வாசிப்பும், யோசிப்பும் 303: பன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் த.இந்திரலிங்கம்!

நுட்பம் -  1975என் மாணவப்பருவத்தில், யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் வெளிவந்துகொண்டிருந்த ‘சிந்தாமணி’ பத்திரிகையில் (தினபதி பத்திரிகையின் ஞாயிறுப் பதிப்பு சிந்தாமணி என்னும் பெயரில் வந்துகொண்டிருந்தது) த. இந்திரலிங்கம் என்னும் எழுத்தாளர் நகைச்சுவை ததும்பும் படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய தொடரொன்று ஞாபகத்திலுள்ளது. அத்தொடரின் பெயர், பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் மறந்து விட்டாலும், தொடரின் மையக் கரு இன்னும் ஞாபகத்திலுள்ளது. யாழ்ப்பாணத்து மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகிலுள்ள முற்றவெளியிலிருந்தென்று நினைக்கின்றேன் சிலர் சந்திரனுக்கு ‘ராக்கட்’ மூலம் பயணிக்க விளைகின்றார்கள். ‘அப்புக்குட்டி’ ‘மணியண்ணை’ போன்ற பாத்திரங்களுடன் , சிறுவனொருவனும் விண்வெளி வீரர்களாகப் பயணிக்கின்றார்களென்று எண்ணுகின்றேன். பனங்கள்ளை ராக்கட்டுக்குரிய எரிபொருளாகப் பாவித்து ஒரு வழியாக ராக்கட்டில் புறப்படுகின்றார்கள். இவ்விதம் பலத்த ஆரவாரங்களுடன் புறப்பட்டவர்களின் விண்வெளிக்கப்பலுடனான தொடர்பு அறுந்து விடுகின்றது. தொடர்பு அறுவதற்கு முன்னர் அவர்கள் தரையினைக் கண்டது பற்றி அறிவிக்கின்றார்கள். பூமியிலிருந்தவர்களெல்லாரும் விண்வெளிக்கப்பலில் சென்றவர்கள் நிலவில் இறங்கிவிட்டதாக எண்ணுகின்றார்கள். அவர்களது நிலை பற்றிக் கவலையுறுகின்றார்கள். ஆனால் தொடரின் இறுதியில்தான் தெரிய வருகிறது அவர்கள் இறங்கியது நிலவிலல்ல , பரந்தனுக்கு அருகிலுள்ள பிரதேசமொன்றிலென்று. இவ்விதமாகத்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. என் ஞாபகத்தில் பிழைகள் இருக்கக்கூடும். ஆனால அன்றைய காலகட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்துச் சிரித்து மேற்படி தொடரினை வாசித்தது மட்டும் இன்னும் நினவிலிருக்கிறது. ஈழத்தில் நகைச்சுவைப் படைப்புகளைத் தந்தவர்களில் த.இந்திரலிங்கத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்.

அவ்வப்போது த.இந்திரலிங்கம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றதா என்பது பற்றிப் பார்ப்பதுண்டு. அண்மையில் த.இந்திரலிங்கம் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்தன. மொறட்டுவைப்பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பெத்தை வளாகமாகவிருந்த சமயம், நாடகவியலாளர் க.பாலேந்திரா கட்டுப்பெத்தைத் தமிழ்ச்சங்கத்தலைவராக இருந்த சமயம், பொறியியல் பீட மாணவரான யோ.க.மதுரநாயகத்தை இதழாசிரியராகக் கொண்டு வெளியான கட்டுப்பெத்தைத் தமிழ்ச்சங்க இதழான ‘நுட்பம்’ சஞ்சிகையில் வெளியான அவரது அறிவியற் சிறுகதையான ‘தொலைவிலிருந்து வந்தவர்கள்’ என்னும் சிறுகதையில் அவரைப்பற்றி வெளியான சிறு குறிப்பிலிருந்து மேலும் சில தகவல்களை அறிய முடிகின்றது. [ கட்டுப்பெத்தை வளாகம், மொறட்டுவைப்பல்கலைக்கழகமாக 1978இல் மாறியது. மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தின் 1980ஆம் ஆண்டுக்கான ‘நுட்பம்’ சஞ்சிகையின் இதழாசிரியராக நானிருந்தேன்.)

அச்சிறுகதையின் ஆரம்பத்தில் அவரைப்பற்றி வெளியான குறிப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள்:

1. த.இந்திரலிங்கம் என்னும் இளம் எழுத்தாளரின் படைப்புகள் இலங்கை மற்றும் வெளிநாட்டுச் சஞ்சிகைகளில்  ‘ஆனந்தவிகடன்’ , Readers Digest ஆகியவற்றிலும், பி.பி,சி உலகச்சேவையிலும் வெளியாகியுள்ளன. இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுமாற்றலுள்ளவர் என்பதை இவை புலப்படுத்துகின்றன.

2. சிறுகதையின் தொடக்கத்திலுள்ள த.இந்திரலிங்கத்தின் சிறு குறிப்பு: ” என் எழுத்து முயற்சிகளுக்குப் பலவகையிலும் ஊக்கமும், உற்சாகமும் அளித்துவரும் , உலகப்புகழ்பெற்ற , விஞ்ஞான எழுத்தாளரும், விஞ்ஞானியுமாகிய ஆதர் – ஸி – கிளார்க் (Arthur  C Clarke)அவர்களுக்குப் புனைகதை சமர்ப்பணம். ( இதிலிருந்து எழுத்தாளர் த.இந்திரலிங்கத்துக்கும், ஆர்தர் சி கிளார்க் அவர்களுக்குமிடையில் நிலவிய தொடர்பினையும் அறிய முடிகின்றது.

Continue Reading →