ஆய்வு: தொல்தமிழர் நாகையும் நாகூரும்

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113நாகை மாவட்டம் ஆன்மீகத்திலும் தொன்மைச் சிறப்பிலும் பேறுபெற்ற ஓர் பகுதியாகும். இங்குள்ள நாகூரும் நாகையும் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கிறது. நாகூர் ஓர் இசுலாமியத் தலமாக இருப்பினும் அனைத்துச் சமயத்தினருக்கும் பொதுமையாக விளங்கி வருவது இதன் தனிச்சிறப்பாகும். தமிழுக்கும் இசுலாத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வருகிறது. ஈசாநபி சகாப்தம் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே அராபிய வர்த்தகர்களுக்கும் தென்னிந்தியா, இலங்கை, சீனா போன்ற கீழைத் தேயங்களுக்கும் இடையிலான தொடர்பு ஆரம்பமாகிவிட்டது என்பதனை வரலாற்றாசிரியர்கள் நிறுவுகின்றனர். (நூர்மைதீன், வ.மு.அ. (உ.ஆ) நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, ப.9) சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றில் அவ்வுறவு மக்களைக் குறிப்பதற்கு ‘யவனர்’ என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது. நாம் இன்று அறிந்துள்ள வரையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புதான் இசுலாமியப் புலவர்கள் தமிழில் நூல்கள் இயற்ற ஆரம்பித்தனர். இப்பகுதியில் ஆங்காங்கே பல தர்காக்கள் இருப்பினும் காவிரிச் சமவெளியில் உள்ள நாகூர் தர்காவே புகழ்பெற்ற தர்காவாகவும் இசுலாமியர்களுக்கு இந்தியாவில் ஒரு புனித தலமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரிக் கரையோரத்து நாகையும் நாகூரும் பற்றி ஆராய்வோம்.

நாகூர் ஆண்டவர்

வடநாட்டில் அலகாபாத் என்னும் பிரயாகை நகரின் பக்கத்திலுள்ள மாலிக்காபூரில் சையது அப்துல் காதிறு ‘சாகுல் ஹமீது நாயகம் பிறந்தார்.(குலாம் காதிறு நாவலர், கர்ஜூல் கராமத்து, ப.4) இவர் ஆற்றிய சமயப்பணி பாராட்டிற்குரியது. இவரை நல்லடக்கம் செய்த இடம் இதுவே. நாகூரில் வாழ்ந்து மறைந்து நாகூரிலேயே அடக்கமாகி இருக்கும் இறைநேசச் செல்வரின் வாழ்நாள்காலம் 1490-1579 என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாகூருக்கு வந்த பொழுது முதன்முதலில் அவரை வரவேற்று குடிசைப் பகுதியில் தங்க வைத்தது மீனவர்கள். இதனால் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் மீனவர்களுக்கும் காலம் காலமாக பிணைப்பு இருப்பதோடு, முதல் மரியாதையும் வழங்கப்படுகிறது. நாகூர் தர்காவிற்கு இடம் கொடுத்ததும் பெரிய மினராவை அதாவது கோபுரத்தைக் கட்டியதும் சரபோஜி மன்னர் காலத்தில் தான். நாகூர் தர்கா இசுலாமிய தலமாக இருந்தாலும் இங்கு அதிகம் வந்து வழிபடுபவர்கள் இந்துக்களே. ஆகையால் இந்துக்கள் வழிபாட்டு முறைப்படி வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் கொடி ஊர்வலத்தின் போது செட்டியார் சமுகத்தை சேர்ந்த செட்டி பல்லாக்கு இடம்பெறும். நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போர்த்தப்படுகின்ற சால்வை பழனியாண்டி பிள்ளை என்ற பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாரிகளே இன்றளவும் வழங்கி வருகின்றனர். 

ஓவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இரவு தர்காவில் தங்கிவிட்டுச் செல்கின்றனர்.. ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கந்தூரி விழா கடந்த பிப்ரவரி 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். ஆண்டுதோறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகூரில் உள்ள அபிராமி அம்மன் கோயில் திருவாசலிலிருந்து தாரைதப்பட்டையுடன் புறப்படும். முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வரும்போது, இருபுறங்களிலும் திரளான மக்கள் கூடி நின்று ரதத்தின் மீது மலர்களைத் தூவி பிரார்த்தனை செய்வர்இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.

Continue Reading →

நல்லிணக்கத் தூதுவரும், மனிதநேயவாதியுமான நடிகர் விஜயகுமரணதுங்கவின் நினைவு தினம் இன்று ( அக்டோபர் 9)

நல்லிணக்கத் தூதுவரும், மனிதநேயவாதியுமான நடிகர் விஜயகுமரணதுங்கவின் நினைவு தினம் இன்று ( அக்டோபர் 10) !!  இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திரபூமி நாவலை படித்திருக்கிறீர்களா?

