பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், மெல்பனில் எனது வீட்டுக்கு வந்தார். சிட்னியில் வசிக்கும் அவரது மகளிடம் வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரை மெல்பனுக்கு அழைத்திருந்தேன். ஒருநாள் இரவுப்பயணமாக பஸ்ஸில்தான் வந்தார். அவரது கையிலிருந்தது ஒரு ஆங்கில துப்பறியும் நாவல். தந்திரபூமி, குருதிப்புனல், காலவெள்ளம், சுதந்திரபூமி முதலான பல நாவல்களும் பல கதைத்தொகுப்புகளும் சிறந்த நாடகப்பிரதிகளும் எழுதியிருக்கும் அவர் எனது அபிமான எழுத்தாளர். இவருக்கு எப்படி துப்பறியும் நாவல்களில் ஆர்வம் வந்தது எனக்கேட்டபோது, தான் பயணங்களில் விறுவிறுப்பான அத்தகைய நூல்களைத்தான் படிப்பது வழக்கம் என்றார். பயணக்களைப்பை அது போக்கிவிடுமாம். தேர்ந்த வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படும் பல எழுத்தாளர்களிடத்தில் இவ்வாறு விசித்திரமான இயல்புகளும் இருக்கின்றன. ஜெயகாந்தனிடம், “நீங்கள் சரித்திர நாவல்கள் படிப்பதில்லையா?” என்று, கல்கியையும் சாண்டில்யனையும் , அகிலனையும் மனதில் வைத்துக்கொண்டு யாரோ கேட்டார்களாம். அதற்கு ஜெயகாந்தன், ” நான் அவற்றை படிப்பதில்லை. அதனைவிட தனக்கு அம்புலிமாமா கதைகள்தான் விருப்பம்” என்றாராம்.
பாரதியியல் ஆய்வாளரும் , மக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலை தமிழுக்குத்தந்தவரும், தமிழகத்தின் மூத்தபடைப்பாளியுமான சிதம்பர ரகுநாதனிடத்தில் வித்தியாசமான ஒரு இயல்பை அவதானித்திருக்கின்றேன். பாரதியின் பாடல்களில் பெரும்பாலானவை அவருக்கு மனப்பாடம். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்றும் இருந்தது. அதுதான் இலங்கையில் புகழ்பெற்ற சிங்கள பொப்பிசைப்பாடல்: ” சுராங்கணி, சுராங்கணி, சுராங்கணிட்ட மாலு கெனாவா”
தமிழ்வாசகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பல எழுத்தாளர்களிடத்தில் விசித்திரமான இத்தகைய இயல்புகளை அவதானித்திருக்கின்றேன். எழுத்தாளர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் எனச்சொல்லமுடியாது, சிறந்த படைப்பிலக்கிய நூல்களை விரும்பிப்படிக்கும் வாசகர்களிடத்திலும் அத்தகைய விசித்திரமான இயல்புகள் இருக்கின்றன.
சமகாலத்தில் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகளை படிக்கின்ற அதே சமயத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சாகசக்கதைகளை படிப்பதிலும் ஆர்வம் காண்பிக்கின்ற ஒரு வாசகர் பற்றிய அறிமுகம்தான் இந்த அங்கம். அவரது பெயர்: இரகமத்துல்லா. தமிழ்நாட்டில் செங்கல்பட்டைச்சேர்ந்த ஷேக் தாவூத் – காதர் பீ தம்பதியரின் புதல்வர். காரைக்குடியில் புகழ்பெற்ற அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்றவர். படிக்கின்ற காலத்தில் இவருக்கு இலக்கியத்தில் அதிகம் ஈடுபாடில்லை. தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது தமிழ்ப்பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தமையால் அங்கு தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளராக பல ஆண்டுகள் இயங்கியிருக்கிறார். இரகமத்துல்லா எனக்கு அறிமுகமானது மெல்பனில்தான். வாசகி சாந்தி சிவக்குமார் மெல்பனில் மாதாந்தம் ஒருங்கிணைக்கும் வாசகர் வட்டத்தின் சந்திப்புகளில்தான் இவரை பார்த்துபேசியிருக்கின்றேன். வாசிப்பு அனுபவங்களில் மற்றவர்கள் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும்போது இரகமத்துல்லா மாத்திரம் வேறு ஒரு திசையில் பயணித்து கருத்துச்சொல்வார். இவரது வாசிப்பு அனுபவம் ஏனையவர்களின் அனுபவத்திலிருந்து முற்றாக மாறுபட்டிருக்கும். ஒருகாலத்தில் நக்சலைட் தீவிரவாதத்தை ஆதரித்தவரும், அதனாலேயே வீட்டைவிட்டு வெளியேறி பசி பட்டினியோடு தேசாந்தரியாக அலைந்துழன்றவரும், பின்னாளில் கேரள இலக்கிய உலகில் கவிஞராக கொண்டாடப்பட்டவரும் திரைப்பட நடிகரும் பாடலாசிரியருமான பாலச்சந்திரன் – சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ரகசியம் நூலைப்படித்துவிட்டு, தமிழகப்பயணங்களில் பஸ்நிலையங்களில் யாராவது எழுத்தாளன் பரட்டைத்தலையுடன் சித்தன்போன்று அலைந்துகொண்டிருக்கிறானா? என்பதை கூர்ந்து அவதானித்திருப்பவர்தான் இரகமத்துல்லா.