எழுத்தாளர் கோமகன் தன் முகநூற் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “வாசிக்க வேண்டுமே என்பதற்காக எல்லாவற்றையும் வாசித்தால் இறுதியில் மண்டை சுக்கு நூறாகி வெடித்துவிடும் என்பது மட்டுமல்லாது தனக்குரிய கற்பனைவளத்தையும் சுயத்தையும் அது மழுங்கடித்து விடும். ஆக ஒருவனுக்கு எழுத்தும் கற்பனை வளமும் தானாக வரவேண்டியது ஒன்றாகும். அதற்கு வாசிப்பு பெரிதாக உதவப் போவதில்லை. வேண்டுமானால் அவை ஒருவரது எழுத்துப்பற்றிய ஒப்பீட்டுக்குத் துணை நிற்கலாம்.”
வாசிப்பு என்பது தானாக விரும்பி வாசிப்பது. சிலர் வேலை காரணமாகவும் வாசிக்கின்றார்கள். உதாரணத்துக்குப் பத்திரிகை நிறுவனமொன்றில் வேலை பார்ப்பவர் வேலையின் காரணமாக கட்டாய வாசிப்புக்குத் தன்னை ஆட்படுத்த வேண்டிய தேவையுண்டு. அவ்வகையான வாசிப்பை நான் இங்கு குறிப்பிடவில்லை. கோமகனும் அவ்விதமான வாசிப்பைக் குறிப்பிடவில்லை எனவும் கருதுகின்றேன். வாசிப்பு என்பது இன்பத்தைத்தருமொன்று. அதற்கு வாழ்நாளே போதாது என்பதுதான் என்னைப்பொறுத்த குறை. வாசிப்பு என்னைப்பொறுத்தவரையில் மூச்சு விடுவதைப்போன்றது. மூச்சு விடுவதால் மண்டை வெடித்து விடுவதில்லை. வாசிக்காமல் இருந்தால்தான் மண்டை வெடித்து விடும். என்னைப்பொறுத்தவரையில்.
அதிக வாசிப்பு என்பது ‘தனக்குரிய கற்பனைவளத்தையும் சுயத்தையும் அது மழுங்கடித்து விடும்’ என்றும் கோமகன் கூறுகின்றார். உண்மையில் பரந்த வாசிப்பு ஒருவரின் கற்பனை வளத்தையும், படைப்பாற்றலையும் மேலும் செழுமை அடைய வைக்குமென்பதே என் கருத்து. பரந்த வாசிப்பு காரணமாக ஒருவரின் எழுத்தாற்றல் மேன்மேலும் வளர்கின்றது. பரிணாமமடைகின்றது. மொழியைக் கையாடும் ஆற்றலும் மேலும் வளர்கின்றது.
அத்துடன் ஒருவனுக்கு ‘எழுத்தும் கற்பனை வளமும் தானாக வரவேண்டியது ஒன்றாகும். அதற்கு வாசிப்பு பெரிதாக உதவப் போவதில்லை ‘ என்றும் கூறுகின்றார். எழுதும் ஆர்வம் என்பது பலருக்குத் தானாக பரம்பரை உயிரணுக்களின் பாதிப்பு காரணமாக வரலாம். அவ்விதம் இல்லாமலும் வாழும் சூழல் காரணமாகவும் வரலாம். கற்பனை வளம் என்பது அவரது வாசிப்பு , சிந்தனையாற்றல், பலவகை அனுபவங்கள் மற்றும் பரம்பரை உயிரணுக்களின் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக செழுமையடையலாம். இது என் கருத்து. ஒருவரின் எழுத்துச்சிறப்புக்கும், படைப்பாற்றலுக்கும் நிச்சயம் வாசிப்பு பெரிதும் உதவும் என்பது என் கருத்து. உதாரணத்துக்குச் சங்கீதத்தில் ஆர்வமுள்ள ஒருவரின் திறமை வளர்வதற்கு அவர் நிச்சயம் அத்துறையில் மேலும் கற்க வேண்டும். பிறப்பிலேயே அவருக்குப் பாடும் திறமை இருந்தாலும் அவர் அத்துறையில் கற்காமல் சிறக்க முடியாது. சிலர் விதிவிலக்காக ஆரம்பத்தில் பிரகாசித்தாலும், அப்பிரகாசம் மேலும் சிறப்படையை பயிற்சியும், கல்வியும் அவசியம். இது போலவே எழுத்தைப்பொறுத்தவரையில் வாசிப்பு எழுத்தின் சிறப்புக்கு மிகவும் அத்தியாவசியமானதொன்று.
Continue Reading →