முன்னுரை:
மின்னல் வேக விரைவு உலகம் தனது அவசர நிலைக்கு ஏற்ப இலக்கியங்களையும் வடிவமைத்துக் கொள்கிறது. உலகின் புதியசூழலுக்கு ஏற்ப கவிதைகள் தனது வடிவத்தின் அளவைச் சுருக்கிக் கொண்டுக் கருத்தைச் செரிவாக்கிக் கொள்கின்றன. இந்த விதத்தில் ஹைக்கூ – சென்ரியூ -குக்கூ என்னும் கவிதை வடிவங்கள் தற்காலச் சூழலில் தோன்றிய வடிவங்களாகும். அந்த வகையில் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. ஆய்வு எல்லை கருதி அவரது
குழந்தைகள் நிறைந்த வீடு என்னும் கவிதைநூல் மட்டும் இங்கு உட்படுத்தப்படுகிறது.
கவிஞர்.நா. முத்துக்குமார் வாழ்க்கைக்குறிப்பு:
கவிஞர் நா.முத்துக்குமார் 1975-ல் பிறந்தார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் ஆகும். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் குறித்து முனைவர் பட்டமும் பெற்றார்.
தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், பாலகாண்டம்; கண் பேசும் வார்த்தைகள், குழந்தைகள் நிறைந்த வீடு, கிராமம், நகரம் மாநகரம் போன்ற பலநூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு மலையாளம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப்பாடல்களை எழுதி மூன்று முறை ஃபிலிம்பேர் விருது, தேசிய விருது பெற்றார்.
ஹைக்கூ கவிதைகள் :
”தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில்வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.” 1 ஐக்கூ கவிதைகளை எழுதுபவர்கள் தமிழ்க் கவிதை வரலாற்றில் வானம்பாடி இயக்கம் போல அதி தீவிரமாக இக்கவிதை வடிவம் வளர இயங்குகின்றனர். ஐக்கூக்கள் சிற்றிதழ்கள் மூலமாகவும் இணைய இதழ்கள் மூலமாகவும் ஐக்கூத் தொகுப்புகள் மூலமாகவும் மிகப்பெரும் வளர்ச்சியைத் தமிழில் அடைந்திருக்கின்றன.
”ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது. துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது” 2 என .ஐக்கூவின் தன்மைகள் விளக்கப்படுகின்றன. இவ்வாறான இக்கவிதை வடிவில் தமிழில் பலரால் எடுத்துக் காட்டப் பெற்ற கவிதைகளை எழுதியவர் கவிஞர் நா.முத்துக்குமார் ஆவார்.
கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்:
பயணங்களின் ஜன்னல்களே கவிஞர் ஹைக்கூ வானத்தை வர்ணம் மிக்கதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை அவர் டெல்லியில் நடக்கும் உலகத் திரைப்பட விழாவிற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணித்து கொண்டிருந்த போது ஜனவரி மாத வடஇந்தியாவின் பருவநிலை எலும்பை உருக்கும் குளிராக கண்முன் விரிகிறது. பனி, பனி எங்கு பார்த்தாலும் பனி, பனியின் வெண் சிறகுகள் ரயிலை மூடுகின்றன. கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பனி அமாந்திருக்கிறது.