ புதுமைப்பித்தன் விளக்கு’ விருது முதலானவற்றைப்பெற்றவர். தமிழ்த்திரையுலகிலும் நாடகத்துறையிலும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர்,  மூத்த கலைஞர் சகஸ்ரநாமம் அவர்களின் மருமகன். தி. ஜானகிராமன், சி.சு. செல்லப்பா,  க. நா. சு. , பி.எஸ்.ராமையா, கு. அழகிரிசாமி ஆகியோருடன்  நேரடித்தொடர்பும் இலக்கியப்பரிச்சியமும் கொண்டிருந்தவர். சகஸ்ரநாமம் நடத்திய சேவாஸ்டேஜ் நாடகக்குழுவில் இணைந்திருந்தவர், பி. எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் , கோமல் சுவாமிநாதனின் புதிய பாதை முதலானவற்றிலும் நடித்திருப்பவர். ஜானகிராமன் எழுதிய நாலுவேலி நிலம் கதை திரைப்படமானபோது அதில் மட்டுமன்றி வேறும் சில திரைப்படங்களிலும் தோன்றியிருப்பவர்.

தமது 22 வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்த வைதீஸ்வரன் பிறந்தது கோயம்புத்தூரில். சேலத்தில் படித்துவிட்டு, 1948 முதல் சென்னை வாசியானவர். சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் இவரது முதல்கவிதை வெளியானது. அதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான சிற்றிதழ்களிலெல்லாம் எழுதியிருப்பவர். உதயநிழல், நகரச்சுவர்கள், விரல் மீட்டிய மழை, வைதீஸ்வரன் கவிதைகள், கால – மனிதன் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம், மனக்குருவி முதலான கவிதைத்தொகுப்புகள், கால் முளைத்த மனம், திசைகாட்டி, வைதீஸ்வரன் கதைகள், ஆகிய கதைத்தொகுப்புகளையும், தேவனின் எழுத்துலகம் என்ற ஆய்வு நூலையும் வரவாக்கியிருப்பவர். அண்மையில் அவர் எழுதிய அனைத்துக்கவிதைகளும் செம்பதிப்பாக மனக்குருவி என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

சென்னை ஏயர் இந்தியா   நிறுவனத்தில் பல வருடங்கள் நிருவாகியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றிருப்பவர். கவிஞர், சிறுகதைப்படைப்பாளி, ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், அத்துடன் ஓவியர். இவரது நூல்களின் முகப்போவியங்களும் இவருடையதுதான். இவ்வாறு பன்முக ஆற்றலும் மிக்க வைதீஸ்வரன் எமது அவுஸ்திரேலியத்தமிழ்  இலக்கியகலைச்சங்கத்தினதும் நெருக்கமான நண்பர்தான்.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியங்களில் முரசு!

செ.ராஜேஷ் கண்ணா, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம். -முகவரி,	சங்ககாலத் தோற்கருவிகளுள் முரசு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அரசர்களுக்குரிய மதிப்புறு தோற்கருவியாக விளங்கியதை சங்க இலக்கிய குறிப்புகள் வழி உணர முடிகிறது. போர்களத்திலும், அரண்மனைகளிலும் முறையே உணர்ச்சிகளையும், அறிவிப்புக்களையும் முரசு அரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு செயல்களுக்கும் உரிய அடிப்படையில் முரசு பல வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என வினைக்கு ஏற்ப ஓசை மற்றும் தகவமைப்பில் மாறுபட்டிருந்தன. ஏற்றின் தோலை மயிர்சீவாது போர்த்து வாரிறுகக் கட்டப்பட்ட முரசத்திற்குப் பலி வழங்கல் பண்டைய மரபு. திணையரிசியைக் குருதியில் தோய்த்து முரசுக்குப் பலியாக்குவர் என்று முரசின் இயல்புகளையும், வகைகளையும் விளக்குவார்கள்.  “எறிமுரசு, சிலைத்தார் முரசு, இடிமுரசு, தழுங்குகுரல் முரசு, உருமிசை முரசு என்ற  அடைகளினால் முரசம் ஒரு போரொலித் தாளமுடையது அன்றிப் பண்ணிசைக்கும் கருவி அன்று”1 என்று கு.வெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

“முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண்தப,
நிரை களிறு இடைபட, நெளியாத்த இருக்கை போல்”    (கலி.132:4-5)

என்ற கலித்தொகைப் பாடலில் மூன்று வகையான முரசுகள் பற்றி சுட்டப்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு உரை வகுத்தோர் ‘முரசு மூன்றாவன, வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு’ என்று விளக்குவர். வீரமுரசு போர்க்காலத்திலும், போர்களங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. மணமுரசு விழாக்காலங்களில் செய்திகளை அறிவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,

“வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசும்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுதி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குறுதி வேட்கை
முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்”        (மணி.விழா.27-31)

என்று மணிமேகலை கூறும். “வென்ற காளையின் தோலினால் போர்க்கப்பட்டதும் இடி போன்ற முழக்கினை உடையதும் ஆகிய முரசினைக் கச்சையானையின் கழுத்தின் மேலேற்றிக் குறுந்தடியால் அடித்து விழாச் செய்தியினை ஊரவர்க்கு, பழைமையினை உடைய குடியில் பிறந்தோன் அறிவித்தான் என்பர். இதனால் திருவிழாச் செய்தியினை ஊரவர்க்கு அறிவிக்கும் போது முரசு அறைந்து அறிவித்தல், மணிமேகலை காலத்தில் ஏற்பட்டது போலும். ஆனால் சங்க காலத்தில் குயவர்களே தெருத் தெருவாகச் சென்று விழாச் செய்தியினை உரத்துக்கூவி உரைத்தல் வழக்கமென்பதும், அப்போது அவர்கள் நொச்சி மாலையைச் சூடிச்செல்வர் என்பதும் நற்றிணைச் செய்யுளொன்றால் அறியலாம்”2 என்று வெ.வரதராசன் கூறுகிறார்.

Continue Reading →

ஆய்வு: செவ்வரளிமாலை கேட்டு முத்தாரம்மனை பேசவைக்கும் சு. செல்வகுமாரனின் கவிதைகள்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சு.செல்வகுமாரன் குமரிமாவட்டம் தெக்குறிச்சியில் பிறந்தவர். (03-06-1974) கடந்த பன்னீரெண்டு ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். தற்போது அரசின் பணியிடமாற்றத்தில் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் குறித்து காத்திரமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த பத்து வருடங்களாக தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழம், புலம்பெயர் படைப்பிலக்கியங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருபவர். ஈழத்துப் படைப்புலகம் வலிகளை எழுதும் கவிதை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 2015, ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு, காவ்யா – 2008, சமகால நாவல்களில் புனைவின் அரசியல் என்.சி.பி.எச் – 2015, அ.முத்துலிங்கத்தின் புனைவு உலகம், கலைஞன் – 2015, ஆகியன இவரது நூல்களில் முக்கியமானவையாகும். திணை, மற்றும் பூவரசி சிற்றிதழ்களின் துணை ஆசிரியராக விளங்குபவர். மேலும் பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக, (காவ்யா – 2012), உலுப்புக்காரனின் திசை,  (பூவரசி – 2016) எனும் இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதை எழுத்து குறித்து விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொண்ணூறுகளுக்கு பிறகு தமிழ் கவிதை பண்பாட்டு வேர்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்தது. குறிப்பாக உரைநடை மொழிக்கு உயிர் கிடைத்திருந்தது. இக் காலகட்டத்தில் தமிழ் கவிதை மொழி மக்கள் மொழியாகியது. கருத்தியல் ரீதியாகவும் புதிய பாடுபொருள்களை சுமந்து வரத் தொடங்கியது. அந்த வகையில் தமிழ் பண்பாட்டின் வேர்களை சுமந்து வெளிப்பட்ட ஒரு மண்ணின் வாழ்க்கை சு.செல்வகுமாரனின் கவிதைகளில் வெளிப்பட்டதை நாம் காண முடியும். அவரின் பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக என்ற கவிதை புத்தகம் வெளிக்காட்டி இருக்கின்ற உலகம் பால்ய கால ஓர்மைகளின் வழி பயணத்தை தொடங்கி தாத்தா, அப்பா, அம்மா, தங்கம்மா கிழவி என இப்படி உறவுகளுக்குள்ளும், பூவரசம்பூ, பனங்கிழங்கின் பீலி, நொண்டங்காய், புன்னை மரக்கிளையில் ஊஞ்சல், நாருப்பெட்டி, தென்னம்பூ, வேட்டாளி, மரைக்காலில் நெல்மணி, இப்படி வாழ்க்கையின் பண்பாட்டின் பகுதிகளிலிருந்தும் வாழ்ந்த வாழ்க்கையின் பக்கங்களை சுமந்து கொண்டு கவிதை வருவதை நாம் காண முடிகின்றது.

