( தொடர் நவீனம் ‘மனக்கண்’ ) அத்தியாயம் 30: தந்தையின் தியாகம்!

30ம் அத்தியாயம் : தந்தையின் தியாகம்!

( தொடர் நவீனம் 'மனக்கண்' ) அத்தியாயம் 30: தந்தையின் தியாகம்!

சிவநேசர் சுரேஷுக்கு எழுதிய தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த டாக்டர் மோகன்ராவ் கண்ணாஸ்பத்திரி சென்னை நகரில் கீழ்ப்பாக்கம் என்னும் பிரதேசத்திலுள்ள சிம்சன் ஹைரோட்டில் அமைந்திருந்தது.  முழு இந்தியாவிலும் பெயர் பெற்ற தனியார் கண்ணாஸ்பத்திரியில் அதுவும் ஒன்று.  மோகன்ராவ் என்னும் பிரபல கண் வைத்தியரால் அமைக்கப்பட்ட அவ்வைத்திய நிலையம் இன்று அவரது மகன் டாக்டர் சஞ்சீவிராவால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

டாக்டர் சஞ்சீவிராவ் சாதாரணமாக அதிகாலை எட்டரை மணிக்கே தமது வைத்திய நிலையத்துக்கு வந்து விடுவார். அன்றும் அவர் அவ்வாறே வந்து தமது அறையிலுள்ள சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததுதான் தாமதம் வைத்திய நிலையத்தின் உதவி டாக்டர்களில் ஒருவரான கணேசன் அவரிடம் வந்தார்.

“சார்! ஒரு முக்கியமான விஷயம். பீர் மேட்டிலுள்ள டாக்டர் குமரப்பா நர்சிங் ஹோமிலிருந்து இரு கண்கள் நமது ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.  அங்கு இன்று காலை இறந்துபோன ஒரு  கோடீஸ்வரர் அவற்றைத் தானமாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறாராம். இது பற்றி அவர் விட்டுப்போன கடிதங்களில் ஒன்று உங்கள் விலாசத்துக்கு எழுதப்பட்டிருக்கிறது. கண்களை நான் குளிர்ப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்துவிட்டேன். கடிதம் இதோ இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பென்னாம் பெரிய ஒரு கவரை டாக்டர் சஞ்சீவிராவிடம் அவர் சமர்ப்பித்தார்.

டாக்டர் சஞ்சீவிராவ் கவரை எடுத்துப் பிரித்தார். அதில் ஒரு கடிதமும் இன்னும் இரண்டு கவர்களும் இருந்தன. அவற்றில் ஒன்று டாக்டர் சுரேஷுக்கு விலாசமிடப்பட்டிருந்தது. மற்றது “ஶ்ரீதருக்கு” என்று எழுதப்பட்டிருந்தது. டாக்டர் சஞ்சீவிராவுக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் வந்தமை வாழ்நாளில் இதுவே முதல் தடவை போலும்! ஆகவே அளவுக்கு மீறிய பரபரப்போடு தன் பெயருக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தை அவசரமாக வாசிக்கலானார் அவர். அக்கடிதம் பின் வருமாறு :-

மதிப்புக்குரிய டாக்டர் சஞ்சீவிராவ் அவர்களே!

எனக்கு உம்மைத் தெரியாது. உமக்கும் என்னைத் தெரியாது.  இருந்தபோதிலும்  உமது சேவை எனக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவதால் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.  எனக்கு உம்முடைய சேவை கண் வைத்தியர் என்ற முறையிலும் ஒரு சக மனிதர் என்ற முறையிலும்  தேவைப்படுகிறது.  உமது வைத்திய சேவைக்கு இத்துடன் 3000 ரூபாவுக்குச் செக் இணைத்துள்ளேன். ஆனால் சக மனிதர் என்ற முறையில் நீர் செய்ய வேண்டுமென்று நான் கோரும் சேவைக்கு என்னால் என்ன பதில் செய்ய முடியும்? என் மனமார்ந்த  நன்றியை மட்டும் தெரிவிக்க முடியும்.  இறந்து போய்விட்ட நான் வேறெதையும் செய்யக் கூடிய நிலையில் இன்றில்லை.

Continue Reading →