நாவல்: பெரியவர் மற்றும் கடல் (The Old Man And The Sea)

நாவல்: பெரியவர் மற்றும் கடல் (The Old Man And The Sea)ஹெமிங்வே – எழுத்தாளர் சங்கரநாராணன் http://hemingwaytamil.blogspot.com என்னும் வலைப்பதிவினை உருவாக்கி அதில் ஹெமிங்வேயின் புகழ் மிக்க நாவல்களிலொன்றான ‘The Old Man And The Sea’ என்னும் நாவலை ‘பெரியவர் மற்றும் கடல்’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அவற்றை மேற்படி வலைப்பதிவில் பகுதி பகுதியாக வெளியீட்டும் வருகின்றார். அவற்றை நன்றியுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் –


ஹெமிங்வே 1899ல் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஓக் பார்க் என்ற ஊரில் பிறந்தார். 1917ல் கன்சாஸ் சிடி ஸ்டார் இதழில் எழுத ஆரம்பித்தார். முதல் உலகப் போரில் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டியாக இணைந்து கொண்டார். என்றாலும் காயம்பட்டு வீடு திரும்ப நேர்ந்தது. 1921 முதல் அவர் பாரிஸ் நகரத்தில் வாழ ஆரம்பித்தார். 1923ல் அரது முதல் முதல் புத்தகம் ‘மூன்று கதைகளும் பத்து கவிதைகளும்’ பாரிசில் வெளியானது. அடுத்ததாக அவரது சிறுகதைத் தொகுதி ‘நம் காலத்தில்’ 1925ல் அமெரிக்காவில் வெளியானது. 1926ல் வெளியான அவரது புத்தகம் ‘சூரியனும் உதிக்கிறான்’ வெளியானபோது அவர் ‘கடந்த தலைமுறை’யின் குரலாக அடையாளம் காணப் பட்டார். 1930 களில் அவர் கீ வெஸ்டிலும், பிறகு கியூபாவிலும் வசித்தார். என்றாலும் ஸ்பெய்ன், ஃப்ளாரிடா, இத்தாலி, ஆபிரிகா என பயணங்கள் செய்தார். அந்த அனுபவங்களில் எருதுபொருதுதல், வேட்டை என்று அவர் கதைகள் எழுதலானார். ஸ்பானிய உள்நாட்டுப் போரில் நிருபராக இருந்ததில், போர்ப் பின்னணியில் அவரால் ‘யாரை நோக்கி மணியோசை?’ என்கிற அருமையான நாவலைத் தர முடிந்தது. பெரியவர் மற்றும் கடல் என்கிற இந்த நாவல் 1951ல் எழுதப்பட்டு, 1953 ல் புலிட்சர் விருது இதற்கு அறிவிக்கப் பட்டது. 1954ல் ‘இனி வேண்டாம் ஆயுதங்கள்’ என்ற அவரது நாவல் நோபல் பரிசு வென்றது. 1961ல் ஹேமிங்வே தற்கொலை செய்துகொண்டார்.

மீளவும் நான் ஹெமிங்வேயிடம் வந்திருக்கிறேன். இடையே ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைக்கும் ‘ஓல்ட் மேன் அன்ட் தி சீ’ ஒரு பிரமிப்பளிக்கிற கதை. ஒரு தளத்தில் அது மனிதன் ஒருவனுக்கும் ஒரு மீனுக்கும் நடக்கிற கதை. இன்னொரு விதத்தில் பார்த்தால் அது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஊடாட்டம். வேறொரு கோணத்தில், கால காலமான மானுடத்தின் பண்பாட்டையும், வீரத்தையும், இருத்தல் சார்ந்த சவால்களின் முன் மானுடத்தின் பராக்கிரமத்தையும் விவரித்துச் செல்வதாய் அமைகிறது. இது வெளியான காலத்தின் ஆவணமாகவும், அந்த வாழ்க்கை அதன் சூழல் அதில் தனி மனிதப் பங்களிப்பு எனவும் இதை அறிய முடியும். குழுக்களாகவோ, அமைப்புகளாகவோ அல்லாமல் ஒரு தனி மனிதனின் இயக்கம், செயல்பாடு அக்கால அஎமரிக்க வாழ்க்கை இது.

