ஈழகேசரி பத்திரிகையின் பழைய பிரதிகளின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது பத்தி எழுத்தாளர் ஓருவரின் பத்திகள் என் கவனத்தை ஈர்த்தன. அவர் வேறு யாருமல்லர் ‘பாட்டைசாரி’யே அவர் அவரது ‘பாதை ஓரத்தில்’ என்னும் பத்தி ஈழகேசரியில் நாற்பதுகளின் ஆரம்பத்திலிருந்து அதன் இறுதிவரை , பத்து வருடங்களுக்கும் அதிகமாக ஈழகேசரியில் வெளியாகியிருந்தது. அப்பத்திகளினூடு அக்காலச் சமுக, அரசியல் (உள்நாட்டு & வெளிநாட்டு) நிலைமைகளை அறிய முடிந்தது. அவற்றை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அவை. அவை பற்றிய பாட்டைசாரியின் விமர்சனக் குறிப்புகள் அவை. உதாரணத்துக்கு அவரது பத்தியொன்றினைப்பார்ப்போம்:
ஈழகேசரி ஞாயிறு 29.8.48:
“இலங்கைப் பல்கலைக்கழகத்து உப அத்தியட்சகர் சமீபத்திற் சீமைக்குச் சென்றிருந்தார். அங்கு அவரை ஒரு பல்கலைக்கழகம் கெளரவப்பட்டமளித்துக் கண்ணியப்படுத்திற்று. அப்பட்டத்தைப் பிற்போக்கு அரசியல்வாதியான சேர்ச்சில் வழங்கிய்யிருந்தார். சேர்.ஜென்னிங்ஸ் இருக்கின்றாரே, அவர் ஏகாதிபத்தியத்துக்கு மிண்டு கொடுக்கும் ஒரு டாக்குத்தர். இப்பெரியாருக்கு ஏகாதிபத்தியப் பெருச்சாளியாய் சேர்ச்சில் பட்டம் வழங்கியது மிகவும் பொருத்தமானதாகும். இனி சேர் ஜென்னிங்ஸ் அவர்கள் இலங்கையிலும், மலாயாவிலும் பல்கலைக்கழகங்கள் மூலம் தாய்ப்பாஷைக்குக் குழி தோண்டலாம்.”
காடைத்தனம்
சேர் ஜென்னிங்ஸ் பிறந்தநாட்டை நோக்கிச் சென்ற காலத்தில் அவருக்குப் பதிலாகப் பேராசிரியர் ஏ.டபிள்யு மயில்வாகனம் கடமையாற்றினார். அந்தக் காலத்திற் பல்கலைக்கழகக்த்து மாணவர்கள் சிலர் காடைத்தனமாக நடந்துகொண்டதுமன்றி அங்கு முதன் முறையாகச் சேர்ந்துகொண்ட மாணவிகளைத் துன்புறுத்தினரெனவும் பத்திரிகைகளிற் படித்தோம். முஸ்பாத்திக்காகச் சில வேடிக்கைகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? பண்பாடு, சீர்சிருத்தம் என்ற பெயராற் காடைத்தனங்கள் நடைபெறுவதை யார்தான் சகிக்க முடியும்? ஆகவே, சேர் ஜென்னிங்ஸ் இலங்கை திரும்பியதும் குறித்த மாணவர்களின் சேட்டைகள் அவருக்கு எடுத்தோதப்பட்டன. கூட்டங்கூடி ஆலோசித்த பின்னர் ஏழு மாணவர்கள் சரியாகக் கண்டிக்கப்பட்டனர். இது ஏனையோருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்குமல்லவா?
அரசியற் சாஸ்திரம்
அரசியல் என்றால் அது கிள்ளுக்கீரையாகி விட்டது. இது காரணமாகத் தெரிவிற் போவோர் வருவோர் பலர் அரசியலைப்பற்றிப் புகைப்பறக்கப்பேசுகின்றனர். அரசியல் சாமனியமான கலையல்லவென்பதைத் தமிழ்க் காங்கிரஸ் அடைந்த பெரிய வெற்றியிலிருந்தும், அது கெளரவமற்ற முறையிற் சரணடைந்த தோல்வியிருந்தும் நன்கு அறிந்துகொள்ளலாம். ‘அரசியற் சாஸ்திரத்துக்கு இரண்டு முகங்களுண்டு. ஒன்று உண்மை. மற்றொன்று கற்பனை’ என ஓர் அறிஞர் கூறுகிறார். 🙂
அவர் மேலுங் கூறுவதாவது :- “அதாவது நிகழ்காலத்தில் நம் கண்முன்னே காணப்படுகின்ற அரசியல் அமைப்புகள், அவற்றின் அசைவுகள், அந்த அசைவுகளினால் உண்டாகின்ற விளைவுகள், இவைகளை உதாரணமாகக வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு எப்படியிருக்க வேண்டும், எப்படியிருந்தால் அதிகமான நன்மைகள் உண்டாகும் என்பனவ்வற்றைக் கற்பனை செய்து காட்டவேண்டியது அரசியற் சாஸ்திரத்தின் கடமையாகக் கருதப்படுகின்றது.”
தமிழ்க் காங்கிரஸுக்கு அரசியல் தூரதிருஷ்டியுமிருக்கவில்லை. கற்பனையூற்றும் சுரக்கவில்லை. ஆகவேதான் அது நிலை நிற்க முடியவில்லை.