ரொறன்ரோதமிழ்ச்சங்கம் ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல்

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

“தமிழியல் ஆய்வுகள் – வரலாறும் வளர்ச்சியும்.”
பிரதம பேச்சாளர்: பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன்

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“தமிழில் பெண்ணியச் சிந்தனைகளின் தோற்றமும் வளர்ச்சியும்”  – கலாநிதி மைதிலி தயாநிதி
“தமிழரின் இசையியல் மற்றும்  நடனவியல்  ஆய்வுகள்”  – கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
“சைவத்தின் புதிய புரிதல்களும் தெரிவுகளும்” – வைத்திய கலாநிதி  இ.லம்போதரன்

ஐயந்தெளிதல்அரங்கு

நாள்: 27-10-2016
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்
Unit 7, 5633, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9

Continue Reading →

மெல்பேர்ணில் பனைமரக்காடு – முழுநீளத் திரைப்படம்

பனைமரக்காடு!ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ண் காட்சி விபரம்
காலம்: ஒக்ரோபர் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு
இடம்: Menzies Building E365, Monash University, Wellington Road, Clayton Victoria
அன்பளிப்பு: $10 வெள்ளிகள்

தாயகத்திலிருந்து புதிய வெளியீடாக கேசவராஜனின் இயக்கத்தில் வெளிவரும், பனைமரக்காடு என்ற முழுநீள திரைப்படமானது போரிற்கு பின்னரான காலத்தில், தமிழ்மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஈழத்து படைப்புக்களமானது உரியவகையில் ஆதரவு வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படாது போனால், எமது தாயகத்தின் உயிர்ப்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும். இருக்கின்ற இடைவெளியில் எமது மக்களின் உணர்வுகள் சிலவற்றை சொல்லலாம், சிலவற்றை சொல்லாமல் சொல்லலாம் எனச்சொல்லும் இயக்குநர், 1986 இல் “தாயகமே தாகம்” என்ற திரைப்படத்துடன் அறிமுகமாகி, தமிழீழ திரைப்படத்துறையின் ஊடாக பிரபலமான “பிஞ்சுமனம்”, “திசைகள் வெளிக்கும்”, கடற்புலிகளின் “கடலோரக்காற்று”, “அம்மா நலமா” என்ற திரைப்படங்களையும் பல குறும்படங்களையும் இயக்கியவர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 299 : பாட்டைசாரியின் ”பாதை ஓரத்தில்”! ‘பாட்டைசாரி’ யார்?

பாட்டைசாரியின் பாதை ஒரத்தில்

ஈழகேசரி பத்திரிகையின் பழைய பிரதிகளின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது பத்தி எழுத்தாளர் ஓருவரின் பத்திகள் என் கவனத்தை ஈர்த்தன. அவர் வேறு யாருமல்லர் ‘பாட்டைசாரி’யே அவர் அவரது ‘பாதை ஓரத்தில்’ என்னும் பத்தி ஈழகேசரியில் நாற்பதுகளின் ஆரம்பத்திலிருந்து  அதன் இறுதிவரை , பத்து வருடங்களுக்கும் அதிகமாக ஈழகேசரியில் வெளியாகியிருந்தது. அப்பத்திகளினூடு அக்காலச் சமுக, அரசியல் (உள்நாட்டு & வெளிநாட்டு) நிலைமைகளை அறிய முடிந்தது. அவற்றை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அவை. அவை பற்றிய பாட்டைசாரியின் விமர்சனக் குறிப்புகள் அவை. உதாரணத்துக்கு அவரது பத்தியொன்றினைப்பார்ப்போம்:

ஈழகேசரி ஞாயிறு 29.8.48:
“இலங்கைப் பல்கலைக்கழகத்து உப அத்தியட்சகர் சமீபத்திற் சீமைக்குச் சென்றிருந்தார். அங்கு அவரை ஒரு பல்கலைக்கழகம் கெளரவப்பட்டமளித்துக் கண்ணியப்படுத்திற்று. அப்பட்டத்தைப் பிற்போக்கு அரசியல்வாதியான சேர்ச்சில் வழங்கிய்யிருந்தார். சேர்.ஜென்னிங்ஸ் இருக்கின்றாரே, அவர் ஏகாதிபத்தியத்துக்கு மிண்டு கொடுக்கும் ஒரு டாக்குத்தர். இப்பெரியாருக்கு ஏகாதிபத்தியப் பெருச்சாளியாய் சேர்ச்சில் பட்டம் வழங்கியது மிகவும் பொருத்தமானதாகும். இனி சேர் ஜென்னிங்ஸ் அவர்கள் இலங்கையிலும், மலாயாவிலும் பல்கலைக்கழகங்கள் மூலம் தாய்ப்பாஷைக்குக் குழி தோண்டலாம்.”

