toronto tamilsangam <torontotamilsangam
கன்னட இலக்கியம் அறிமுகம்
பழங்காலம் (600 – 1200)
கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ஆம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.
இடைக்காலம் (1200 – 1700)
போசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்களை வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வரை விசய நகரக் கர்நாடகம், விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் Keladi Nayaka ஆகியவை கர்நாடகத்தை ஆட்சி செய்தன. இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.
தற்காலம் (1700 – இன்று)
18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ஆம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இயக்கம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது. (ஆதாரம்: தமிழ் விக்கிபீடியா)
வாசகர் முற்றம் தொடரில் தமிழ் வாசகர்களை அறிமுகப்படுத்தும்போது, ஏன் கன்னட இலக்கியம் பற்றி வருகிறது என யோசிக்கின்றீர்களா? கன்னட இலக்கிய மேதைகள் சித்தலிங்கையா, புரந்தர தாசர், சிவராம் கரந்த், யு.ஆர் . அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட் முதலான பல இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிந்திருக்கின்றேன். சிவராம் கரந்த், அனந்தமூர்த்தியின் கதைகள் திரைப்படங்களாகி கவனத்தையும் பெற்றுள்ளன. கிரிஷ் கர்னாட் நாடக திரைப்படக்கலைஞர். இவர் பல தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். பேராசிரியர் அனந்தமூர்த்தி இலங்கைக்கும் 2003 இல் தேசிய சாகித்திய விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டவர். இந்ததகவல்களின் பின்னணியில் தாய்மொழியை கன்னடமாகக்கொண்டிருக்கும் மெல்பன் வாசகி ஒருவர், எவ்வாறு தீவிர தமிழ் வாசகரானார் என்பது பற்றிய பதிவுதான் இது!
தமிழ்நாட்டில், வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்திருக்கும் விஜயலக்ஷ்மி அவர்கள், அவுஸ்திரேலியா மெல்பனுக்கு 1995 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர். தேர்ந்த தமிழ் இலக்கிய வாசகரான இவரை விஜி என்றுதான் அழைக்கின்றோம். தனது பள்ளிப் பருவத்திலேயே தனக்கு தமிழில் ஆர்வம் வந்துவிட்டது எனச்சொன்னார். ஆனால், இவரது தாய் மொழி கன்னடம். ஆயினும் பல தலை முறைகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தின் புதல்வி. தந்தையார் அரசு பணி நிமித்தமாக பல மாநிலங்களில் பணிபுரிந்தமையால் தாய் மொழி கன்னடத்துடன் ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என இதர மொழிகளும் நன்கு பேசத் தெரிந்த இவருக்கு, தமிழின் மீது தீராக் காதல் ஏற்பட்டதற்கு நல்ல மாதாந்திர நூல்களை வாசித்து தன்னையும் வாசிப்பில் ஊக்குவித்த தனது தாயாரும் 7 ஆம் வகுப்பில் தனக்கு தமிழாசிரியராக இருந்த திரு.பத்திநாதன் அய்யாவும் தான் காரணம் எனச்சொல்கிறார்.