முன்னுரை
மானிடப்பிறவியில் மகத்துவம் வாய்ந்த பிறவியாகச் சிறப்புடன் கூறப்பட்டு,காலங்காலமாய் கண்ணைக்காக்கும் இமைபோல, இல்லறத்தை நல்லறமாக நடாத்தும் பெண்மை போற்றத்தக்கது. போற்றுதற்குரிய பெண்மையைச் செவ்விலக்கியங்களின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
அகமும் புறமும்
சங்ககால மக்களின் வாழ்வியலை அகம்,புறம் என இரண்டாகச் சான்றோர் பாகுபடுத்தினர். இதில் அகமாக அமைவது வீடு; புறமாக அமைவது நாடு எனக் கொள்ளலாம். காதலும் வீரமும் எனக் குறிப்பிடினும் சாலப் பொருந்தும். வீடு சிறந்தால் நாடு சிறக்கும் என்ற முதுமொழியை கூர்மதி கொண்டு காணும் போது, பெண்மை சிறந்தால் ஆண்மை சிறக்கும் என்பதை உணரலாம். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து, நன்மக்களைப் பெற்று, சுற்றந்தழுவி, அறம் பல செய்து வாழ்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாய்க் கருதி வாழ்ந்தனர்.
“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை”
“ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம்”
என்பதைப் பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டால் அறியலாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரி, நிகர்,சமானம் என்ற மூன்று வார்த்தைகளில் ஆணித்தரமாக பதிவேற்றிய நிலை மனங்கொளத்தக்கது.
மனை விளக்கு
ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த இடத்தைப் பெறினும் மனைக்குத் தேவையான மனைவியைப் பெறாதவனாயின் அவன் வாழ்வு சிறப்படையாது. இருளை ஓடச் செய்யும் ஒளி பொருந்திய விளக்குப் போல மனைக்குரியவளாக மனைவி திகழ்கின்றாள்.
“ மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல்இடு……”
(புறம் – 314)
“ மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே…..”
(நான்மணிக்கடிகை- 105)
மேற்கூறிய பாடல்கள் வீட்டிற்குத் தேவையானவள் மனைவி என்பதைப் பெருமையுடன் கூறியுள்ளன. மனைவி இருந்தால்தான் அது மனை என்பதை செவ்விலக்கியங்கள் செம்மையாக உணர்த்தியுள்ளன.