காடைத்தனம்
சேர் ஜென்னிங்ஸ் பிறந்தநாட்டை நோக்கிச் சென்ற காலத்தில் அவருக்குப் பதிலாகப்  பேராசிரியர் ஏ.டபிள்யு மயில்வாகனம் கடமையாற்றினார். அந்தக் காலத்திற் பல்கலைக்கழகக்த்து மாணவர்கள் சிலர் காடைத்தனமாக நடந்துகொண்டதுமன்றி அங்கு முதன் முறையாகச் சேர்ந்துகொண்ட மாணவிகளைத் துன்புறுத்தினரெனவும் பத்திரிகைகளிற் படித்தோம்.  முஸ்பாத்திக்காகச் சில வேடிக்கைகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? பண்பாடு, சீர்சிருத்தம் என்ற பெயராற் காடைத்தனங்கள் நடைபெறுவதை யார்தான் சகிக்க முடியும்? ஆகவே, சேர் ஜென்னிங்ஸ் இலங்கை திரும்பியதும் குறித்த மாணவர்களின் சேட்டைகள் அவருக்கு எடுத்தோதப்பட்டன. கூட்டங்கூடி ஆலோசித்த பின்னர் ஏழு மாணவர்கள் சரியாகக் கண்டிக்கப்பட்டனர். இது ஏனையோருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்குமல்லவா?

அரசியற் சாஸ்திரம்
அரசியல் என்றால் அது கிள்ளுக்கீரையாகி விட்டது. இது காரணமாகத் தெரிவிற் போவோர் வருவோர் பலர் அரசியலைப்பற்றிப் புகைப்பறக்கப்பேசுகின்றனர். அரசியல் சாமனியமான கலையல்லவென்பதைத் தமிழ்க் காங்கிரஸ் அடைந்த பெரிய வெற்றியிலிருந்தும், அது கெளரவமற்ற முறையிற் சரணடைந்த  தோல்வியிருந்தும் நன்கு அறிந்துகொள்ளலாம். ‘அரசியற் சாஸ்திரத்துக்கு இரண்டு முகங்களுண்டு. ஒன்று உண்மை. மற்றொன்று கற்பனை’ என ஓர் அறிஞர் கூறுகிறார். 🙂

அவர் மேலுங் கூறுவதாவது :- “அதாவது நிகழ்காலத்தில் நம் கண்முன்னே காணப்படுகின்ற அரசியல் அமைப்புகள், அவற்றின் அசைவுகள், அந்த அசைவுகளினால் உண்டாகின்ற விளைவுகள், இவைகளை உதாரணமாகக வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு எப்படியிருக்க வேண்டும், எப்படியிருந்தால் அதிகமான நன்மைகள் உண்டாகும் என்பனவ்வற்றைக் கற்பனை செய்து காட்டவேண்டியது அரசியற் சாஸ்திரத்தின் கடமையாகக் கருதப்படுகின்றது.”

தமிழ்க் காங்கிரஸுக்கு அரசியல் தூரதிருஷ்டியுமிருக்கவில்லை. கற்பனையூற்றும் சுரக்கவில்லை. ஆகவேதான் அது நிலை நிற்க முடியவில்லை.

Continue Reading →

அஞ்சலிக்குறிப்பு: ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் பதிவுசெய்து, அற்பாயுளில் மறைந்த இலக்கியத்தேவதை கெக்கிராவ ஸஹானா! மல்லிகை ஜீவா, ஜெயகாந்தனின் ஆசிபெற்று வளர்ந்த இலக்கிய ஆளுமை!

