அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவில் கண்ட கேள்வி பதிலொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் இலக்கணம் பற்றியும், அவ்வப்போது இலக்கணம் மீறப்படுவது பற்றியும், பின்னர் இவ்விதம் மீறப்பட்டவற்றை இலக்கணம் உள் வாங்குவதும் பற்றிய தன் எண்ணங்களை ஜெயமோகன் மிகவும் எளிமையாக ஆனால் தர்க்கச்சிறப்புடன் எடுத்துரைத்திருக்கின்றார. அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
கேள்வி பதில் – 60
இலக்கணத்தை மீறி இலக்கியம் படைப்பது சரி என்றால் பழங்காலங்களிலும் இன்றைய காலத்திலும் இலக்கணம் மீறாமல் படைக்கப்பட்ட அழியா இலக்கியங்களை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்? – கேவிஆர். –
ஜெயமோகனின் பதில்: “ஏற்கனவே இதை ஓரளவு விளக்கிவிட்டேன். ஒன்று இலக்கணம் என்பது மாறாத விதிமுறைகளின் தொகையாக என்றுமே இருந்தது இல்லை. அப்படிச்சொல்பவர்களுக்கு இலக்கிய வரலாறு தெரியாது. இலக்கணத்தை மாற்றும் சக்தி எது? இலக்கிய ஆக்கத்தில் உள்ள புதுமைநாட்ட வேகமேயாகும். அதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என நம் இலக்கணம் வரையறை செய்தது. பண்டைய படைப்புகளைப் பற்றி நாம் ஊகங்களால்தான் விவாதிக்க இயலும். தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் சாதாரணமாக ஒப்பிட்டால்கூட தொல்காப்பிய இலக்கணங்களை சங்கப்பாடல்கள் ஒரு பொருட்டாகவே கொண்டிருப்பனவல்ல என்பதையும் சொல்லப்போனால் ஆரம்பகால சங்கப்பாடல்களை ஒட்டியே தொல்காப்பியம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியும். தொல்காப்பியம் கண்டிப்பாக நற்றிணை குறுந்தொகை புறநாநூற்றுப் பாடல்களின் காலத்துக்குப் பிற்பட்டது. உதாரணமாக சங்கப்பாடல்களில் தொல்காப்பியத்தில் உள்ள ஒட்டகம் பற்றிய குறிப்பு இல்லை. தொல்காப்பியத்தைவிட சங்கப்பாடல்களில் வடமொழிச்சொற்கள் மிகக் குறைவு. மேலும் பிறப்பு அடிப்படையினாலான சமூகப் பிரிவினை சங்க காலத்தில் வலுவாக இருந்தது என்றாலும் இழிசினர் என ஒருவகை மக்களை வகுத்த முதல் மூலநூல் தொல்காப்பியமே. பேராசிரியர் ஜேசுதாசன் இதை மிக விரிவாகவே விளக்குவதுண்டு. கைக்கிளையும் பெருந்திணையும் [ஒருதலைக் காமம், பொருந்தாக் காமம்] இழிசினருக்கு [ஏவலர், வினைவலர்] உரியதென தொல்காப்பியர் வகுத்ததை சங்கப்பாடல்கள் ஏற்றிருந்தால் மாற்பித்தியாருக்கும் நக்கண்னையாருக்கும் எப்படி புறநாநூறில் இடம் வந்தது? கொல்லனும் குறவனும் எழுதிய நம் பெருமரபு எப்படி வினைவலனை இழிசினனாகக் கருதியிருக்க முடியும்?
சங்க இலக்கியங்களின் திணை, துறை பகுப்பு மட்டுமல்ல அகம், புறம் பகுப்புகூட மிகவும் ‘குத்துமதிப்பாகவே’ செய்யப்பட்டுள்லது. உதாரணமாக புறநாநூறில்வரும் மாற்பித்தியாரின் பாடல்களை மருதம் திணையில் குறுந்தொகையில் சேர்த்தால் என்ன இலக்கணப்பிழை வரும்? பல பாடல்கலை வரிகளை மட்டும்வைத்துப் பார்த்தால் திணை மாற்றத்தை எளிதாகச் செய்துவிடலாம். திணையை வகுத்த உடனேயே திணைமயக்கம் என்று ஒரு விதிமீறலை நம் மரபு அனுமதித்தது. இலக்கணத்தை வகுத்ததுமே ‘வழூஉ‘ என அதற்கு மாறானதையும் அங்கீகரித்தது. ‘பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுளான’ சிலப்பதிகாரத்தின் வடிவம் அதற்கு முன் இல்லை. சிலப்பதிகாரமே அதை நம் மரபில் உருவாக்கியளித்தது. கம்பனின் சொற்புணர்ச்சி முறைகளின் பல்லாயிரக்கணக்கான புதியவழிகளை அதற்கு முந்தைய நூல்களில் காண முடியாது. ஒட்டக்கூத்தர் அதனாலேயே கம்பரைக் கவிஞராக ஏற்க மறுத்தார்.