இதில் வரும் கிழவனின் துணிச்சலையும், இயல்பான தினவையும் ஹெமிங்வே கொண்டாடுகிறார்.

ஹெமிங்வேயின் உலகம் வேறு. என் உலகம் வேறு. இந்தக் கதையின் கிழவன், அந்த சாண்டியாகோ அல்ல நான். இன்றைய வாழ்க்கை ஒழுங்குகளை வைத்துச் சொல்கையில், ஹெமிங்வே பரத்திக் காட்டுகிற இந்தக் கிழவன் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு முற்றிலும் அந்நியமானது தான்.

என்றாலும் ஹெமிங்வேயின் வீர்யமான கதைகூறு திறன், நான் என்னை அறியாமல் சாண்டியாகோ பக்கம் நிற்கிறேன். அவனை வியப்புடன் நோக்குகிறேன். அவனுக்கு மீறிய நெருக்கடிகளில் அவன் அடையும் இழப்புகள் எனக்கு வலிக்கின்றன. தன் காலத்தில் மனிதன் தனது இருத்தலுக்காகவே கூட இயற்கையோடு போராட வேண்டி யிருந்தது, என்பதை ஹெமிங்வே சுட்டிக் காட்டிப் பதிவு செய்கிறார். தலையசைத்து ஆமோதிக்கவும், அந்த நாட்களை நினைவு கூரவும் ஹெமிங்வே வழி வகை செய்கிறார். சிறப்பாக, தனி மனிதன் எத்தனை மகத்தானவன், என்பதை, அவனது அபாரத் துணச்சலை, திறமையை, கலாரசனையை, பிரச்னைகளில் தாக்கு பிடிக்கிற ஆத்ம வலிமையை எல்லாம் அவர் இந்த நாவலில் உணர வைக்கிறார்.

மொழிபெயர்ப்பு தனிக் கலை. என் வாசகத் தளத்தை அது பரத்தி விரிக்கிறது. அகலப்படுத்தி ஆழப்படுத்துகிறது. வாசகனாக நான் அதிர்ஷ்டம் செய்தவனாகிறேன். ஹெமிங்வே என் ஆசான். உலக இலக்கியத்துக்கே அவர் நெறியாளர். அவரது இந்த நாவலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. ‘ஓல்ட் மேன் அன்ட் தி ஸீ’ நாவலை நான் ஆங்கிலத்தில் தான் வாசித்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஓர் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை அது எனக்குக் கற்பித்தது. தனியே ஒரு கிழவன். அவனது அசாத்திய தன்னம்பிக்கை. அவன் மாத்திரமே பிரம்மாண்டமான கடலில். கூட அவனிடம் சிக்கிய பெரிய மீன். அதனுடன் அவனது போராட்டம். யார் ஜெயிக்கப் போகிறாரகள்?… என்கிற முடிச்சு. ஆ, மனிதன் மகத்தானவன் என்ற முத்தாய்ப்பு. எத்தனை வசிகரமான கரு. என்ன வசிகரமான நடை. வாழ்க்கை மீதான பிரியம். சவால்களின் தேடல். சாதனைத் தினவு. கிழவன் மறறும் மீன். தவிர கடல். இதில் கிழவன் தனக்குத் தானே பேசிக் கொள்கிற உத்தி அற்புதமானது. முழு கதையையும் இந்த உத்தியில் ஹெமிங்வே சிரமம் இல்லாமல் கூறிச் செல்ல முடிகிறது… இந்த உத்திதான் அந்த வயதில், என் எழுத்தின் மொட்டுப் பருவத்தில் என்னைக் கிறங்க வைத்தது. ஹெமிங்வே என் ஆசான்.

Continue Reading →