திருமதி ஸஹானா“திருமதி ஸஹானாவின் ‘ஒரு தேவதையின் கனவு’ சிறுகதைத்தொகுதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற மொழிந்திடவும், சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் எழுதும் படைப்புகள் காலத்தால் என்றென்றும் போற்றப்படும். அவை என்றும் புதியவை. அத்தகு இலக்கியவரிசையில் தேவதையின் கனவும் இடம்பெற வாழ்த்துகின்றேன்” என்று 22-01-1997 ஆம் திகதி சென்னையிலிருந்து ஜெயகாந்தன் வாழ்த்தியிருந்த, ஈழத்தின் இலக்கியப்படைப்பாளி கெக்கிராவ ஸஹானாவும் கடந்த மாதம் எங்கள் இலக்கிய உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். “அற்பாயுள் மரணமும் மேதா விலாசத்தின் அடையாளமோ? ” என்று ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் சுந்தரராமசாமி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. 1968 இல் பிறந்து 2018 இல் மறைந்துள்ள கெக்கிராவ ஸஹானா, குறுகிய காலத்தில் ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டு பிரகாசித்த நட்சத்திரம். எங்கள் மத்தியில் உதிர்ந்துள்ள இந்த நட்சத்திரம் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளவை அவருடைய அருமைக்குழந்தைகளும், இலக்கியப்பிரதிகளும்தான்.  இனி எம்முடன் பேசவிருப்பவை கெக்கிராவ ஸஹானவின் ஆக்க இலக்கியப்படைப்புகளும் ஆய்வுகளும் மொழிபெயர்ப்பு பிரதிகளும்தான்.

கவிதை, சிறுகதை, விமர்சனம், அறிவியல் கட்டுரைகள் ஊடாக பாடசாலைப்பருவம் முதலே தேடலில் ஈடுபட்டு வந்துள்ள ஸஹானா ஆசிரியையாக பணியாற்றியவர். டொமினிக் ஜீவாவின் மல்லிகை கண்டெடுத்த இலக்கிய மலர், இலங்கையிலும் தமிழகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மணம்பரப்பியது. மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான காலத்தில், 1980 காலப்பகுதியில் 12 வயதுச்சிறுமியாக பாடசாலையில் பயிலும் காலத்தில் இவருக்கு அதனை அறிமுகப்படுத்தியவர் மர்ஹ_ம் கோயா அப்பாஸ் என்பவர் என்ற தகவலை மறக்காமல் நன்றியுணர்வோடு தனது முதல் கதைத்தொகுப்பான ஒரு தேவதைக்கனவு நூலின் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை வானொலி, நாளாந்த தினசரிகள், தென்னிந்திய சஞ்சிகைகள் மூலமாகவும் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடனும் பாரதி முதல் ஜெயகாந்தன் வரையில் தேடிக்கற்றவருக்கு – இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத அந்த இளம் பருவத்தில் இவருக்கு மல்லிகை அறிமுகமாகியிருக்கிறது. மல்லிகை ஆக்கங்கள் அந்தச்சிறுமிக்கு பிரமிப்பூட்டியவை. அதனால் வாசிப்பதுடன் நின்றுகொண்டவர், அதில் எழுதுவதற்கு தயங்கியிருக்கிறார். எனினும் எழுதிப்பார்க்கத்தூண்டிய பல படைப்புகளை இனம் கண்டுள்ளார். இலங்கை வானொலி ஒலிமஞ்சரிக்கு எழுதிய முதல் கவிதையும் முதல் சிறுகதையும் ஒலிபரப்பாகியதையடுத்து, தன்னாலும் தொடர்ந்து ஆக்க இலக்கியம் படைக்கமுடியும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. தனது ஆரம்ப இலக்கியப்பிரதிக்கு அங்கீகாரம் வழங்கி, களம் தந்திருக்கும் வானொலி அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட் அவர்களுக்கும் தனது முதல் கதைத்தொகுப்பில் மறக்காமல் நன்றி தெரிவிக்கின்றார் ஸஹானா.

