இயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலையும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.
கிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ஷஷகடல் முற்றம்|| கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.
விடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச்சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.
அக்கறையின் வெகு தொலைவில்
சிறு புள்ளியாய் தெரிகிறது
விடியல்
பேயுலவும் கரிய இரவாய்
இருண்டு கிடக்கிறது
மா கடல்