“கொண்டையான் குளத்தில் மேலகரையில்
வளர்ந்து நின்ற வேப்பமரத்தில் ஏறி
உடலை சுருட்டி மூன்று சுற்றுச்சுற்றி
குளத்தில் குதித்து மூழ்கி
படிக்கரையில் தலையை மேலெழுப்பியதும்
நீச்சலடித்து தொட்டு விளையாடியதும்
பறித்த செந்தாமரைகளில் பெரிய மொட்டினை
சரஸ்வதி படத்தில் வைத்து படிப்பைக் கேட்டதும்
சங்கிலி பாசியாய் நிரம்பிக் கிடக்கின்றது”1

Continue Reading →

தோழர் வேலனின் ‘தேசிய இயக்கம் துயிலெழல்’ மற்றும் ‘தேசிய இயக்கங்களின் காலம்’ ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்…. வ.ந.கிரிதரன் –

தோழர் வேலனின் 'தேசிய்  இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -தோழர் வேலனின் ‘தேசிய  இயக்கம் துயிலெழல்’ மற்றும் ‘தேசிய இயக்கங்களின் காலம்’ ஆகிய நூல்களின் வெளியீடு கடந்த ஞாயிறன்று (3.12.2017) ‘டொராண்டோ’வில் நடைபெற்றபோது நான் ஆற்றிய சிற்றுரையினை ஒரு பதிவுக்காக இங்கு பதிவிடுகின்றேன்.  வ.ந.கிரிதரன் –


தோழர் வேலனை எனக்கு முகநூல் வழியாகத்தான் அறிமுகம். அவரது இயற்பெயர் கூட இதுவரையில் நான் அறிந்ததில்லை. ஆனால் அவரது மார்க்சியப்பார்வை பற்றி அவரது இணைய எழுத்துகளினூடு, நூல்களின் வாயிலாக அறிந்திருக்கின்றேன்.. இன்று இங்கு நான் அவரது இந்நிகழ்வில் வெளியிட்டப்படவுள்ள நூல்கள் இரண்டைப்பற்றிச் என் நோக்கைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் பல அவரது வலைப்பதிவிலுள்ள கட்டுரைகளே. இக்கட்டுரைகளில் அவர் தேசம், தேசியம், ஈழத்தமிழர்களின் தேசியப்போராட்டம், பின் நவீனத்துமும் , மார்க்சியமும், தேசிய விடுதலைப்போராட்டமும் போன்ற பல விடயங்களைப்பற்றிய தனது உறுதியான பார்வையினைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் அவரது உறுதியான் பார்வை தெளிவானதா இல்லையா என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். அதற்கு முன்னர் இத்தொகுதிக் கட்டுரைகளைப்பொறுத்தவரையில் முக்கியமான குறைபாடுகளாக நான் கருதுவது: இலக்கணப்பிழைகள். இலக்கணப்பிழைகள் என்னும்போது சில பிழைகள் வாசிப்பின் புரிதலைத் தடுப்பதில்லை. உதாரணமாக எழுவாய்க்குரிய பயனிலை சரியாக அமையாது போவதுமோரிலக்கணப்பிழை. ஆனால் அப்பிழைகள் புரிதலைத் தடுப்பதில்லை. மாறாக முடிவற்றுத் தொங்கும் வாக்கிய அமைப்புகள், குழப்பமான சொற்தொடர்கள் ஆகியன வாசகர்களின் புரிதலுக்குச் சவாலாக இருப்பவை. அவ்விதமானவற்றை வாசிப்பின்போது அவதானித்தேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்களில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களே சாதாரண வாசகர்களுக்குப் புரியாதவை. இந்நிலையில் இவ்விதமான இலக்கணத்தவறுகள் அவர்கள்தம் புரிதல்களைச் சிரமத்துக்குள்ளாக்குகின்றன. இத்தவறுகள் எதிர்காலப்பதிப்புகளில் களையப்படுதல் அவசியம்.

அடுத்த முக்கிய குறைபாடாக நான் கருதுவது இந்நூல் பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். மார்க்சியப்புரிதல்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட நூல்கள் அல்ல இவை.  இந்நிலையில் இவற்றில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களுக்குரிய விளக்கங்கள் நூலின் இறுதியில் இடம் பெற்றிருந்தால் வாசகர்களுக்கு மிகுந்த பயனைத் தந்திருக்கும் எனக்கருதுகின்றேன். உதாரணமாக திருத்தல் வாதம், பாகுபாட்டுச் சிந்தனைகள், தாராளவாதம், தரகு வர்க்கம் போன்ற பல சொற்கள் இந் நூலிலுள்ள கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அவை பற்றிய விளக்கங்கள் சாதாரண வாசகர்கள் பலருக்கு மிகுந்த உதவியாகவிருந்திருக்கும். இதுவும் என் நிலைப்பாடு.

Continue Reading →

தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் கவிதைகள்!

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -1. நினைக்கின்றோம் இதுநாள்!

கார்முகிலின் கார்த்திகையிற் கஞ்சநிமிர் வஞ்சிநிலம்
கற்பெனவே பெற்ற குரலாய்
போர்அனைய வெஞ்சுருளில் வீழ்ந்துவி;டச் சொந்தமொடு
பொங்கிவருந் தீயின் அலையாய்
ஊர்உலகம் பார்த்துறவே ஓலமுடன் வீழ்சடலம்
உள்ளதனை உப்பும் நினைவாய்
மார்அடித்து வாதையுற மன்றுருக யாம்பதறி
வைத்துஅழு கின்றோம் அறிவீர்!

