நேற்று மாலை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் ‘மகாவலி (L) – வாழ்வும் அரசியலும்’ நிகழ்வு ‘சமாதானத்துக்கான கனேடியர்கள் மற்றும் ‘சம உரிமை இயக்கம்’ ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரைக் காண முடிந்தது.
நிகழ்வினை அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன் ராஜசிங்கம் தலைமையேற்றுச் சிறப்பாக நடத்தினார். நிகழ்வில் மூவரின் உரைகள் இடம் பெற்றன. பேராசிரியர் சிவச்சந்திரன் ‘வடக்கின் நீர்வள மேம்பாடும் எதிர் நோக்கும் பிரச்சினைகளும்’ என்னும் தலைப்பிலும், மகாவலி அதிகாரசபை முன்னாள் ஊழியர் மோகன் அந்தோனிப்பிள்ளை ‘பயனற்ற குடியேற திட்டங்களும் பலிக்கடா ஆக்கப்பட்ட குடியேற்றவாசிகளும்’ என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த புபுது ஜயகொடவின் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்ட ‘மகாவலியும் குடியேற்றமும்’ காணொளி உரை நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.
இம்மூவரின் உரைகளும் மிகுந்த பயனைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் தந்திருக்கும். ஏனெனில் எனக்கு அவ்விதமான உணர்வே ஏற்பட்டது.
மோகன் அந்தோனிப்பிள்ளை மகாவலித் திட்டத்தில் பணியாற்றியபோது அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களிலேயே ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர் தனதுரையில் இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்திலிருந்து இலங்கை அரசுகளால் (மகாவலித் திட்டமுட்பட) உருவாக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், அவை எவ்விதம் தமிழ்ப்பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படப்பாவிக்கப்பட்டன என்பது பற்றிய்யும் எடுத்துரைத்தார். அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் கவனத்தை ஈர்த்தது. அது: டி.எஸ்.சேனநாயக்காவின் குடியேற்றத்திட்டங்கள் அக்காலகட்டத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கிய இடதுசாரிகளின் செல்வாக்கினை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டன. அதற்காக இடதுசாரிகளின் கோட்டைகளாக விளங்கிய பிரதேசங்களில் இவ்விதமான குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம் இத்திட்டங்களின் மூலம் பயனடையும் குடியேற்றவாசிகளின் ஆதரவினை வென்றெடுக்கலாம் என்பது டி.எஸ்.சேனநாயக்கா போன்றவர்களின் எண்ணமாகவிருந்தது. இச்சாரப்பட மோகன அந்தோனிப்பிள்ளையின் கருத்து அமைந்திருந்தது.