தொடர் நாவல் (1): பேய்த்தேர்!

அத்தியாயம் ஓன்று: சுடர் தேடுமொரு துருவத்துப் பரதேசி!

தொடர் நாவல் (1): பேய்த்தேர்! - வ.ந.கிரிதரன் -ஒரு பெளர்ணமி நள்ளிரவில் ‘டொராண்டொ’வில் வசிக்கும் புகலிடம் தேடிக் கனடாவில் நிலைத்துவிட்ட இலங்கை அகதியான கேசவனின் சிந்தையிலோர் எண்ணம் உதித்தது. வயது நாற்பதைக் கடந்து விட்டிருந்த நிலையிலும் அவன் எவ்விதப்பந்தங்களிலும் தன்னைப் பிணைத்துக்கொள்ளாமல் தனித்தே வாழ்ந்து வருகின்றான். இந்நிலையில் அவன் சிந்தையில் உதித்த அவ்வெண்ணம் தான் என்ன? ‘நெஸ்கபே’ ஒரு கப் கலந்துகொண்டு , தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணிக்கு வந்து, அங்கிருந்த கதிரையிலமர்ந்தான். எதிரே விரிந்து கிடந்த வானை நோக்கினான். சிந்தனைகள் ஒவ்வொன்றாகத் தோன்றி மறையத்தொடங்கின. மீண்டும் அவன் சிந்தையில் அவ்வெண்ணம் தோன்றி மறைந்தது. தான் யார்? என்று மனம் சிந்தித்தது. அதுவரை காலத் தன் வாழ்வைச் சிறிது சிந்தித்துப்பார்த்தது மனம். பால்ய பருவம், பதின்மப் பருவம், இளைமைப்பருவம், புகலிடப்பயணம் என பல்வேறு பருவங்களைப்பற்றி மனத்தில் அசை போட்டான். ‘காலம் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது.’ எனறொரு எண்ணம் தோன்றி மறைந்தது. தன் எண்ணங்களை, இதுவரை காலத்தன் வாழ்க்கையினை எழுத்தில் பதிவு செய்தாலென்ன  என்றொரு எண்ணமும் கூடவே தோன்றியது. இவ்வெண்ணம் தோன்றியதும்  சிறிது சோர்ந்திருந்த நெஞ்சினில் உவகைக் குமிழிகள் முகிழ்த்தன. அதுவரை காலமுமான தன் வாழ்பனுவங்களை ஆவணப்படுத்துவதன் அவசியம் பற்றிச் சிந்தித்தான். அதுவே சரியாகவும் தோன்றியது.    அது அவனுக்கு ஒருவித உற்சாகத்தினைத் தந்தது. அதன் மூலம் அவனது எழுத்தாற்றலையும் செழுமைப்படுத்த முடியுமென்றும் எண்ணமொன்று தோன்றி மறைந்தது. எதிர்காலத்தில் அவன் தானோர் எழுத்தாளனாக வரவேண்டுமென்று விரும்பினான். இவ்விதம் தன் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதன் மூலம் தன் எழுத்தாற்றலைச் செழுமைப்படுத்தலாமென்றெண்ணினான். அதுவே எழுத்தாளனாவதற்குத் தான் இடும் அத்திவாரமுமாகவுமிருக்கக்கூடுமென்றும் எண்ணினான்.

அவனுக்கு அவன் அதுவரையில் வாசித்த சுயசரிதைகள், புனைவுகள் பல நினைவுக்கு வந்தன. கவிதையில் எழுதப்பட்டிருந்த பாரதியாரின் சுயசரிதை அனைத்துக்கும் முன்வந்து நின்றது. அவனுக்குப் பிடித்த சுயசரிதையும் கூட.  எப்பொழுது மனம் அமைதியிழந்து அலைபாய்ந்தாலும் அச்சுயசரிதையை எடுத்து வாசித்துப்பார்ப்பான். அலை பாயும் மனம் அடங்கி அமைதியிலாழ்ந்து விடும். அச்சுயசரிதை நீண்டதொரு சுயசரிதையல்ல. ஆனால் அதற்குள் அவன் தன் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை,  முதற்காதல், மணவாழ்க்கை, குடும்பத்தின் பொருளியல் நிலை மாற்றங்கள், இருப்பு பற்றிய அவனது கேள்விகள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தான்.

