காலந்தோறும் அறங்கள் புதுப்பிக்கப்பெறுகின்றன. பழைமையில் பிடிப்புள்ளவர்கள்> புதுமையை விரும்புகிறவர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் தத்தளிப்பவர்கள் என்று குழம்பிக் குழம்பித்தான் சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. குடும்ப வாழ்வில் ஆணுக்கு இருக்கிற உரிமையும் சமுத்துவமும் பெண்களுக்கு இன்றைக்கு இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. ஆண் சொல்வதைத் தான் பெண் கேட்டு நடக்க முடியும். குடும்பத்தில் பெண்ணைக் கலந்தாலோசித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலை இருந்தது. குடும்பத் தலைவனாகிய ஆண் சொல்வதே முடிவு. அதை எவராலும் மாற்ற முடியாது.
இவற்றுக்கு எல்லாம் மேலாக கணவன் இறந்த பின் மனைவி உயிரோடு இருக்கக் கூடாது என்று ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்பட்டது. ஆனாலும் கணவனை இழந்த பெண்கள் எவ்வளவு சிறு வயதாக இருந்தாலும் அவர்களுக்கு மொட்டையடித்து வெள்ளை ஆடை உடுத்தி, உணவு முறைகளையும் மாற்றி எங்கும் வெளியில் விடாமல் கொடுமைப்படுத்தி வைத்திருந்தனர். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கேற்ப பெண்களைக் கொடுமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்த முறைகளை எல்லாம் மாற்றி, அவர்களுக்கு நல்லாழ்வளிக்க வேண்டுமென்று பல தலைவர்களும், கவிஞர்களும் போராடினார்கள்.
பெண் விடுதலைக்காகத் தன்னுடைய கவிதைகள், சிறுகதைகள் மூலம் போராடியவர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் நம் புரட்சிக்கவி பாரதியார். கற்பென்றாலே அது பெண்ணுக்கு மட்டுமே உரியது எனக் கூறிய சமுதாயத்தில்,
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும், அஃது பொதுவில் வைப்போம்”
என்று உரக்கப் பாடியவர் பாரதியார். எந்தவொரு மூடக் கட்டுப்பாட்டையும் தகர்க்க நினைக்கும் போது பல இடையூறுகள் வரும். ஆனால் அதையெல்லாம் தாண்டி பாரதி பெண்களுக்கு விடுதலை கொடுப்பதின் ஆரம்ப நிலையாக சில கருத்துக்களை முன் வைக்கிறார்.
“பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவனை அவமானப்படுத்தக் கூடாது. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும். பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால் பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்” என்று உறுதி கூறுகிறார் பாரதியார்.