– விரைவில் வெளிவரவிருக்கும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலின் இறுதி அங்கத்தில் இடம்பெறும் ஆக்கம் –
தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பிறந்திருக்கும் சுப்பிரமணியன் சுப்பையாவாகி, தனது 11 வயதில் பாரதியாகி, 1921 செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி சென்னையில் திருவல்லிக்கேணியில் மறைந்தார். அவருக்கு டிசம்பர் 11 ஆம் திகதி 136 வயது! பாரதியை இன்றும் சிலர் கவிஞராக மாத்திரமே பாரக்கின்றபோதிலும் அவர் ஒரு மகாகவி என்பதை நிரூபிப்பதற்காக பலர் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். யார் கவிஞன் என்று பாரதியே ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லியுள்ளார்:
“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், எவனொருவன் வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி “. அத்துடன், ” நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ” எனவும் சொன்னவர் அவர். பாரதி தன்னை கவிஞனாகவே பிரகடனம் செய்துகொண்டிருந்தாலும், அவர் மகாகவியா..? அதற்கான தகுதி அவருக்குண்டா என்னும் வாதங்கள் நீண்ட காலம் தொடர்ந்தன. அத்துடன் அதற்கு எதிர்வினைகளும் பெருகின. பாரதி மகாகவிதான் என்பதை வலியுறுத்தும் வகையில் இலங்கைப்பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ( 1932-2011) அவர்களும் தமிழகப்பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களும் இணைந்து நீண்ட நாட்கள் ஆய்வுமேற்கொண்டு எழுதிய நூல்தான் பாரதி மறைவு முதல் மகா கவி வரை. வட இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் 1932 இல் பிறந்திருக்கும் இவர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கொழும்பு சாகிறா கல்லூரி ஆகியனவற்றின் பழைய மாணவர். தொடக்கத்தில் சாகிறாவில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கும் சிவத்தம்பி அவர்கள், இலங்கை நாடாளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். சிறந்த இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். அத்துடன் சமூகச்சிந்தனையாளர். பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று இளமாணி, முதுமாணி பட்டங்களையும் பெற்று லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதியானவர். இலங்கையில் கொழும்பு , யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களிலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியவர். பல நாடுகளில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றிய இவரது மாணாக்கர் பலரும் படைப்பிலக்கியவாதிகளாகவும் கலைஞர்களாகவும் இலக்கிய விமர்சகர்களாகவும் திகழுகின்றனர். நாடகத்துறையிலும் பங்களித்திருக்கும் பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருக்கும் பல திறனாய்வு நூல்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உசாத்துணையாக விளங்குபவை. பல விருதுகளையும் பெற்றுள்ள பேராசிரியர் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாகப்போற்றப்படுபவர். இவர் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கொழும்பில் 2011 ஆம் ஆண்டு மறைந்தார்.