ஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து தேசத்தைச் சூறையாடுவதையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக அடுத்தவர் மீது பழி சுமத்தும் தலைவர்கள் இலங்கையை மீண்டும் மீண்டும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனும் பொய்காரரை ஜனாதிபதியாக ஆக்கியது இந் நாட்டு மக்களால் நிகழ்த்தப்பட்ட மிகவும் பாரதூரமான, தவறான முடிவாக மாறியிருக்கிறது. தனது அளவிட முடியாத தன்னம்பிக்கையோடு, சில தினங்களுக்கு முன்னர் அவர் பாராளுமன்றத்தின் அதிகப்படியான வாக்குகள் தனக்கேயுள்ளன எனப் பெருமையடித்துக் கொண்டிருந்தார். எனினும், அவரது வாய்ச் சவடால் பொய்யாகி, அவருக்கு எவ்விதத்திலும் ஆதரவற்ற நிஜ உலகும், யதார்த்தமும் தென்படத் தொடங்கிய போது, அதனை மறைப்பதற்காக அவர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் புதியதொரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி, இலங்கையின் ஆட்சியமைப்பைக் கேலிக்குரியதாக்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இரவு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் மீண்டும் இலங்கை அரசியலமைப்பைக் கையிலெடுத்து விளையாட்டுக் காட்டத் தொடங்கியிருக்கிறார். இனி இது மாதக் கணக்கில் நீடிக்கக் கூடும்.
ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை, தான் புதிதாக அமைக்கப் போகும் ஆட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் ஆதரவு இருப்பதாகவும், தான் ஒருபோதும் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லையெனவும் கூறிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அவ்வாறு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்தால் புதிதாக இணைந்துள்ள பாராளுமன்ற அமைச்சர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழியில்லாமல் போகும். அதனால், தான் அதனைச் செய்யப் போவதில்லை என ஒன்பதாம் திகதி காலைவேளை கூட கூறிவிட்டு அன்றிரவே திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டார்.
இவ்வாறா நாட்டின் பிரதான பொறுப்பிலிருக்கும் ஜனாதிபதி சட்டத்தைச் சீர் குலைக்கும் விதத்தில் செயற்பட்டதோடு, மொத்த தேசத்தையும் பொய் கூறி ஏமாற்றியிருக்கிறார். அவரது இவ்வாறான மோசமானதும், இழிவானதுமான செயற்பாடு நாட்டு மக்களுக்கும், இளந் தலைமுறையினருக்கும் எடுத்துக் காட்டுவது என்ன? அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தப் பொய்யையும் கூறி, எவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளிலும் எவரும் நேர்மையும், வெட்கமுமின்றி ஈடுபடலாம் என்பதைத் தானே?
இன்று, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை அரசியலையும், அரசாங்கத்தையும், ஆட்சிப் பொறுப்பையும், அதிகாரத்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டு, இலேசானதல்ல. பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த விளையாட்டுக்காக நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பரம்பரை பரம்பரையாக எதிர்காலத்திலும் நஷ்ட ஈட்டினைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும் பொறுக்கித்தனமான செயற்பாடு இது. அவர் கலாசார மதத் துணியால் தன்னைப் போர்த்திக் கொண்டு, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தவாறு, ஜனநாயக் கோட்பாடுகளோடு மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பொறுக்கியாக மிளிர்கிறார்.