அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம். அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது ‘தணியாத தாக’த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் ‘களனி வெள்ளம்’ என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.
இவ்விதமானதொரு சூழலில் ‘மனக்கண்’ நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை ‘லீகல் சைஸ்’ அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.
நாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.