இந்திய அரசியலை அங்கதச் சுவையோடு எழுதப்பட்ட இந்த நாவலில் வரும் முகுந்தன் என்ற பாத்திரம் முழுமையான சித்திரிப்பு. மத்திய அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவரின் வீட்டுக்கு காப்பி தயாரிக்கும் வேலைக்காரனாக வரும் முகுந்தன், படிப்படியாக அங்குவரும் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்று பின்னாளில் அவரது வாரிசாக அரசியலுக்குள் பிரவேசித்து தலைவனாகின்றான். அமைச்சராகின்றான். அந்த முகுந்தன், பிரதமர் தொடக்கம் பல தலைவர்களுக்கு தண்ணி காட்டும் கதை. அவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் கதைதான் சுதந்திரபூமி.

திரைப்படங்களில் தோன்றிவிட்டு, அவற்றின் வசூல் வெற்றியை கொண்டாடும் ரசிகர்களின் மோகத்தை மூலதனமாக்கி, நாளைய முதல்வர்களாக வர முயற்சிக்கும் கனவில் மூழ்கியிருக்கின்றவர்களின் கதைகளை சமகாலத்தில் படித்து வருகின்றோம். இந்தப்பின்னணிகளுடன் பல வருடங்களுக்கு முன்னர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திர பூமி நாவல் இன்றும்பேசப்படுவதற்குக் காரணம் அதில் வரும் பாத்திரங்கள் இன்றும் வேறு வேறு ரூபங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பிறக்கும் எவரும் எதிர்காலத்தில் எந்தநிலைக்குச்செல்வார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லமுடியாது. அரசியலும் அப்படித்தான். இ.பா.வின் சுதந்திரபூமியில் வரும் முகுந்தன், ஒரு அரசியல் தலைவரின் வீட்டில் காப்பி தயாரிக்கும் சாதாரண வேலைக்காரன். அவன் வாழ்வில் நேர்ந்த விபத்து அவனை அரசியல் தலைவனாக்கியது.

நடிகனாக வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜீ.ஆர், எதிர்காலத்தில் தான் தமிழக முதல்வராவேன் என்று தான் நடித்த முதல் நாடகத்தின்போதோ அல்லது முதல் திரைப்படமான சதிலீலாவதியில் தோன்றும்போதோ நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார். அதுபோன்றுதான் ஜெயலலிதாவும், என். ரி. ராமராவும்! பின்னாளில் அரசியலில் பிரகாசிக்க முனையும் சினிமாக்கலைஞர்கள் பலரதும் ஆரம்ப கால வாழ்க்கை அரசியலுடன் எள்ளவும் சம்பந்தப்பட்டிருக்காது. அதனைத்தான் இ.பா. அவர்களும் சுதந்திரபூமி நாவலில் காப்பி தயாரிக்கவந்த முகுந்தன் மூலம் சொல்லியிருப்பார். இலங்கையிலும் ஒருவருக்கு அரசியல் பிரவேசம் விபத்தாகி, இறுதியில் அதுவே விபரீதமாகியிருக்கிறது! அவருக்கு இன்றைய தினம் ஒக்டோபர் 9 ஆம் திகதி பிறந்த தினம். அவர்தான் 1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வடமேற்கிலங்கையில் சீதுவை என்ற ஊரில் பிறந்து, 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி, கொழும்பின் புறநகரான பொல்ஹேன்கொடவில் தனது வீட்டு வாசலில் சில மறைகரங்களின் தூண்டுதலால் சுட்டுக்கொல்லப்பட்ட விஜயகுமாரணதுங்க. இவரது இயற்பெயர் கொவிலகே அன்டன் விஜயகுமாரணதுங்க.

Continue Reading →

ஆய்வு: யாழ்ப்பாணத்தின் வரலாறு!

ஆய்வு: யாழ்பாணத்தின் வரலாறு!– எரிமலை சஞ்சிகையின் ஜனவரி 2006 இதழில் வெளியான முனைவர் பொ.இரகுபதியின் ‘யாழ்ப்பாண வரலாறு’ என்னும் இக்கட்டுரை கூறும் பொருளின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனைத் தமிழ்க்கனடியன்.காம் மீள்பிரசுரம்ச் செய்திருந்தது. அதனை நாமும் நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்.காம் –


யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம்.

காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.

ஊர்காவற்றுறைக்கு முயலவள என்று வழங்கப்படும் பெயர் முயலள என்ற போர்த்துக்கேயச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சொல், துறைமுகம் அல்லது துறைமுகமேடை எனப்பொள்படும் ‘கீ’ என்று உச்சரிக்கப்படும் Qyal என்ற ஆங்கிலச் சொல் இதற்குச் சமதையானது.

ஊர்காவற்றுறையென்று இன்று எழுத்துத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த இடம்பெயர் , ‘ஊறாத்துறை’ என்றே பேச்சு வழக்கில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வெட்டுக்களில் ஊராத்துறை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஸிகர தித்த என்று சூளவம்சத்திலும் ஹிராதொட அல்லது ஊராதொட என்று பூஜாவலிய, ராஜாவலிய, நிகாயஸங்கிரஹய போன்ற இலங்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இந்திரபாலா: 1969)

Continue Reading →