நீள்மடியில் ஓர்கணமும் நெஞ்சுருகும் வஞ்சநிலை
நீதியெனுஞ் சார்பு நிலையில்
கோள்பரவ நின்றதி(ல்)லை கூடியொரு வாழ்வுடனார்
கொஞ்சுமுல காற்றும் படியே
தாள்பரவ வள்ளுவனார் சாற்றிவிடும் மன்நெறியில்
தங்கநிறை கொண்ட இனமாய்
ஏழ்உலகும் வார்ப்பெடுத்து இன்னுருவாய் நீதிநெறி
இட்டுவலங் கொண்டார் இதுநாள்!

ஏறியுயிர் குண்டழுத்தி ஏகமுடன் போர்வழுதி
இன்னுயிரும் போன தறிவோம்
காறியுமிழ் கின்றதொரு கஞ்சலெனப் போயகலாக்
கண்ணியமுங் கண்டு மகிழ்ந்தோம்!
ஊறுசெய நின்றதிலை உண்மையெனப் போற்றுமொரு
உள்ளஇனங் காண விளைந்தோம்!
சாறுமொரு வாகைநிலச் சத்தியமும் வழுவாத
சாகரமாய் எல்லவரும் வாழ நினைத்தோம்!

Continue Reading →

‘பதிவுக’ளில் அன்று: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கட்டுரைகள் எட்டு!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  ( லண்டன் )

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


1. திருகோணமலையில் இராணுவம் செய்த அதர்மக் கொலைகள்.

வாழ வேண்டிய ஐந்து இளம் உயிர்கள் 2.01.06ல் திருகோணமலையில் இலங்கை இராணுவத்தால் பலியெடுக்கப் பட்டுவிட்டன.சண்முகராசா கஜேந்திரன்,லோகிதராஜா றோஹன்,தங்கத்துரை சிவானந்தராசா,யோகராசா ஹேமச்சந்திரன்,மனோஹரன் ராஜிகர் என்ற இளம் குருத்துக்கள், எத்தனையோ கனவுகளைத்தாங்கிக் கொண்டு எதிர்காலத்தை எதிர்நோக்கியவர்கள்,இலங்கை இராணுவத்தின் அதர்மத்தால் அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களை இழந்து துயர்படும் தாய் தந்தையர்கள் , உற்றார் உறவினர், ஊரார், ஆசிரியர்கள், ஒன்றாய்ப் படித்த சினேகிதர்களுக்கு எனது மனம் கனிந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்புக்கு எனது அனுதாப வார்த்தைகள் எள்ளளவும் ஒவ்வாது.

நானும் ஒரு தாய். எங்களை மண்ணுக்குத் தியாகம் கொடுக்கவேண்டிய மகன்களை, இந்த இளம் வயதில் நாங்களே மண்ணுக்குத் தானம் செய்வதின் கொடுமையைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது. எங்கள் வயிற்றில் தாங்கி,எங்கள் வாழ்க்கையையே அவர்களுக்குத் தியாகம் செய்த தாயின் துயரை வெற்று வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது.  பால் கொடுத்து, நிலவுகாட்டி உணவு கொடுத்து, எனது மகன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தனது சமுதாயத்திற்கும் எவ்வளவோ நன்மை செய்வான் என்ற ஒவ்வொரு தாயின் கற்பனையையும் இப்படி அநியாயமான கொலைகளால் அழித்த இராணுவதையும் அந்த இராணுவத்தை தூண்டிவிடும் இலங்கை அரசாங்கத்தையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தற்போது, தமிழ் மக்களின் உயிர்கள் வெறும் ஒரு சிறு பூச்சியின் உயிரைவிட மலிவாக, அற்பமாக அழிக்கப் பாடு வருகின்றன. இதைத் தடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் எத்தனை தமிழர்கள் இலங்கையில் வாழப்போகிறார்கள்?

இலங்கைக் கடற்படைக்குக் குண்டு எறியப் போனபோது இந்த இளைஞர்கள் கடற்படையினரின் தாக்குதலால் இறந்ததது என்று ஒரு செய்தியும் , கடற்கரையில் காற்றாட நின்ற இளைஞர்களைக் கடற் படை சுட்டுத் தள்ளியதாக இன்னொரு செய்தியும் சொல்கிறது. அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதைபற்றிய அபிப்பிராய பேதங்களும் அதனாற் சிலரடையப் போகும் அரசியல் இலாபங்களையும் பேசுவதை விட, இதச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நீதிக்கு முன் நிறுத்துவது மனித உரிமைக்குப் போராடும் ஒவ்வொருத்தரின் கடமையாகும்.

Continue Reading →