– லண்டனில் வதியும் இலக்கிய நண்பர் பத்மநாப அய்யரிடமிருந்து 12.10.2018 அன்று எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அச்சமயம் அவரது லண்டன் நேரம் அதிகாலை 3.30 மணி. நாம் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளில் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகளின் கண்காட்சியும் நடத்தவிருக்கும் தகவல் அறிந்து அவர் தொடர்புகொண்டார். நூலகம் ஆவணக்காப்பகத்திலும் கண்காட்சியில் இடம்பெறும் ஆவணங்களை பதிவேற்றுவதற்கு ஆக்கபூர்வமாகச் செயற்படுமாறும் பத்மநாப அய்யர் விநயமாகக் கேட்டுக்கொண்டார். எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்த அவரது தொடர்ச்சியான அக்கறை முன்னுதாரணமானது. அவுஸ்திரேலியா நிகழ்வு பற்றி அறிந்ததும் தனது உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் அவர் துயில் எழுந்து உரையாடியது எனக்கு நெகிழ்வூட்டியது. இறுதியாக அவருடைய முயற்சியும் சம்பந்தப்பட்ட தவில் மேதை லயஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி – ஆவணப்படம் – இசைத்தொகுப்பையும் ரசித்திருக்கின்றேன். பத்மநாப அய்யரின் பவள விழா 2016 ஆம் ஆண்டில் நடந்தவேளையில் நான் எழுதிய பதிவை இங்கு மீண்டும் பதிவேற்றுகின்றேன். அவரது வாழ்வையும் பணிகளையும் மீண்டும் தெரிவிக்கவிரும்புகின்றேன்” – முருகபூபதி –
” ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க்கரையில் நாவலைப்படித்த பின்னர், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுதி படிக்கக்கிடைத்தது. இலங்கையில் ஒரு பிரதேசத்தில் வாழும் கடற்றொழில் புரியும் மீனவ மக்களைப்பற்றிய கதைகள். இந்த நூல் பற்றி ‘தாமரை’ யில் எழுதவிருக்கின்றேன்.” – என்று எழுதப்பட்ட ஒரு வாசகர் கடிதம் 1975 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மல்லிகையில் வெளியானது. அதனை எழுதியிருந்தவர், தமிழக முற்போக்கு இலக்கிய விமர்சகர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். அவரை நான் பார்த்ததுமில்லை. அதனால் பேசியதும் இல்லை. என் எழுத்துக்களை எனது முதல் நூலின் ஊடாக அவருக்கு அறிமுகப்படுத்தியவர்தான் அண்மையில் பவளவிழா நாயகனாக எம்மவர்களினால் கொண்டாடப்படும் நண்பர் பத்மநாப அய்யர்.
அண்மையில் நடந்த எமது 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்காக குவின்ஸ்லாந்து மாநிலத்திற்கு புறப்பட்ட தருணத்தில் அவருக்கு பவளவிழா என்ற செய்தியை நண்பர் கிரிதரனின் பதிவுகளில் பார்த்தேன். உடனடியாக எனது நீண்ட கால நண்பர் பற்றிய பதிவை எழுதமுடியாதிருந்த வேலைப்பளுவுக்கு மத்தியில் அவர் பற்றிய பழைய நினைவுகளுடன் விமானம் ஏறினேன். அங்கு சென்ற பின்னர் – நண்பர் நடேசன் சொன்ன முகநூல் குறிப்புகள், என்னை வருத்தியது. என்னிடம் இந்த முகநூல் இல்லாதிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று மீண்டும் உணர்ந்தேன். ஒரு வாழ்நாள் சாதனையாளர் – தொடர்ச்சியாக எமது கலை இலக்கியத்திற்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த ஒருவர் கொண்டாடப்படும் அரிதான தருணம் அவர் கடக்கும் வயதின் எல்லைகள்தான். அத்தகைய ஒரு எல்லையில் அவரை எவ்வாறு அழைப்பது ? எப்படி எழுதுவது ? என்ன பெயர் சொல்லி விளிப்பது ? முதலான சர்ச்சைகள் அவசியமற்றவை.