எண்பதுகளின் இறுதியில் பாடசாலை இறுதித்தேர்வை முடித்துவிட்டு கிடைத்திருந்த விடுமுறைக்காலத்தில் வீட்டில் சேகரித்துவைத்திருந்த அனைத்து மல்லிகை இதழ்களையும் மீண்டும் எடுத்துப்படிக்கிறார். மல்லிகை பற்றிய ஒரு நீள் வெட்டுமுகத்தோற்றம் அவர் மனதில் பதிவாகிறது. மல்லிகையில் வெளிவந்த இலக்கியப்பிரதிகளை விட அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவின் சோர்வற்ற கடின உழைப்பும் ஒவ்வொரு மாதமும் மல்லிகையை வெளியிடுவதற்கு அவர் சந்திக்கும் சவால்களும் கவனத்தை ஈர்க்கின்றன. அதுவரையில் மல்லிகையில் எழுதாமலிருந்த ஸஹானா ஒரு நீண்ட இலக்கியமடலை மல்லிகைக்கு அனுப்புகின்றார். அதனையடுத்து, மல்லிகை இதழ்கள் மட்டுமன்றி மல்லிகைப்பந்தல் வெளியீடுகளும் அவருடைய கெக்கிராவ இல்லத்திற்கு வருகின்றன.

Continue Reading →

நாவல்: பெரியவர் மற்றும் கடல் (The Old Man And The Sea)

நாவல்: பெரியவர் மற்றும் கடல் (The Old Man And The Sea)ஹெமிங்வே – எழுத்தாளர் சங்கரநாராணன் http://hemingwaytamil.blogspot.com என்னும் வலைப்பதிவினை உருவாக்கி அதில் ஹெமிங்வேயின் புகழ் மிக்க நாவல்களிலொன்றான ‘The Old Man And The Sea’ என்னும் நாவலை ‘பெரியவர் மற்றும் கடல்’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அவற்றை மேற்படி வலைப்பதிவில் பகுதி பகுதியாக வெளியீட்டும் வருகின்றார். அவற்றை நன்றியுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் –


ஹெமிங்வே 1899ல் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஓக் பார்க் என்ற ஊரில் பிறந்தார். 1917ல் கன்சாஸ் சிடி ஸ்டார் இதழில் எழுத ஆரம்பித்தார். முதல் உலகப் போரில் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டியாக இணைந்து கொண்டார். என்றாலும் காயம்பட்டு வீடு திரும்ப நேர்ந்தது. 1921 முதல் அவர் பாரிஸ் நகரத்தில் வாழ ஆரம்பித்தார். 1923ல் அரது முதல் முதல் புத்தகம் ‘மூன்று கதைகளும் பத்து கவிதைகளும்’ பாரிசில் வெளியானது. அடுத்ததாக அவரது சிறுகதைத் தொகுதி ‘நம் காலத்தில்’ 1925ல் அமெரிக்காவில் வெளியானது. 1926ல் வெளியான அவரது புத்தகம் ‘சூரியனும் உதிக்கிறான்’ வெளியானபோது அவர் ‘கடந்த தலைமுறை’யின் குரலாக அடையாளம் காணப் பட்டார். 1930 களில் அவர் கீ வெஸ்டிலும், பிறகு கியூபாவிலும் வசித்தார். என்றாலும் ஸ்பெய்ன், ஃப்ளாரிடா, இத்தாலி, ஆபிரிகா என பயணங்கள் செய்தார். அந்த அனுபவங்களில் எருதுபொருதுதல், வேட்டை என்று அவர் கதைகள் எழுதலானார். ஸ்பானிய உள்நாட்டுப் போரில் நிருபராக இருந்ததில், போர்ப் பின்னணியில் அவரால் ‘யாரை நோக்கி மணியோசை?’ என்கிற அருமையான நாவலைத் தர முடிந்தது. பெரியவர் மற்றும் கடல் என்கிற இந்த நாவல் 1951ல் எழுதப்பட்டு, 1953 ல் புலிட்சர் விருது இதற்கு அறிவிக்கப் பட்டது. 1954ல் ‘இனி வேண்டாம் ஆயுதங்கள்’ என்ற அவரது நாவல் நோபல் பரிசு வென்றது. 1961ல் ஹேமிங்வே தற்கொலை செய்துகொண்டார்.