பட்டினத்துப்பிள்ளையின் ‘பொய்யாயொ பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே’ என்னும் வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு தொடங்கும் சுயசரிதையின் ஆரம்பத்தில் ‘வாழ்வு முற்றுங் கனவெனக் கூறிய , மறைவ லோர்த முரைபிழை யன்றுகாண்’ என்று கூறியிருப்பான். தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் எல்லாம் சரதம் (உண்மை) அல்ல என்பதையும் அறிந்திருந்தான். இம்மானுட வாழ்க்கை கனவுதான் ஆனால் இவ்விருப்பு மாயை அல்ல. மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன் என்கின்றான். ஆனால் அனைத்துக்கும் அடிப்படையான இப்பிரம்மத்தின் இயல்பினை  ஆய நல்லருள் பெற்றிலன் என்கின்றான். ‘தன்னுடை அறிவினுக்குப் புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடைக் கொள்வதாம் தீய பக்தியியற்கையும் வாய்ந்திலேன்’ என்னும் மனத்தெளிவு மிக்கவனாகவுமிருக்கின்றான் அவன்.

Continue Reading →

எண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ்! நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா!

பேராசிரியர் அ.சண்முகதாஸ்பேராசிரியர் சண்முகதாஸ், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர். நான் எனது 11ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத பூனைக்குட்டியாகக் காலடி வைத்தபோது எனக்கு வயது 11. சண்முகதாஸுக்குவயது 14. தன் இனிய குரலால் அனைவரையும் வசீகரித்து அனைவரும் அறிந்த சிறுவனாக இருந்தார் சண்முகதாஸ். அண்ணன் என்றுதான் நாம் அவரை அன்று அழைத்தோம். என்னைப்போல அவரும் கட்டையானவர். வண்டுகள் போல நாம் அங்கு ஓடித்திரிவோம். 6 வருடங்கள் அந்த விடுதியில் நாங்கள்ஒன்றாக வளர்ந்தோம். 1954 ஆம் ஆண்டு மஹா பாரதம் தழுவிய நச்சுப் பொய்கை எனும் பாடசாலை நாடகம் ஒன்றில் 15 வயது சண்முகதாஸ் கதாயுதம்தாங்கி ஹா ஹா என்று சப்தமிட்டபடி வீமனாக மேடைப் பிரவேசம் செய்தமையும், கையினால் தண்ணீர் பருகாது பொய்கையிலிருந்த தண்ணீரைகதையினால் அடித்து அடித்து வாயினால் ஆவ் ஆவ் எனப் பருகிய காட்சியும் இப்போது ஞாபகம் வருகிறது.

திருகோணமலைக் கிராமம் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பெற்று அக்கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அவர் வந்து மூன்றுவருடங்களின் பின் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றிலிருந்து நான் ஐந்தாம் வகுப்புப் புலமைபரிசில் பெற்று, புலமைப்பரிசில் பெற்றோர் பயில கன்னங்கரா திட்டத்தில் உருவான அந்த மத்திய கல்லூரியில் கல்வி பயிலச் சென்றேன். விடுதி வாழ்க்கை. சண்முகதாஸ் அவரது வகுப்பில் என்றும் முதன்மாணவர். அவருடன் போட்டிக்கு நின்றார் அருணாசலம் என்ற மாணவர். படிப்பில் இருவரும் தீரர். அருணாசலம், சண்முகதாஸின் உயிர் நண்பன். திரியாயைச் சேர்ந்த இருவரும் கெட்டிக்காரர்கள். இணைபிரியா இரட்டையர்கள். அவர்களை எமக்குமுன்னுதாரணங்களாக ஆசிரியர்கள் காட்டுவர். இருவரும் ஒரு நாள் சாரண இயக்க காரியமாகச் சென்றபோது, ஒருகுளத்தில் இருவரும்சிக்குப்பட்டுக்கொண்டனர். அருணாசலம் காலமானர். சண்முகதாஸ் அதிஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டார். அருணாசலத்தின் உடல் பாடசாலைமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது சண்முகதாஸ் நண்பனுக்காக இரங்கி குலுங்கிக் குலுங்கி அழுத குரல் இன்னும் காதில் கேட்கிறது. கல்விப்பொது சாதாரண தர வகுப்பு சித்தியடைந்ததும், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பு அன்று இன்மையினால் மட்டக்களப்புசிவானந்தா கல்லூரியில் இணைந்து அங்குள்ள விடுதியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கல்வி கற்றார் சண்முகதாஸ். அது அவருக்கு இன்னுமோர் அனுபவமாயிற்று.

