“அன்பு நண்பர்களே, உங்களிடம் மன்னிப்பைக் கோருகின்றோம்””

எழுத்தாளரும், ‘லக்பிமா’ பத்திரிகையில் இலக்கியப்பகுதிக்கான ஆசிரியராகவுமிருக்கும் காத்யானா அமரசிங்க ( .Kathyana Amarasinghe )1983 இனக்கலவரத்தையொட்டி அவரது நண்பர்கள் சிலருடன் இணைந்து உருவாக்கிய இப்போஸ்டரை அனுப்பியிருந்தார். இதிலுள்ள வாசகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவ்வாசகங்கள் இவைதாம்: “கருப்பு ஜூலை – 35 ஆண்டுகள். அன்பு நண்பர்களே, உங்களிடம் மன்னிப்பைக் கோருகின்றோம்”

முதல் தடவையாகச் சிங்கள மக்களிடமிருந்து இவ்வாசகங்களைக் கேட்கின்றேன். இவை முக்கியமான வாசகங்கள். 1983 இனக்கலவரத்துக்காக, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அழிவுகளுக்காகச் சிங்கள மக்கள் சார்பில் இவர்கள் மன்னிப்புக் கேட்கின்றார்கள். உண்மையில் இலங்கையின் அதிபர் ஓருவர் என்று இவ்விதம் சிங்கள மக்கள் சார்பில் தமிழ் மக்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற அநீதிகளுக்காக மன்னிப்புக் கோருகின்றாரே அதுவே இந்நாட்டு மக்களுக்கிடையிலான உண்மையான நல்லெண்ணத்துக்கும், புரிந்துணர்வுகளுக்கும் வழி வகுக்கும். அதற்கு முதற்படியாகவே இப்போஸ்டரையும் , வாசகங்களையும் பார்க்கின்றேன். அத்துடன் அடையாளம் காணப்பட்ட , இக்கலவரங்களில் குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். சட்டமானது அனைவருக்கும் பொது என்னும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

Continue Reading →

83 ‘ஜூலை’ இலங்கை இனக்கலவர நினைவுகள்…..

ஓவியர் புகழேந்தியின் 1983 பற்றிய ஓவியம்சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து அன்று தமிழக முதல்வராகவிருந்த எம்ஜிஆர் கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தார். இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட ‘சீனியர்’. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

பின்னர் இறுதியாக சிதம்பரம் கப்பல் தமிழக அரசால் அனுப்பப்பட்டபோது , இரு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், நானும் யாழ்ப்பாணம் செல்வதற்கு முடிவு செய்தேன். என் வாழ்க்கையில் கட்டுமரங்களில் பயணித்திருக்கின்றேன்; படகுகளில் பயணித்திருக்கின்றேன்; ஆனால் கப்பலொன்றில் பயணித்தது அதுவே முதற் தடவை. கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தைச் சுற்றிச் சென்ற கப்பலின் பணியாளர்களெல்லாரும் அகதிகளென்று மிகவும் அன்புடன் , பண்புடன் உதவியாகவிருந்தார்கள். கொழும்பில் கப்பலில் ஏறும்பொழுதும் வரிசையில் நின்று ஒவ்வொருவர் உடமைகளையும் வாங்கியுதவி ஏற்றினார்கள். நேற்றுத்தான் நடந்ததுபோல் இன்றும் நினைவிலிருக்கின்றது.

1977கலவரம் நடைபெற்று மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரி அகதி முகாமுக்கு வந்துகொண்டிருந்தவேளையில் நண்பர்களுடன் மாலை நேரங்களில் சென்று வரும் அகதிகளுடன் அளவளாவி அவர்கள் கதைகளைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதுண்டு. ஆனால் நானே என் சொந்த மண்ணில் அகதியாக கப்பலில் மீண்டும் வருவேனென்று அச்சமயத்தில் எண்ணியிருக்கவில்லை.