மீளவும் நான் ஹெமிங்வேயிடம் வந்திருக்கிறேன். இடையே ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைக்கும் ‘ஓல்ட் மேன் அன்ட் தி சீ’ ஒரு பிரமிப்பளிக்கிற கதை. ஒரு தளத்தில் அது மனிதன் ஒருவனுக்கும் ஒரு மீனுக்கும் நடக்கிற கதை. இன்னொரு விதத்தில் பார்த்தால் அது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஊடாட்டம். வேறொரு கோணத்தில், கால காலமான மானுடத்தின் பண்பாட்டையும், வீரத்தையும், இருத்தல் சார்ந்த சவால்களின் முன் மானுடத்தின் பராக்கிரமத்தையும் விவரித்துச் செல்வதாய் அமைகிறது. இது வெளியான காலத்தின் ஆவணமாகவும், அந்த வாழ்க்கை அதன் சூழல் அதில் தனி மனிதப் பங்களிப்பு எனவும் இதை அறிய முடியும். குழுக்களாகவோ, அமைப்புகளாகவோ அல்லாமல் ஒரு தனி மனிதனின் இயக்கம், செயல்பாடு அக்கால அஎமரிக்க வாழ்க்கை இது.

இதில் வரும் கிழவனின் துணிச்சலையும், இயல்பான தினவையும் ஹெமிங்வே கொண்டாடுகிறார்.

ஹெமிங்வேயின் உலகம் வேறு. என் உலகம் வேறு. இந்தக் கதையின் கிழவன், அந்த சாண்டியாகோ அல்ல நான். இன்றைய வாழ்க்கை ஒழுங்குகளை வைத்துச் சொல்கையில், ஹெமிங்வே பரத்திக் காட்டுகிற இந்தக் கிழவன் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு முற்றிலும் அந்நியமானது தான்.

என்றாலும் ஹெமிங்வேயின் வீர்யமான கதைகூறு திறன், நான் என்னை அறியாமல் சாண்டியாகோ பக்கம் நிற்கிறேன். அவனை வியப்புடன் நோக்குகிறேன். அவனுக்கு மீறிய நெருக்கடிகளில் அவன் அடையும் இழப்புகள் எனக்கு வலிக்கின்றன. தன் காலத்தில் மனிதன் தனது இருத்தலுக்காகவே கூட இயற்கையோடு போராட வேண்டி யிருந்தது, என்பதை ஹெமிங்வே சுட்டிக் காட்டிப் பதிவு செய்கிறார். தலையசைத்து ஆமோதிக்கவும், அந்த நாட்களை நினைவு கூரவும் ஹெமிங்வே வழி வகை செய்கிறார். சிறப்பாக, தனி மனிதன் எத்தனை மகத்தானவன், என்பதை, அவனது அபாரத் துணச்சலை, திறமையை, கலாரசனையை, பிரச்னைகளில் தாக்கு பிடிக்கிற ஆத்ம வலிமையை எல்லாம் அவர் இந்த நாவலில் உணர வைக்கிறார்.

மொழிபெயர்ப்பு தனிக் கலை. என் வாசகத் தளத்தை அது பரத்தி விரிக்கிறது. அகலப்படுத்தி ஆழப்படுத்துகிறது. வாசகனாக நான் அதிர்ஷ்டம் செய்தவனாகிறேன். ஹெமிங்வே என் ஆசான். உலக இலக்கியத்துக்கே அவர் நெறியாளர். அவரது இந்த நாவலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. ‘ஓல்ட் மேன் அன்ட் தி ஸீ’ நாவலை நான் ஆங்கிலத்தில் தான் வாசித்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஓர் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை அது எனக்குக் கற்பித்தது. தனியே ஒரு கிழவன். அவனது அசாத்திய தன்னம்பிக்கை. அவன் மாத்திரமே பிரம்மாண்டமான கடலில். கூட அவனிடம் சிக்கிய பெரிய மீன். அதனுடன் அவனது போராட்டம். யார் ஜெயிக்கப் போகிறாரகள்?… என்கிற முடிச்சு. ஆ, மனிதன் மகத்தானவன் என்ற முத்தாய்ப்பு. எத்தனை வசிகரமான கரு. என்ன வசிகரமான நடை. வாழ்க்கை மீதான பிரியம். சவால்களின் தேடல். சாதனைத் தினவு. கிழவன் மறறும் மீன். தவிர கடல். இதில் கிழவன் தனக்குத் தானே பேசிக் கொள்கிற உத்தி அற்புதமானது. முழு கதையையும் இந்த உத்தியில் ஹெமிங்வே சிரமம் இல்லாமல் கூறிச் செல்ல முடிகிறது… இந்த உத்திதான் அந்த வயதில், என் எழுத்தின் மொட்டுப் பருவத்தில் என்னைக் கிறங்க வைத்தது. ஹெமிங்வே என் ஆசான்.

Continue Reading →