இராமகிருஷ்ண மிசன் வளர்ப்பு அவரை மேலும் பதப்படுத்தியது. வளப்படுத்தியது. அங்கிருந்து பல்கலைக்கழகம் தெரிவாகிப்பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு அவர்தன் கூரிய அறிவாலும் நல்ல குணங்களாலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, செல்வநாயகம் ஆகியோரின் மிக விருப்புக்குரிய மாணவரும் ஆனார். 1961 இல் அவர் பேராதனைப் பல்கலைத் தமிழ்ச்சங்கத் தலைவராயிருந்தார். அப்போது அவர் மாணவர்.

அவர் தலைமையில் பட்டப்பகலில் பாவலர்க்குத்தோன்றுவது எனும் கவி அரங்கு நடைபெற்றது. அக்கவி அரங்கப்போட்டியில் முதற்பரிசு பெற்ற என் கவிதையை நான் அரங்கேற்றினேன். மூன்றாவது பரிசு பெற்ற அவரது கவிதையை மனோன்மணி முருகேசு அரங்கேற்றினார். இவரே பின்னர் மனோன்மணி சண்முகதாஸ்  ஆனார். அது ஓர் காதல் காவியக் கதை. பேராசிரியர் வித்தியானந்தன் 1960 களில் கூத்து மீளுருவாக்க இயக்கம் ஆரம்பித்தபோது, அதன் உள் விசைகளில் சண்முகதாஸும் ஒருவரானார்.  1960 களில் பேரா.வித்தியானந்தன் தயாரிப்பில் கர்ணன் போரில் அவர் கிருஸ்ணனாக வர, நான் கர்ணனாக வந்து இருவரும் பலமேடைகளில் ஆடிப் பாடியமை ஞாபகம் வருகிறது.

Continue Reading →

வாசகர் முற்றம் – அங்கம் – 02 : “தாய்மொழி கன்னடம், தமிழ்மொழியில் தீராத காதல்”! மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்!

கன்னட இலக்கியம் அறிமுகம்

விஜி இராமச்சந்திரன்பழங்காலம் (600 – 1200)
கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ஆம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் எழுந்தது. இந்த நூல் சமண சமயக் கருத்துக்களை எடுத்துரைத்தது. இக் காலத்தில் பம்பா, இரன்னா போன்ற கன்னட மகாகவிகள் எழுதினார்கள். இதனால் கன்னட இலக்கியத்தின் பொற்காலம் என்றும் இது குறிப்பிடப்படுவதுண்டு. இக்காலத்தில் சமண சமயம் சிறப்புற்று இருந்தது.

இடைக்காலம் (1200 – 1700)
போசளப் பேரரசு எழுச்சியுடன் சமணம் வீழ்ச்சி அடைந்து, வீர சைவம் உயர் நிலை பெற்றது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்களை  வீரசைவ சாகித்தியா என்று குறிப்பிடுவர். 1300 களில் இருந்து 1500 வரை விசய நகரக் கர்நாடகம்,  விசய நகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. இவர்களின் ஆதரவில் வைணவ சமயமும், கன்னட வைணவ இலக்கியமும் வளர்ச்சி பெற்றன. விசய நகர வீழ்ச்சிக்குப் பின்பு மைசூர் அரசு மற்றும் Keladi Nayaka ஆகியவை கர்நாடகத்தை ஆட்சி செய்தன. இவர்களின் ஆட்சியின் கீழும் பல கன்னட இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.

தற்காலம் (1700 – இன்று)
18 ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஐரோப்பியர் ஆட்சி இந்தியாவிலும், கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. ஐரோப்பியரின் தாக்கத்தில் புதினம், கலைக்களஞ்சியம், அகராதி, பத்திரிகை, இதழ் போன்ற வடிவங்கள் கன்னடத்தில் வளர்ச்சி பெற்றன. 20 ஆம் நூற்றாண்டில் பல இலக்கிய இயக்கங்கள் கன்னடத்தில் பிறந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த நவ உதயம் (புதிய எழுச்சி) இலக்கிய இயக்கம் அன்றாட வாழ்வின் விடயங்கள் பற்றி, மனிதபிமான விடயங்கள் பற்றி கருக்களில் இலக்கியம் படைத்தது. 1940 களில் கன்னட முற்போக்காளர் இலக்கிய இயக்கம் எழுந்தது. இவர்கள் இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து தமது இலக்கியங்களை படைத்தனர். 1950 களில் நவ்யா இலக்கிய இயக்கம் வளர்ச்சி பெற்றது. (ஆதாரம்: தமிழ் விக்கிபீடியா)