அகதிகளாக முகாமில் இருந்த சமயத்தில் என்னுடன் பணி நகர அதிகார சபையில் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் சிலர் விடயமறிந்து எங்களை வந்து பார்த்தார்கள். தங்களுடன் வந்து பாதுகாப்புடன் தங்கலாமென்று அழைத்தார்கள். அப்போதிருந்த சூழலில் எம்மால் அவர்களுக்கும் பிரச்சினைகள் வரலாம்; நிலவிய சூழலில் எமக்கும் பாதுகாப்பில்லை. எனவே அகதிகள் முகாமில்இருப்பதே உசிதமாகப்பட்டது. அங்கேயே தங்கி விட்டோம். அவர்களின் பெயர்களைக் கூட மறந்து விட்டேன். ஆனால் பணியாற்றிய காலத்தில் எம்முடன் நன்கு அன்புடன் பழகிய நண்பர்கள் அவர்கள். அவ்விதம் அச்சூழலில் எம்மை வந்து பார்த்ததும் அழைத்ததும் முக்கிய விடயமாக அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி தோன்றுகின்றது.

அக்கலவரம் எனக்கு நன்கு தெரிந்த சிலரைப் பலி வாங்கியிருக்கின்றது. அவர்களில் பொறியியலாளர் ராஜாராம் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்து முன்பாக இருந்த தெருவொன்றில் சிங்கள் வீடோன்றில் வாடகைக்கு நண்பர்களுடன் வசித்தபோது எம்முடன் வசித்தவர்களிலொருவர். மலையகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு காதலி இருந்தார்; ஆசிரியை என்றும், பெயர் ராஜேஸ்வரி என்றும் ராஜாராம் கூறியதாக நினைவு. நீண்ட காலமாகக் காத்திருந்து ராஜாராம் படிப்பை முடிந்து பணி புரிந்து கொண்டிருந்தபோதுதான் திருமணம் செய்தார். பல்கலைக்கழகப்படிப்பு முடிந்து பணி புரிந்துகொண்டிருந்த சமயத்தில் கலவரத்துக்குச் சில மாதங்களின் முன்பே அவரை வழியில் இ.போ.ச பஸ்ஸொன்றில் சந்தித்து உரையாடியிருந்தேன். யாருக்குமே தீங்கு செய்ய மனம் வராத அப்பாவி அவர். நன்கு சிங்களம் பேசக்கூடியவர். 83 கலவரத்தில் களுபோவிலை ஆஸ்பத்திரியில் ஏற்கனவே காயமுற்றிருந்து அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காடையர்கள் சென்று கொலை செய்ததாகப் பின்னர் அறிந்து துயருற்றேன்.

Continue Reading →

கவிஞர் பா.சத்தியசீலன்: நாம் மறந்துவிடக்கூடாத ஒரு குழந்தைக் கவிஞன்

 - என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -காலம் கழியும் வேகத்தில் நாம் பலவற்றையும் இலகுவில் மறந்து கடந்துசென்று விடுகின்றோம். திடீரென்று ஒருநாள் ஒரு சிறு பொறி முன்னர் கவனிக்காது கடந்துசென்றுவிட்ட  ஒரு தனி மனிதஉறவை மீண்டும் எம்மனதில்; நினைவுத்தட்டின் மேற்பரப்புக்குக் கொண்டுவந்து விடுகின்றது.

என்னுள் முகிழ்ந்த கவிஞர் ‘பாவலவன்” பா.சத்தியசீலனின் நினைவும் அவ்வாறானதே. அண்மையில் லண்டனில் ‘புத்தகப்பிரியர்” ஒருவரின் வீட்டு புத்தக அலுமாரியைக் குடைந்துகொண்டிருந்தேன். அதில் இருந்த தடித்த தமிழ் நூலொன்றை எடுத்து விரித்தபோது அதனுள் சிக்கியிருந்த மிகப்பழைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதமொன்று பொத்தென நிலத்தில் வீழ்ந்தது. வாழ்த்து மட்டையின் தடிப்பு அதனை விரிக்கத் தூண்டியது. அது ஒரு கையடக்கக் கவிதை நூல். அதன் தலைப்பு ‘நத்தார் வாழ்த்து”. அந்தச் சிறிய பிரசுரம் பா.சத்தியசீலனின் சிறிய கவிதைநூல். முன்னாளில் ‘மில்க்வைற்” கனகராசா அவர்கள் ஏராளமான இலவசப் பிரசுரங்களை அமரர் க.சி.குலரத்தினம் அவர்களின் துணையோடு மில்க்வைற் விளம்பரங்களாக வெளியிட்டு விநியோகித்ததை எம்மால் மறக்கமுடியாது. பாவலவன் சத்தியசீலனின் ‘நத்தார் வாழ்த்து”க் கவிதையும் அப்படியாதொரு சிறு கவிதைநூல் தான். நத்தார் வாழ்த்துக் கவிதையை வாழ்த்து அட்டைபோன்று வடிவமைத்து சிறு பிரசுரமாக அந்நாட்களில் வெளியிட்டிருந்தார். அந்தச் சிறு பிரசுரமே இலக்கிய நண்பர் பா.சத்தியசீலன் பற்றிய மனப்பதிவுகளை இன்று இரைமீட்க வைத்துள்ளது.

