ஒரு கல்வெட்டைப் படித்து அதன் பாடத்திற்கு துலக்கமான விளக்கம் தந்து உலகிற்கு வெளிக் கொணர்வோர் மிகக்குறைவு. இப்படி வெளிவந்த கல்வெட்டு பாடத்தையும் விளக்கத்தையும் நம்பித்தான் வரலாற்று ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் தமது எழுத்தை அமைகின்றனர். இத்தகையோர் எழுத்துகளைத் தான் பல ஆயிரம் மக்கள் படிக்கின்றனர். கல்வெட்டு வாசிப்பிலும் விளக்கத்திலும் தவறு இருந்தால் அதை பின்பற்றி வரும் எழுத்தாளர் எழுத்து அனைத்தும் தவறாகவே இருக்கும். மக்களுக்கு தவறான செய்தியே சென்று சேரும்.
அயல் நாடுகளில் தனியார் தொல்லியல் முயற்சி மேற்கொண்டு அதன் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை சிறப்பாக வெளியிடுகின்றனர். இந்தியாவில் அவ்வாறான முயற்சி குறைவாகவே உள்ளது. ஆதலால் நடுவணரசு தொல்லியல் துறையும் (ASI), மாநில அரசுகளின் தொல்லியல் துறையும் தான் அரசு மானியத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுநூல்களை வெளியிடுகின்றன.
கீழ்க்காணும் கல்வெட்டு பல்லவ மன்னன் கொடுத்த கொடை பற்றியது. இதில் உள்ள குழப்பம் தீர்க்க வேண்டியுள்ளது. நான் சொல்லும் கருத்தே சரி என்று சொல்ல முடியாது. மாற்று கருத்தும் ஏற்புடையதே.
ஸ்வஸ்தி ஸ்ரீ [கோவி] / [ராஜ]கேஸரி பந்மக்கு யாண் / டு 15 ஆவது அண்டாட்டு / குற்றத்து நீங்(க்)கிய — — / – – – த் திருப்புறம்(ப்) பியத்து ப / [ட்டா]லகர்க்கு பல்லவப் பேரரையர் / வீர[ஸி]காமணிப் பல்லவரை /- – – சந்த்ராதித்தவ(ற்) லெரிக்க / வைத்த நொந்தா விளக்கு 1 ஒ[ந்] / றி[னி]க்கு நிச[த]மு[ம்] உழக்கு னெ / [ய்]க்கு வைத்த சாவா மூவாப் / பேராடு 90 தொண்ணூ / று பந்மாஹேஸ்வர ரக்ஷை
விளக்கம்: கோவிசய என்பதன் குறுக்கமே கோவி என்பது. கோவி ராசகேசரி பன்மர் என்பது முதலாம் ஆதித்ய சோழனை குறிக்கின்றது என்றால் அந்த வகையில் இக்கல்வெட்டு அவனது 15 ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ளது என்றால் அதன் காலம் கி.பி. 885 என்று ஆகிறது. ஆதித்ய சோழன் அபராஜித்தனை கி.பி. 897 ல் போரிட்டு கொல்லும் வரை அபராஜித்த பல்லவன் தான் வேந்தன் ஆதித்ய சோழன் அவனுக்கு அடங்கிய மன்னன். கல்வெட்டு மரபுப்படி வேந்தன் பெயரும் ஆட்சி ஆண்டும் தான் முதலில் தொடங்க வேண்டும். மேலுள்ள கல்வெட்டு கோவி ராசகேசரி பன்மர் என்று குறித்துவிட்டு பல்லவனை பேரரையர் (மன்னன்) என்கிறது. இதாவது, சோழனுக்கு பல்லவன் கட்டுப்பட்டவன் என்பது போல உள்ளது.