அஞ்சலிக்குறிப்பு: ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் பதிவுசெய்து, அற்பாயுளில் மறைந்த இலக்கியத்தேவதை கெக்கிராவ ஸஹானா! மல்லிகை ஜீவா, ஜெயகாந்தனின் ஆசிபெற்று வளர்ந்த இலக்கிய ஆளுமை!

திருமதி ஸஹானா“திருமதி ஸஹானாவின் ‘ஒரு தேவதையின் கனவு’ சிறுகதைத்தொகுதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற மொழிந்திடவும், சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் எழுதும் படைப்புகள் காலத்தால் என்றென்றும் போற்றப்படும். அவை என்றும் புதியவை. அத்தகு இலக்கியவரிசையில் தேவதையின் கனவும் இடம்பெற வாழ்த்துகின்றேன்” என்று 22-01-1997 ஆம் திகதி சென்னையிலிருந்து ஜெயகாந்தன் வாழ்த்தியிருந்த, ஈழத்தின் இலக்கியப்படைப்பாளி கெக்கிராவ ஸஹானாவும் கடந்த மாதம் எங்கள் இலக்கிய உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். “அற்பாயுள் மரணமும் மேதா விலாசத்தின் அடையாளமோ? ” என்று ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் சுந்தரராமசாமி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. 1968 இல் பிறந்து 2018 இல் மறைந்துள்ள கெக்கிராவ ஸஹானா, குறுகிய காலத்தில் ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டு பிரகாசித்த நட்சத்திரம். எங்கள் மத்தியில் உதிர்ந்துள்ள இந்த நட்சத்திரம் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளவை அவருடைய அருமைக்குழந்தைகளும், இலக்கியப்பிரதிகளும்தான்.  இனி எம்முடன் பேசவிருப்பவை கெக்கிராவ ஸஹானவின் ஆக்க இலக்கியப்படைப்புகளும் ஆய்வுகளும் மொழிபெயர்ப்பு பிரதிகளும்தான்.

கவிதை, சிறுகதை, விமர்சனம், அறிவியல் கட்டுரைகள் ஊடாக பாடசாலைப்பருவம் முதலே தேடலில் ஈடுபட்டு வந்துள்ள ஸஹானா ஆசிரியையாக பணியாற்றியவர். டொமினிக் ஜீவாவின் மல்லிகை கண்டெடுத்த இலக்கிய மலர், இலங்கையிலும் தமிழகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மணம்பரப்பியது. மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான காலத்தில், 1980 காலப்பகுதியில் 12 வயதுச்சிறுமியாக பாடசாலையில் பயிலும் காலத்தில் இவருக்கு அதனை அறிமுகப்படுத்தியவர் மர்ஹ_ம் கோயா அப்பாஸ் என்பவர் என்ற தகவலை மறக்காமல் நன்றியுணர்வோடு தனது முதல் கதைத்தொகுப்பான ஒரு தேவதைக்கனவு நூலின் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை வானொலி, நாளாந்த தினசரிகள், தென்னிந்திய சஞ்சிகைகள் மூலமாகவும் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடனும் பாரதி முதல் ஜெயகாந்தன் வரையில் தேடிக்கற்றவருக்கு – இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத அந்த இளம் பருவத்தில் இவருக்கு மல்லிகை அறிமுகமாகியிருக்கிறது. மல்லிகை ஆக்கங்கள் அந்தச்சிறுமிக்கு பிரமிப்பூட்டியவை. அதனால் வாசிப்பதுடன் நின்றுகொண்டவர், அதில் எழுதுவதற்கு தயங்கியிருக்கிறார். எனினும் எழுதிப்பார்க்கத்தூண்டிய பல படைப்புகளை இனம் கண்டுள்ளார். இலங்கை வானொலி ஒலிமஞ்சரிக்கு எழுதிய முதல் கவிதையும் முதல் சிறுகதையும் ஒலிபரப்பாகியதையடுத்து, தன்னாலும் தொடர்ந்து ஆக்க இலக்கியம் படைக்கமுடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. தனது ஆரம்ப இலக்கியப்பிரதிக்கு அங்கீகாரம் வழங்கி, களம் தந்திருக்கும் வானொலி அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட் அவர்களுக்கும் தனது முதல் கதைத்தொகுப்பில் மறக்காமல் நன்றி தெரிவிக்கின்றார் ஸஹானா.

எண்பதுகளின் இறுதியில் பாடசாலை இறுதித்தேர்வை முடித்துவிட்டு கிடைத்திருந்த விடுமுறைக்காலத்தில் வீட்டில் சேகரித்துவைத்திருந்த அனைத்து மல்லிகை இதழ்களையும் மீண்டும் எடுத்துப்படிக்கிறார். மல்லிகை பற்றிய ஒரு நீள் வெட்டுமுகத்தோற்றம் அவர் மனதில் பதிவாகிறது. மல்லிகையில் வெளிவந்த இலக்கியப்பிரதிகளை விட அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவின் சோர்வற்ற கடின உழைப்பும் ஒவ்வொரு மாதமும் மல்லிகையை வெளியிடுவதற்கு அவர் சந்திக்கும் சவால்களும் கவனத்தை ஈர்க்கின்றன. அதுவரையில் மல்லிகையில் எழுதாமலிருந்த ஸஹானா ஒரு நீண்ட இலக்கியமடலை மல்லிகைக்கு அனுப்புகின்றார். அதனையடுத்து, மல்லிகை இதழ்கள் மட்டுமன்றி மல்லிகைப்பந்தல் வெளியீடுகளும் அவருடைய கெக்கிராவ இல்லத்திற்கு வருகின்றன.

Continue Reading →