பா.சத்தியசீலன் தனது நத்தார் வாழ்த்து கவிதைப் பிரசுரத்துடன் 1970களின் இறுதிக்கட்டத்தில் ஒருநாள் என்னை வந்து புங்குடுதீவு சர்வோதய நூலகத்தில் சந்தித்தார். வெறும் அட்டைவழி வாழ்த்து மரபை உடைத்து இப்படியான  தூய தமிழ் வாழ்த்து நூல்களை வாங்கி எமது சமூகம் பரிமாறிக்கொண்டால் என்ன என்ற பெரிய புரட்சிகரமான சிந்தனையுடன் தான் அவர் அன்று என்னை அணுகியிருந்தார். அவரது கைகளில் அவர் எழுதிய மேலும் பல நூல்கள். அனைத்தும் சிறு பக்க எணணிக்கையுடன் கூடியவை. அதனைத் தொடர்ந்து பொங்கல் வாழ்த்தையும் இவ்வாறு வெளியிட அவர் முனைந்ததாக எனக்குள் ஒரு நினைவு.

பா.சத்தியசீலனின் பூர்வீகம் அல்லைப்பிட்டி. யாழ்ப்பாணத் தீவுக்கூட்டத்தின் நுழைவாயில் கிராமம் அது. அவர் மணம்புரிந்தது நவாலியில். ‘கலைவண்ணம்” என்பது அவரது நவாலி இல்லத்தின் பெயர். மானிப்பாய், நவாலி தெற்கில் சின்னப்பா வீதியில் அவரது புகுந்த வீடு அமைந்திருந்ததாக நினைவு. நான் ஆனைக்கோட்டை- அயல் கிராமத்தைத் தாய்வழிப் பூர்வீகமாகக் கொண்டதாலும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அடிக்கடி நவாலியூடாகப்  பயணிப்பதாலும் 70களின் இறுதிப்பகுதியில் சத்தியசீலன் எனக்குப் பரிச்சயமான ஒரு இலக்கியவாதியாக மாறிவிட்டார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 290: வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையின் பரிணாம வரலாறு பற்றிய சில தகவல்களும், எண்ணங்களும்!

 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி '1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.‘வெற்றிமணி’ சஞ்சிகையின் 22.2.1955 இதழ் எம்.எம்.பாரிஸ் ((M.M.Faries)  என்பவரை ஆசிரியராகக்கொண்டு நாவலப்பிட்டி மிட்லண்ட் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அவராலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதில் மலர் 1, இதழ் 1 என்றிருப்பதால் இதுவே அவர் ஆசிரியராகவிருந்து , வெளியிட்ட முதலாவது இதழென்பது தெரிகின்றது. (ஆதாரம் – நூலகம் தளத்திலுள்ள வெற்றிமணி சஞ்சிகைகள்) 20-10-1955  இதழ் எம்.எம்.பாரிஸ் ஆசிரியராகவிருக்கின்றார். அச்சடிக்கப்பட்டது ஆனந்த, யாழ்ப்பாணத்தில்.

20.12.1955 இதழ் நாவலப்பிட்டி மிட்லண்ட அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால் ஆசிரியரின் பெயர் ஏ.கே.சாமி என்றுள்ளது. 22-2-1955 தொடக்கம் 21_11_1955 வரை வெளியான இதழ்களுக்கு ஆசிரியராகவிருந்தவர் எம்.எம்.பாரிஸ். 20-10-1955 இதழ் தவிர அவ்வருடத்தில் வெளியான ஏனைய இதழ்கள் அச்சடிக்கப்பட்டதும் மிட்லண்ட் அச்சகத்திலேயே.


