கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பானது மிக அண்மையில் (ஒரு சில வருடங்களுக்கு முன்பே) உருவாக்கம் பெற்ற இடது சாரி சார்பு நிலை கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பாகும். மக்களின் சமகால பிரச்சனைகளை, சமூக வாழ்வியலை அவர்களின் வாழ்வியலினூடக, அவர்களின் வாழ்க்கையின் மொழியினூடாக, கலை, இலக்கிய வடிவங்களாக வெளிக்கொண்டுவருவதும் அதையே அவர்களது போராட்ட ஆயுதமாக்குவதும் தான் மக்கள் கலை பண்பாட்டு களத்தின் நோக்கமாகும்.
அவர்கள் கடந்த காலங்களில் நடாத்திய நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற அமைப்பினர்களைப் போல் அல்லாமல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குறித்த நேரத்தில் நடாத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணத்தில் நானும் குறித்த நேரத்திற்கு முன்பே சமூகமளித்திருந்தேன். ஆனால் இந்த தடவை அவர்களது நிகழ்வும் ஒரு கொஞ்ச நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது என்பதினையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
ஒரு நிமிடநேர மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய அந்நிகழ்வானது நேரிடையாகவே தோழர் சி.கா.செந்தில்வேல் இன் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ நூல் அறிமுகத்திற்குள் நுழைந்தது.
நிகழ்வினை தோழர் வேலு அவர்கள் நெறிப்படுத்தினார். முதலில் புதியதிசைகள் ஒருங்கிணைப்பாளர் மாசில் பாலன் அவர்கள் உரையாற்றினார். இது போன்ற வரலாற்று ஆவணங்கள் வெளிவரவேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி வரவேற்று பேசிய அவர் அதற்குமப்பால் இந்நூல் குறித்தும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறுவிதமான காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஈழ விடுதலைப் போரை முற்று முழுதாக நிராகரிக்கும் அவர்கள் அந்த முப்பது வருட காலத்தில் வெறும் அறிக்கைகள் விட்டதற்கும் அப்பால் செய்த நடவடிக்கைகள் என்ன என்றும், முற்போக்கு தேசியம் குறித்தும், அப்படி ஒரு தேசியம் உருவானால் அதனுடன் இணைந்து பயணிப்பதாகவும் இப்போது குறிப்பிடும் இவர்கள் கடந்த காலங்களில் ஒரு முற்போக்கு தேசியத்தின் உருவாக்கத்திற்கு என்ன நடவைக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார்.