கவிஞனின் கால்கள் மண்ணில் நடமாடினாலும் அவன் உள்ளம் வானில் பறக்கவேண்டும் என்றார் கவிஞர் தாகூர். அதனாலேயே இலக்கியமும் உலகளாவிய பண்பு கொண்டதாக அமைந்திருக்கிறது. வட்டாரம், தேசம்; தாண்டி பல்கலாசாரத்தினது அனுபவங்களையும் அது கொண்டு வந்து சேர்க்கிறது.
கவிஞர் கவி கலியின் “பனிவிழும் தேசத்தில் எரிமலை” என்ற கவிதைத்தொகுப்பு அவரின் இரண்டாவது நூலாகும். கவிஞர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அவரின் உள்ளம் தாயகத்தின் மீது நம்பிக்கையுடன் சஞ்சரித்தவண்ணமே உள்ளது.
ஆறறிவு படைத்த மனிதர்களால் வியக்கத்தக்க பல செயல்களைச் செய்ய முடிந்திருக்கிறது. அச்செயல்கள் இந்த உலகெங்கும் பரந்து விரிந்து பலருக்கு அதிசயத்தையும் வியப்பையும் தருகின்றன. உலகப்போரை நிகழ்த்தி மனிதர்களை அழிவுக்குத் தள்ளியவனும் மனிதன்தான். பூமியதிர்ச்சியிலிருந்தும் கடல்கோள்களிலிருந்தும் நோய்களிலிருந்தும் அல்லற்பட்டவர்களை மீட்டெடுத்தவனும் மனிதன்தான். இவையெல்லாவற்றுக்கும் காரணம் மனிதர்களின் அகமும் புறமும் விரவிய எண்ணங்கள்தான்.
அந்த எண்ணங்களின் செயல்வடிவங்கள் இந்த உலகுக்கு, பல செய்திகளைக் கூறுகின்றன. ஒரு விதத்தில் அனுபவத்தின் தொற்றுதல்களுக்கு அவை வழிவகுக்கின்றன. கலைப்படைப்புக்களும் இவ்வாறானவையே. கலைகள் மனிதர்களின் பல்வேறு உணர்வுகளுக்கும் வெளிப்பாடுகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கின்றன. அழகிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் ஒரு சிலையைச் செதுக்குபவனும் கலைஞன்தான். கவிதையை வடிப்பவனும் கலைஞன்தான்.
புராண இதிகாசங்கள் கற்பித்தவைபோல் இந்த உலகை உற்றுநோக்கும் படைப்பாளிகளும் மூன்றாவதுகண் உடையவர்கள்தான். அவர்கள் தங்கள் அகக்கண்ணால் தம்மையும், சார்ந்த சூழலையும், உலகையும்கூட உற்றுநோக்குகின்றனர். வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் நோக்குகின்றனர். அப்போது அவை மொழிவடிவம் பெற்றுக் கவிதைக் கலைப்படைப்புகளாகின்றன.
கவிதைகள் எப்போதும் நான்குவிதமாக செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. கவிதை ஒரு அனுபவத்தைத் தருகிறது. அது உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கிறது. அடுத்து, அரசியற்தன்மையைக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பண்படுத்தும் ஒருமைப்பண்பைக் கொண்டிருக்கிறது. இவை எல்லாப் படைப்புக்களிலும் ஒரே அளவில் இருக்கும் என எதிர்பார்க்கமுடியாது. கருத்தியல், மனநிலை, இரசனை ஆகியவற்றுக்கும் ஏற்ப வாசகர்களிடமும் இவற்றைப் புரிந்து கொள்வதில் வித்தியாசம் இருக்கக்கூடும்.