வெற்றிமணி சஞ்சிகையின் முதலாம் ஆண்டு மலராக 14.1.1956 இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர் ஏ.கே.சாமி. இவ்விதழில் அட்டைப்படம் அழகாக வந்துள்ளதுடன், சஞ்சிகையின் வடிவமைப்பும் மாறியுள்ளதையும் காண முடிகின்றது. அட்டையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பொங்கல் கவிதையும் வெளியாகியுள்ளது. முதலாவது ஆண்டு மலர் பொங்கல் மலராக வெளியாகியுள்ளது. 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி ‘1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.

வெற்றிமணி சஞ்சிகையின் 1.9.1956 இதழில் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியொன்று முன் பக்கத்தில் வெளியாகியுள்ளது. “தமிழ் பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்தை  நிர்ணயிக்கும் தமிழரசுக் கட்சியின் சரித்திரப்பிரசித்தி பெற்ற மாநாடு திருகோணமலையில் 18,19-8-1956 இல் நடைபெற்றது.  தமிழ்பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்திற்குச் செல்லும் “திருமலை யாத்திரை” என்னும் அறிவிப்புடன் நெடுங்கவிதையொன்றின் முதற்பகுதி  , நவாலியூர் பண்டிதர் சோ.இளமுருகனார் எழுதியது, வெளியாகியுள்ளது. கவிதை “திருமலைக்குச் செல்லுவோம். சிறுமை அடிமை வெல்லுவோம்” என்று ஆரம்பமாகியுள்ளது.

இவ்விதழில் “எங்கள் ஊர் வவுனியா” என்னுமொரு கட்டுரையினை மாணவர் மன்ற உறுப்பினரான செல்வி.சே.சிவநேசமணி என்னும் மாணவி எழுதியிருக்கின்றார். சுருக்கமான , சுவையான கட்டுரை . அதில் அவர் வன்னிக்கு ‘அடங்காப்பற்று’ என்னும் காரணம் வந்த காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார். இதுவரை நான் கேட்காத விளக்கம். தர்க்கபூர்வமானது. அதனை இங்கு தருகின்றேன்: “வன்னிநகர் “அடங்காப்பற்று” எனும் மங்காப்பெயர் கொண்டது. இப்பெயர் பெறுவதற்குக் காரணம் அவர்கள் பேராசையன்று. முற்காலத்தில் பல்வகைச்செல்வங்களும் நிறைந்து விளங்கிய வன்னியிலே உள்ள மக்கள் ஈதலையே தலை சிறந்த அறமாகக் கொண்டிருந்தனர். இரப்போர்க்கு இல்லையென்னாது ஈந்தனர். ஈகையின்மேல் அவர்கள் கொண்டிருந்த அடங்காப்பற்றினாலேயே அவர்களது நாடாகிய வன்னிக்கு ‘அடங்காப்பற்று’ எனப்பெயர் உண்டாகியதென்று பலர் கூறுவர்”.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 289: மறக்க முடியாத ‘வெற்றிமணி’

வாசிப்பும், யோசிப்பும் 289: மறக்க முடியாத 'வெற்றிமணி'இலங்கையில் வெளிவந்த ‘வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகைக்கு முக்கியமானதோர் இடம் இலங்கைத் தமிழ் இலக்கியத்திலுண்டு. தமிழகத்தில் வெளியான ‘கண்ணன்’ சிறுவர் இதழ் எவ்விதம் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதோ அவ்விதமே ‘வெற்றிமணி’ சஞ்சிகையும் பலரை உருவாக்கியுள்ளது. வெற்றிமணியின் ‘பாலர் பக்கத்தில்’ இளம் எழுத்தாளர்கள் பலர் தமது ஆரம்பகாலப்படைப்புகளை (கட்டுரை, சிறுகதை, விமர்சனம், நாடகம் , உருவகக் கதை போன்ற படைப்புகளை) எழுதியுள்ளார்கள். கிழக்கு மாகாணம், மலையகத்திலிருந்தெல்லாம் இளம் எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளார்கள். முஸ்லீம் இளம் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் பலவற்றை ‘வெற்றிமணி’ இதழ் தாங்கி வெளியாகியுள்ளது. ‘கவிதை’ அரங்கம்’ பகுதியிலும் பலர் இவ்விதமே எழுதியுள்ளார்கள். இலங்கையின் பிரபல எழுத்தாளர்களான திக்குவல்லை கமல், காரை செ.சுந்தரம்பிள்ளை, சாரதா, கவிஞர் புதுவை இரத்தினதுரை, கோப்பாய் சிவம் எனப்பலர் ‘வெற்றிமணி’ சஞ்சிகையில் சிறுவர் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஏழாம் வகுப்பு மாணவனான எனது குட்டிக்கதையொன்றும், பொங்கல் பற்றிய கட்டுரையொன்றும் ‘வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. கவிஞர் வி.கந்தவனம், இரசிகமனி கனக செந்திநாதன் , த. அரியரத்தினம், ஏ.ரி.பொன்னுத்துரை, மு.க.சுப்பிரமணியம் போன்றொர் தொடர்ச்சியாக ‘வெற்றிமணி’யில் எழுதி வந்துள்ளார்கள். குறமகளின் சிறுவர் சிறுகதையொன்றினையும் ஓரிதழில் காண முடிந்தது.