வாசகர் முற்றம் தொடரில்  தமிழ் வாசகர்களை அறிமுகப்படுத்தும்போது, ஏன் கன்னட இலக்கியம் பற்றி வருகிறது என யோசிக்கின்றீர்களா?  கன்னட இலக்கிய மேதைகள் சித்தலிங்கையா, புரந்தர தாசர், சிவராம் கரந்த், யு.ஆர் . அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட் முதலான பல இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிந்திருக்கின்றேன். சிவராம் கரந்த், அனந்தமூர்த்தியின் கதைகள் திரைப்படங்களாகி கவனத்தையும் பெற்றுள்ளன. கிரிஷ் கர்னாட் நாடக திரைப்படக்கலைஞர். இவர் பல தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். பேராசிரியர் அனந்தமூர்த்தி இலங்கைக்கும் 2003 இல் தேசிய சாகித்திய விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டவர். இந்ததகவல்களின் பின்னணியில் தாய்மொழியை கன்னடமாகக்கொண்டிருக்கும் மெல்பன் வாசகி ஒருவர்,  எவ்வாறு தீவிர தமிழ் வாசகரானார் என்பது பற்றிய பதிவுதான் இது!

தமிழ்நாட்டில், வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்திருக்கும் விஜயலக்‌ஷ்மி அவர்கள்,  அவுஸ்திரேலியா மெல்பனுக்கு 1995 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர். தேர்ந்த தமிழ் இலக்கிய வாசகரான இவரை விஜி என்றுதான் அழைக்கின்றோம். தனது பள்ளிப் பருவத்திலேயே  தனக்கு தமிழில் ஆர்வம் வந்துவிட்டது எனச்சொன்னார்.  ஆனால்,  இவரது  தாய் மொழி கன்னடம்.  ஆயினும் பல தலை முறைகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த  குடும்பத்தின் புதல்வி.  தந்தையார் அரசு பணி நிமித்தமாக பல மாநிலங்களில் பணிபுரிந்தமையால் தாய் மொழி கன்னடத்துடன்  ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம்  என இதர  மொழிகளும் நன்கு பேசத் தெரிந்த இவருக்கு,  தமிழின் மீது தீராக் காதல் ஏற்பட்டதற்கு  நல்ல மாதாந்திர நூல்களை வாசித்து தன்னையும் வாசிப்பில்  ஊக்குவித்த தனது தாயாரும் 7 ஆம் வகுப்பில் தனக்கு தமிழாசிரியராக இருந்த திரு.பத்திநாதன் அய்யாவும் தான் காரணம் எனச்சொல்கிறார்.

Continue Reading →

அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளில் என் அபிமானக் கவி பாரதியின் கவிதை வரிகளை நினைவு கூருகிறேன். மாகவி தான் வாழ்ந்த சமுதாயத்தை பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்ந்த நாட்டைப்பற்றிச் சிந்தித்தான். தான் வாழ்ந்த உலகைப்பற்றிச் சிந்தித்தான். இவ்வுலகை உள்ளடக்கிய இப்பிரபஞ்சத்தைப்பற்றிச் சிந்தித்தான். பிரபஞ்சப்பிரக்ஞையுடன் அவன் இம்மானுடர் பிரச்சினைகளை, துயரங்களை அணுகினான். அவ்விதம் அணுகியதால்தான் அவன் மொழி வெறியனாகவோ, மத வெறியனாகவோ எப்பொழுதும் இருந்ததில்லை. மிகவும் தெளிவாக அவனால் சகல பிரச்சினைகளையும் அணுக முடிந்தது; சிந்திக்க முடிந்தது. தமிழ்  மொழியின் தொன்மையினை, இலக்கியச் சிறப்பினை உணர்ந்திருந்த பாரதி அதனால்தான் தமிழ் மொழியின் சிறப்பினைப்பாடினான். அந்நியருக்கெதிரான இந்திய தேசிய விடுதலையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவன் என்றுமே தேசிய வெறியனாக இருந்தானல்லன். இவ்விதமான தெளிவு காரணமாகத்தான் அவனால் மானுட விடுதலையைப்பற்றியும் மிகவும் தெளிவாகப்பாட முடிந்தது; எழுத முடிந்தது.

