பத்மநாப அய்யரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்! தமிழ் இலக்கியப்பாலமாகவும் ஆவணப்படுத்தலில் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர்!

பத்மநாப அய்யரும் கலை - இலக்கிய பதிப்புலகமும்!  தமிழ் இலக்கியப்பாலமாகவும் ஆவணப்படுத்தலில் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர்!– லண்டனில் வதியும் இலக்கிய நண்பர் பத்மநாப அய்யரிடமிருந்து 12.10.2018 அன்று எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அச்சமயம் அவரது லண்டன் நேரம் அதிகாலை 3.30 மணி. நாம் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளில் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகளின் கண்காட்சியும் நடத்தவிருக்கும் தகவல் அறிந்து அவர் தொடர்புகொண்டார். நூலகம் ஆவணக்காப்பகத்திலும் கண்காட்சியில் இடம்பெறும் ஆவணங்களை பதிவேற்றுவதற்கு ஆக்கபூர்வமாகச் செயற்படுமாறும் பத்மநாப அய்யர் விநயமாகக் கேட்டுக்கொண்டார். எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்த அவரது தொடர்ச்சியான அக்கறை முன்னுதாரணமானது. அவுஸ்திரேலியா நிகழ்வு பற்றி அறிந்ததும் தனது உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் அவர் துயில் எழுந்து உரையாடியது எனக்கு நெகிழ்வூட்டியது. இறுதியாக அவருடைய முயற்சியும் சம்பந்தப்பட்ட தவில் மேதை லயஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி – ஆவணப்படம் – இசைத்தொகுப்பையும் ரசித்திருக்கின்றேன். பத்மநாப அய்யரின் பவள விழா 2016 ஆம் ஆண்டில் நடந்தவேளையில் நான் எழுதிய பதிவை இங்கு மீண்டும் பதிவேற்றுகின்றேன். அவரது வாழ்வையும் பணிகளையும் மீண்டும் தெரிவிக்கவிரும்புகின்றேன்” – முருகபூபதி  –

” ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க்கரையில் நாவலைப்படித்த பின்னர், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுதி படிக்கக்கிடைத்தது. இலங்கையில் ஒரு பிரதேசத்தில் வாழும் கடற்றொழில் புரியும் மீனவ மக்களைப்பற்றிய கதைகள். இந்த நூல் பற்றி ‘தாமரை’ யில் எழுதவிருக்கின்றேன்.” – என்று எழுதப்பட்ட ஒரு வாசகர் கடிதம் 1975 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மல்லிகையில் வெளியானது. அதனை எழுதியிருந்தவர், தமிழக முற்போக்கு இலக்கிய விமர்சகர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். அவரை நான் பார்த்ததுமில்லை. அதனால் பேசியதும் இல்லை. என் எழுத்துக்களை எனது முதல் நூலின் ஊடாக அவருக்கு அறிமுகப்படுத்தியவர்தான் அண்மையில் பவளவிழா நாயகனாக எம்மவர்களினால் கொண்டாடப்படும் நண்பர் பத்மநாப அய்யர்.

அண்மையில் நடந்த எமது 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக குவின்ஸ்லாந்து மாநிலத்திற்கு புறப்பட்ட தருணத்தில் அவருக்கு பவளவிழா என்ற செய்தியை நண்பர் கிரிதரனின் பதிவுகளில் பார்த்தேன். உடனடியாக எனது நீண்ட கால நண்பர் பற்றிய பதிவை எழுதமுடியாதிருந்த வேலைப்பளுவுக்கு மத்தியில் அவர் பற்றிய பழைய நினைவுகளுடன் விமானம் ஏறினேன். அங்கு சென்ற பின்னர் – நண்பர் நடேசன் சொன்ன முகநூல் குறிப்புகள், என்னை வருத்தியது. என்னிடம் இந்த முகநூல் இல்லாதிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று மீண்டும் உணர்ந்தேன். ஒரு வாழ்நாள் சாதனையாளர் – தொடர்ச்சியாக எமது கலை இலக்கியத்திற்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த ஒருவர் கொண்டாடப்படும் அரிதான தருணம் அவர் கடக்கும் வயதின் எல்லைகள்தான்.  அத்தகைய ஒரு எல்லையில் அவரை எவ்வாறு அழைப்பது ? எப்படி எழுதுவது ? என்ன பெயர் சொல்லி விளிப்பது ? முதலான சர்ச்சைகள் அவசியமற்றவை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 302 : கவிஞர் அனாரின் கவிதை பற்றிய முகநூற் பதிவு பற்றி; முல்லை அமுதனின் காற்றுவெளி!

பாரதியார்இளங்கோவடிகள்கவிஞர் அனார்  தனது முகநூற் பதிவொன்றில் கவிதையைப்பற்றி இவ்விதம் குறிப்பிட்டிருந்தார்:

“யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ? இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபட்ட மனதை கொண்டுசென்று சொற்களாலான கூட்டை இளைத்து நிரந்தரமின்மையான அனைத்திலும் இருந்து விடுதலையடைய முயலும் தொடர்ச்சியான செயற்பாடுதான் கவிதை. கவிதை இன்னொரு உணர்ச்சியென நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சிக்கு ஆண்பால், பெண்பால், அரசியல், தத்துவம், கோட்பாடு, கலைத்தாகம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகும்…..”

இக்கூற்றின் ஆரம்பத்தில் “யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ?” என்று கேள்வியைக் கேட்டு, அதற்கான பதிலையும் கேள்வியிலேயே முடித்திருக்கின்றார். இதன்படி நமக்காகக் கவிதைகள் எழுதவில்லை என்னும் தொனியும் பிரதிபலிக்கின்றது. அடுத்து வரும் வரிகளில் “இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ” என்றும் அவர் கூறுகின்றார்.

இக்கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கவிதை என்பது பல்வேறு காரணங்களுக்காக எழுதப்படலாம். கவிஞர் தன் உணர்வுகளின் வடிகாலாகத்தனக்காக எழுதலாம். அவர் தனக்காக எழுதியபோதும் அக்கவிதையின் சிறப்பினால் பலருக்கும் அது பிடித்துப்போகலாம். உதாரணமாகப் பட்டினத்தார் தன் தாயின் இறுதிச்சடங்குகளின் போது பாடிய கவிதைகளைக் குறிப்பிடலாம். அதிலவர் அக்கணத்தில் தன் தாயின் பிரிவு ஏற்படுத்திய உணர்வுகளை வடித்திருப்பார். அச்சமயம் அவர் பாடியவைகளில் ஒன்றான பின்வரும் பாடல் அனைவரும் அறிந்த பாடல்களிலொன்று:

Continue Reading →