அவ்வயதில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைகளில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லுகையிலெல்லாம் யாழ் நகரிலிலிருந்த ‘அன்பு புத்தகசாலை’க்குச் சென்று ‘வெற்றிமணி’யை வாங்குவதுண்டு. ‘அன்பு புத்தகசாலை’ எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணரான எழுத்தாளர் ‘புதுமைலோலன்’ அவர்களுடையது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞரொருவர் எப்பொழுதும் சஞ்சிகைகள், நூல்கள் வாங்க அங்கு செல்லும்போதெல்லாம் அன்புடன் வரவேற்றுதவுவார். பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் என் கல்வி தொடர்ந்த என் பதின்ம வயதுக் காலகட்டத்திலும் அங்கு செல்வதுண்டு. அங்குதான் செங்கையாழியானின் முதலாவது நாவலான ‘நந்திக்கடல்’ சரித்திர நாவலினை வாங்கியதுண்டு. மார்க்சிம்கார்க்கியின் புகழ்பெற்ற நாவலான ‘தாய்’ (தொ.மு.சி.ரகுநாதன் மொழிபெயர்த்தது) நாவலை அவ்விளைஞரே எனக்கு வழங்கியவர்.

அறிஞர் அண்ணாவின் மறைவின் போது அவரது புகைப்படத்தை அட்டையிலிட்டு ‘வெற்றிமணி’ சஞ்சிகை அஞ்சலி செய்ததையும் அறிய முடிகின்றது.

‘வெற்றிமணி டாணெனவே விண்முட்ட ஒலித்திடுவாய்.
நற்றமிழாம் எங்கள்மொழி நலமுற ஒலித்திடுவாய்’

என்னும் தாரகமந்திரத்துடன், குரும்பசிட்டி மு.க சுப்பிரமணியத்தைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘வெற்றிமணி’ சஞ்சிகையின் பழைய இதழ்கள் என்னை அக்காலத்துக்கே இழுத்துச் சென்றுவிட்டன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 288: கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான ‘On Films Seen’ என்னும் நூலை முன்வைத்துச் சில கருத்துகள்..! (1)

on films seen by K.S.Sivakumaran

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அண்மையில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்த இரு நூல்களை (‘திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்’, மற்றும் ‘On Films Seen ) ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன’த்தின் புகழ்பெற்ற முன்னாள் ஒலிபரப்பாளரும் , ஊடகவியலாளருமான திரு.வின்.என்.மதியழகன் மூலம் பெற்றுக்கொண்டேன். இத்தருணத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நண்பரொருவரிடம் கே.எஸ்.எஸ் அவர்கள் கொடுத்திருந்த நூல்கள் இன்னும் என் கைகளை வந்தடையவில்லையென்பதையும் நினைவு கூர்ந்திடத்தான் வேண்டும். நூல்களை அனுப்பிய கே.எஸ்.எஸ் அவர்களுக்கும் அவற்றை விரைவாகவே கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்த வி.என்.எம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கோடி.