இந்நாளில் நாமுமொரு உறுதியெடுப்போம். நாம் நமது  மக்களின் உடனடிப்பிரச்சினையான சமுதாய, அரசியற் மற்றும் பொருளாதாரப்பிரச்சினைகளை அணுகும்போது பிரபஞ்சப்பிரக்ஞையுடன் எம் பிரச்சினைகள் அணுகுவோம். அவ்விதம் அணுகினால் நாம் மொழி வெறியர்களாகவோ, இன , மத வெறியர்களாகவோ இருக்க மாட்டோம். இம்மானுடரை, இம்மண்ணை, பிறந்த மண்ணை, இங்கு வாழும் சகல உயிரினங்களை, இவ்வுலகை, இப்பிரபஞ்சத்தை, இதற்கு இணையாக இருக்கும் சாத்தியம் மிக்க ஏனைய  பிரபஞ்சங்களைப் பற்றியெல்லாம் தெளிவுடன் இருப்போம். இருக்கும் பிரச்சினைகளையும் விரைவாக அணுகித் தீர்த்திட முயற்சி செய்வோம்.

Continue Reading →

ஆய்வு: பண்டைத் தமிழகத்தின் எல்லை

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -பண்டைத் தமிழகத்தின் எல்லை
தொல்காப்பியர் காலத்தில் பண்டையத் தமிழகம் இலக்கண இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியல் கூறுகளிலும் சிறந்து விளங்கியது. இதற்குச் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் சான்றாக அமைகிறது. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தற்கால இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருந்த பண்டைத் திராவிடம், தொல்காப்பியர் காலத்தில் சுருங்கிக் காணப்படுகிறது. அது தமி்ழ்கூறும் நல்லுலகமாகச் சிறப்புற்று நின்றிருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் தமிழ்கூறும் நல்லுலகமாகச் சிறந்து விளங்கியது என்பதை,

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆஇரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

(பனம்பாரனார் பாடிய தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம்)

பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் அறியமுடிகிறது. இப்பாயிரத்தில் வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரிமுனையும் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிலமாகத் திகழ்ந்ததை எடுத்துரைக்கின்றது. பண்டைத் தமிழகத்தின் எல்லைப் பகுதியைச் சிலப்பதிகாரம்,

Continue Reading →

கவிதை: எதுதான் தகுதி

 

ஶ்ரீராம் விக்னேஷ்

எச்சிலிலை எடுத்துண்ணும் என் நண்பா உன்னிடத்தே,
கச்சிதமாய் ஒன்றுரைப்பேன் கவனம் , அதை மறைத்துண்ணு….!
பிச்சையெடுப் போரிடமும் பிடுங்கியே தின்றுவிடும்,
‘எச்சிக்கலை’ பலரின்று  இருக்கின்றார் பதவிகண்டு….!

நாயை வீட்டிலிட்டு நல்விருந்து குவித்தாலும்,
வாயைத் திறந்தோடும் வாய்க்காற் கழிவுண்ண….!
சம்பளத்தைக் கூட்டித்தான் சர்க்கார் கொடுத்தாலும்,
கிம்பளப் பிச்சைபெறக் கிளம்புகிறார் கையேந்தி….!

Continue Reading →

ஆய்வு: பரிபாடலில் கலைநுட்பம்

முன்னுரை
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -சங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் புலப்படுத்துகின்றன. காதல், வீரம் என்ற இரு இலக்கியப் பாடுபொருள்களைக் கொண்டு படைக்கப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில் அக்கால மக்களின் பண்பாட்டுப் பதிவுகள் எண்ணத்தக்க ஒன்றாக விளங்குகின்றன. தண்டமிழ் மொழிக்கண் தோன்றிய சங்க மருவிய நூல்களில் எட்டுத்தொகையில், ஐந்தாவதாக ‘ஒங்கு பரிபாடல்’ என உயர்ந்தோரால் உயர்த்திக் கூறப்படுவது ‘பரிபாடல்’ என்னும் சிறப்புமிகு நூலாகும். 

