ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்
– முதல் அத்தியாயம் – பணக்கார வீட்டுப் பிள்ளை
ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. “ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?” என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு. ஆனால் அதை எப்படிக் கண்டறிவது? அந்தக் கடைக்கு போவதற்குத்தான் வீட்டிலுள்ள யாருமே அவனை அனுமதிப்பதில்லையே! ஆகவே அந்த விஷயம் என்றைக்குமே தீர்க்கப்படாத மர்மமாகவே அவன் உள்ளத்தில் புதையுண்டுவிட்டது.
இன்னும் கிழவியின் தட்டிக் கடையில் இன்னொரு விசேஷமும் இருந்தது. அது வேறொன்றுமல்ல, அங்கிருந்த மிக அகலமான வாயுள்ள ஒரு போத்தலாகும். அப்போத்தலில் சில சமயங்களில் ஏதோ ஒரு வகைப் பணிகாரத்தை அவள் நிரப்பி வைத்திருப்பாள். ஊரிலுள்ள ஏழைச் சிறுவர் சிறுமியர் அவற்றை விலைக்கு வாங்கி மகிழ்ச்சியுடன் உண்டுக்கொண்டு, கிராமத்தின் புழுதி படர்ந்த வீதியில் ஆடிப்பாடிச்சண்டையிட்டுக்கொண்டு செல்வார்கள். ஸ்ரீதர் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்பான். அவனுக்குப் பணிகாரம் சாப்பிட்டுக் கொண்டு போவதற்குப் பேராசை. ஆனால் யார் அவனை அவ்வாறு செய்ய அனுமதிப்பார்கள்.
ஒரு நாள் அவனது அப்பா சிவநேசரிடம் ஸ்ரீதர், “அப்பா அந்த போத்தலில் இருக்கும் பணிகாரத்தை எனக்கு வாங்கித் தா அப்பா” என்று கேட்டான். அதற்குச் சிவநேசர் அளித்த கண்டிப்பான பதில் என்ன தெரியுமா? “சீச்சீ, அதை அதைச் சாப்பிட்டால் நிச்சயம் நோய்கள் உண்டாகும்.” இவ்வாறு கூறிய தந்தை ஸ்ரீதரை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவி பாக்கியத்திடம் “ஸ்ரீதருக்கு நான் நேற்று வாங்கி வந்த சொக்கிலேட்டைச் சாப்பிடக் கொடு” என்றார். பாக்கியமும் அவ்வாறே செய்தாள். ஸ்ரீதரும் சொக்கிலேட்டைச் சாப்பிட்டு முடித்த பிறகு பணிகாரத்தின் நினைவு தான் அவன் மனதில் மேலோங்கியது.