இவ்விரு நூல்களில் ‘கொடகே பிறதர்ஸ்’ பதிப்பக வெளியீடாக வெளியான கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான ‘On Films Seen’ என்னும் நூலைப்பற்றிய எனது குறிப்புகளே இச்சிறுகட்டுரை. இந்நூலைப்பார்த்தபோது எனக்கு மிகுந்த பிரமிப்பே ஏற்பட்டது. இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அவர் அவ்வப்போது பார்த்து, களித்துச் சிந்தித்தவற்றை வைத்து எழுதப்பட்ட 58 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 1990 ஆம் ஆண்டுக்கு முன் எழுதிய கட்டுரைகள் கிடைக்காததால் , அதற்குப்பின்னர் எழுதிய கட்டுரைகளையே இந்நூல் அடக்கியுள்ளதென்பதை அவரது நூலுக்கான முன்னுரை புலப்படுத்தும். கூடவே அம்முன்னுரை இன்னுமொன்றையும் கூறும். அது இந்நூலுக்கான காரணம் பற்றியது. தன்னைப்போல் இவ்விதம் சர்வதேசத் திரைப்பட விழாக்களைக் கண்டு களிக்க  முடியாத சினிமாப்பிரியர்களுக்கு இவ்விதமான சர்வதேசத் திரைப்படங்கள் பற்றிய தகவல்களைத் தருவதே இந்நூலின் நோக்கம் என்று அவர் மேற்படி முன்னுரையில் குறிப்பிடுவார். உண்மையில் கடந்த பல தசாப்தங்களாகக் கலை, இலக்கியத்துறையில் அவர் தளராது இயங்கி வருவதற்குரிய காரணங்களிலொன்றல்லவா அது.

இந்நூலின் மிகவும் பிரதானமானதும் , முக்கியமானதுமான அத்தியாயம் முதலாவது அத்தியாயமாகவிருப்பது நூலின் சிறப்பான ஒழுங்கமைப்புக்கு  நல்லதோர் எடுத்துக்காட்டு. திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள எவரும் கலைத்துவம் மிக்க திரைப்படங்களைப் பார்த்து இரசிப்பதற்கு முக்கியமாகத் திரைப்படக்கலை பற்றிச் சிறிதளவாவது அறிந்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பார்க்கும் திரைப்படங்களை நன்கு அறிந்துகொள்ள இவ்விதமான ஆரம்ப அறிவு பயனுள்ளதாகவிருக்கும். இதனையுணர்ந்துதான் இந்நூலின் முதலாவது அத்தியாயத்துக்குத் ‘திரைப்படங்களை அறிந்துகொள்ளல்’ (Understanding the Films) என்று தலைப்பிட்டுள்ளார். இவ்வத்தியாயமெட்டுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஆறு கட்டுரைகளும், டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான இரண்டு கட்டுரைகளுமே அவை. ‘சினிமாவின் மொழியும், அமைப்பும்’, ‘திரைப்பட மொழி’, ‘பார்வையாளரொருவரின் பங்கு’ போன்ற பல விடயங்களில் சினிமா என்னும் ஊடகத்தைப்பற்றிய தனது கருத்துகளை முதல் ஆறு கட்டுரைகளில் வெளிப்படுத்துவார் கே.எஸ்.எஸ் அவர்கள். அடுத்த இரு கட்டுரைகளில் தமிழ்ப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான அமரர் பாலு மகேந்திராவின் சினிமா பற்றிய பார்வையினை நேர்காணல் மற்றும் கூற்றுகள் வாயிலாக வெளிப்படுத்துவார்.

Continue Reading →

‘ஒரு பொம்மையின் வீடு’ நாடகத்தை முன்வைத்து நடிப்பு – நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை

கென்றிக் இப்சென்தேவகாந்தன்மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 19வது அரங்காடல் சென்ற ஜுன் 30இல் ப்ளாட்டோ மார்க்கம் அரங்கில் இரண்டு காட்சிகளாக நிகழ்ந்து முடிந்திருக்கிறது. கடந்த காலங்களைப்போல் பல்துறைகளாகவும் பல வகைகளாகவும் மேடையேற்றப்பட்ட அரங்க நிகழ்வுகளாகவன்றி இம்முறை ஒற்றை நாடகத்தில் நிகழ்வினை அடக்கியிருக்கிறார்கள். முந்திய அரங்குகள் ஏதோ அளவிலும் வகையிலும் மண்ணின் அரசியல் சமூகப் பின்புல அளிக்கைகளாக இருந்தவேளை, இம்முறை கலைத் தன்மையை முதன்மைப்படுத்தி நடிப்பு உடையலங்காரம் காட்சியமைப்பு உரையாடல்கள் என ஒரு பிரமாண்டம் தோன்றக்கூடிய வண்ணம் ஒரு முழு நீள நாடகம் மேடையேற்றப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் மிகுந்த அபிமானத்தைப் பெற்றிருந்ததோடு, நாடக அபிமானிகளின் பார்வையிலும் நிறைவைத் தந்த நாடகமாக அது இருந்ததை மறுப்பதற்கில்லை. 

இந்த நாடகத்தை மேடையேற்றுவதற்கு ஒரு துணிச்சல் தேவை. அது நிறையவே மனவெளிக்காரருக்கு இருந்திருக்கிறது. ஒன்றேகால் நூற்றாண்டுகளுக்கு முற்படச் சம்பவிக்கும் நிகழ்வுகளை, அக்காலகட்டத்து மக்களின் வாழ்வியலை, பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவிட்ட புதியவொரு தலைமுறையினருக்கு மத்தியில் நிகழ்த்திக் காட்டுவதானது எதிரோட்டத்தில் நீந்த முனைவதற்கு நிகரானது. 

அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நாடகம் Tragedy \ Comedy என எந்த வகையினுள்ளும் விமர்சகர்களால் வகைப்படுத்த முடியாதிருந்தமை. பின்னால் இது Tragic Comedyயாக வகைப்படுத்தப்பட்டாலும் முந்திய பதிவிலிருந்த ஆழம் புதிய பகுப்பைக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு, காட்சி மாற்றமின்றி ஓரங்க நாடகம்போல் அமைந்த நிகழ்வின் காலநீட்சி. மூன்று, நவீன மேடை நாடகத்தின் எந்தவிதமான தொழில்நுட்ப அறிமுறையும் (ஒலிவாங்கிகள் அமைக்கப்பட்டிருந்த விதமுட்பட) பின்பற்றப்படாமை. ஒளி ஒலி மூலமாக காலநிலை (நாடக நிகழ்வுகளின் காலம் ஒரு கிறிஸ்துமஸ்சுக்கு முன் தினத்திலிருந்து புதுவருஷம்வரையான காலமாகும். அது நிறைந்த பனிப் பொழிவையும், குளிர் உறைவையும் கொண்டது), பகல் இரவு ஆகியன நாடகத்தில் பதிவாக முயற்சி எடுக்கப்படவேயில்லை. இந்நிலையில் பார்வையாளர் அலுத்துப்போகாதபடி நிகழ்வை நகர்த்துவதென்பது சாமான்யமான விஷயமில்லை. இருந்தும்தான் இரண்டு மணி ஐம்பது நிமிஷங்களை எடுத்திருந்த நாடகத்தின் நீட்சியில் சலிப்பே ஏற்பட்டிருக்கவில்லை. 

பாத்திரங்களுக்கான தேர்விலிருந்து உடையமைப்பு ஊடாக இசையமைப்புவரை நாடகத்தில் வெகுகவனம் செலுத்தப்பட்டிருந்ததுதான். ஆனால் இவை ஒரு அரங்காற்றுகையை மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதின் அம்சங்களாகும். நிறைவான அளிக்கையிலிருந்து முழுநிறைவான அளிக்கையாவதை இடறிய அம்சங்கள் எவையென விசாரிப்பதே விமர்சனத்திற்கு நியாயம்செய்யும். இனிவரும் காலங்களின் புதிய புதிய முன்னெடுப்புகளுக்கு துணைசெய்வதாகவும் அது அமையமுடியும். 

பாத்திரங்கள் ஒவ்வொன்றினது உரையாடல் மொழியிலும் தனித்துவம் தெரிந்திருந்தது. நோறாவும், டாக்டர் றாங்க்கும், கிறிஸ்ரினாவும், நில்ஸ் குறொக்ஸ்ராட்டும், ரொர்வால்ட் ஹெல்மரும் மூலப்பிரதியைப்போலவே மொழியாக்கப் பிரதியின் உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதன் சரளமும், பாத்திரங்களின் குணசித்திரங்களை மீறவோ குறையவோ செய்யாத அர்த்த பரிமாணம் கொண்ட வரிகளின்மூலம் துணியமுடிகிறது.

Continue Reading →

சிறுகதை: முதற்காதல்!

சிறுகதை: முதற்காதல்!  - வ.ந.கிரிதரன் -நீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம் முடிந்தபின்னர் ஒரு சமயம் இவன் அவளை முகநூலில் சந்தித்தான். அவள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றான். அவளுடன் தொடர்பு கொண்டான். அவள் குடும்பம், பிள்ளைகள் என்று நன்றாக இருப்பதை அறிந்து உண்மையில் மகிழ்ச்சி கொண்டான். அதனைக்காணும் சமயங்களெல்லாம் கூறுவான். இளமையில்அவளது காதல்தான் கிடைக்கவில்லையென்றாலும் முதுமையில் அவளது நட்பு கிடைத்தது தன் பாக்கியமே என்றான். 

அவனைப்பற்றி இவ்வளவு நினைவுகளும் மீண்டும் நினைவிலாடின. “என்னடா இந்தப்பக்கம். எப்படியிருக்கிறாய்?’ என்றேன்.

“எனக்கென்ன குறை. நல்லாத்தானிருக்கிறன்” என்றவன் தான் எழுதி வைத்திருந்த கவிதையொன்றினைத் தந்தான். வாசித்துப் பார்த்தேன். ‘சந்திப்பு’ என்னும் பெயரில் எழுதப்பட்டிருந்த சிறு கவிதை அது.

Continue Reading →

சொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் – 2018

சொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் - 2018

கனடா, மிசசாகாவில் உள்ள சொப்பா குடும்ப மன்றத்தின் கனடாதினக் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை, யூன் மாதம்  30 ஆம் திகதி 2018 இல் மிசசாகாவலியில் உள்ள எல்.சி. ரெயிலர் அரங்கில் கொண்டாடப்பட்டது. 500 மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. சென்ற சனிக்கிழமை மிசசாகா நகரில் கனடா தினம் கொண்டாடப்பட்ட போது பல்வேறு சமூகம் சார்ந்த பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர்.

கனடாதின விழாவின் ஆரம்பத்தில் விசேட விருந்தினர் ரஜீவ்கரன் முத்துராமன் அவர்களால் கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, சொப்கா மன்றக் கீதம் ஆகியன மன்ற அங்கத்தவர்களால் இசைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வைத்தியகலாநிதி வி. பிகராடோ, திருமதி பிகராடோ ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின்போது கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டு, அவரது பிரதம விருந்தினர் உரையும் அப்போது இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த மிசசாகா மேயர் மதிப்புக்குரிய போணி குறம்பி (டீழnnநை ஊசழஅடிநை) அவர்களின் உரை இடம் பெற்றது. தொடர்ந்து நகரசபை, மாகாணசபை அங்கத்தவர்களின் உரைகள் இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து மன்றத்தின் முன்னாள் தலைவியும், தற்போதைய காப்பாளருமான சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்கள் மன்றத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தனால் அவரது கடந்தகால சேவைகளைப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

Continue Reading →

கோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் “கள்ளக்கணக்கு” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு!

கோவை புத்தக திருவிழாவில், காலச்சுவடு பதிப்பக வெளியீடாக  ஆசி கந்தராஜாவின் "கள்ளக்கணக்கு" சிறுகதைத் தொகுப்பு அ முத்துலிங்கத்தின் முன்னுரையுடன் வெளியிடப்படுகின்றது.

கோவை புத்தக திருவிழாவில், காலச்சுவடு பதிப்பக வெளியீடாக  ஆசி கந்தராஜாவின் “கள்ளக்கணக்கு” சிறுகதைத் தொகுப்பு அ முத்துலிங்கத்தின் முன்னுரையுடன் வெளியிடப்படுகின்றது.

கோவை வெளியீடு:
உரை: திரு க மோகனரங்கன்
காலம்: 2018 ஜூலை 22 ஞாயிறு காலை 10:00 மணி.
இடம்: கோவை புத்தக திருவிழா. ஆர்த்ரா ஹால், அண்ணா சிலை அருகில். கோவை.

Continue Reading →