சங்க நூல்களில் அகப்பொருள்-புறப்பொருள் ஆகிய இருபொருள்களையும் தழுவும் விதத்தில் புலமைச்சான்றோரால் படைக்கப்பட்ட பெருமைமிகு நூலாகவும் இந்நூல் திகழ்கின்றது. திருமாலையும், முருகனையும், வையைப் பேரியாற்றையும் வாழ்த்துவதனை உட்பொருளாகக் கொண்டு தமிழகப் பண்பு, காதல், வீரம், பண்பாடு, அறம், பண்டைத்தமிழர் பின்பற்றிய சடங்குமுறைகள், அவர்கள் பின்பற்றி நடந்த நம்பிக்கைகள் முதலான கூறுகளை புனைநலத்துடன் எடுத்துரைக்கும் நூலாகவும் விளங்குகின்றது.

இத்தகு சிறப்புமிகு நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை உ.வே.சாமிநாதையரைச் சாரும். பரிமேலழகர் இந்நூலுக்கு உரை கண்டுள்ளார் என்பது இதன் தனிச்சிறப்பு. இத்தகு நூலின் வாயிலாகச் சங்கப் புலவர்கள் புலப்படுத்தும் கலையும் கலைநுட்பத்திறனும் குறித்து ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

பரிபாடல் – பெயர்க்காரணம்
பல பாவகைகளையும் ஏற்று வருதலின் ‘பரிபாடல்’ என்னும் பெயர் பெற்றது என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். ‘பரி’ என்பதற்கு, ‘குதிரை’ என்று பொருள் கொண்டு. பரிபாடலின் ஒசை. குதிரை குதிப்பது போலவும். ஒடுவது போலவும் நடப்பது போலவும் இருத்தலின் ‘பரிபாடல்’ என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். 

‘அன்பு’ என்னும் பொருள் படும் ‘பரிவு’ என்னும் சொல் இறுதி கெட்டுப் ‘பரிபாடல்’ என வந்ததெனக் கொண்டு, அப்பாடல் அகத்திணையைச் சுட்டுவது” எனக் காரணம் கூறுகின்றார் சோம. இளவரசு. “பரிபாட்டு என்பது இசைப்பா ஆதலான்” எனப் பரிபாடல் உரையாசிரியர் பரிமேலழகர் அதன் இசை இயல்பை எடுத்துக்காட்டுவர். இசை தழுவிய உருட்டு வண்ணம் பரிபாடலுக்கு உரியது ஆகும்.

“இன்னியல் மாண்தேர்ச்சி இசை பரிபாடல்’ என்னும் பரிபாடலில் வரும் அடியும் அதன் இசைச் சிறப்பை உணர்த்தும். இவற்றை நோக்கும்போது “இசை பரிபாடல் என்பதே இசை என்னும் சொல் கெட்டுப் பரிபாடல் என வழங்கலாயிற்று’ என்று கருதலாம் என்பர் இரா. சாரங்கபாணியார். கலிப்பாவால் இயன்ற நூல் கலித்தொகை என்று பெயர் பெற்றது போலப் பரிபாடல் என்னும் ஒரு பாவகையான் இயன்ற நூலாதலின் இப்பெயர் பெற்றது என்று கொள்ளுதல் தகும்.

Continue Reading →

வாசகர் கடிதங்கள்!

வாசகர் கடிதங்கள்
Jeyaraman <jeyaramiyer@yahoo.com.au>

Dec. 30 at 8:01 p.m.
திரு கிரிதரன் அவர்களுக்கு
பதிவுகள் ஆசிரியர்

அன்பு வணக்கம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது இன்பமாக அமையட்டும். உங்களின்  படைப்புலகப் பணிகள் உன்னதம் அடைந்திடட்டும். நலமும் வளமும் பெருக குடும்பம் சிறக்க வாழ்க வாழ்க வாழ்கவென்று புதுவருட வாழ்த்துகளை வழங்கி மகிழ்கின்றேன்.

வாழ்கவளமுடன்
அன்புடன்
ஜெயராமசர்மா

Continue Reading →

கவிதை: வல்லவொரு ஆண்டாக மலர்ந்துவிடு புத்தாண்டே !

-    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

புத்தாண்டே    நீ    வருக
புத்துணர்வை  நீ  தருக
நித்தமும்   நாம்   மகிழ்ந்திருக்க
நிம்மதியை  நீ   தருக
சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
சுப ஆண்டாய்  நீவருக
எம்தமிழர் வாழ்வில் என்றும்
இன்பம்  பொங்க  நீவருக

வாருங்கள்   என   அழைத்து
வரும்  மக்கள்  வரவேற்கும்
சீர்  நிறைந்த நாட்டிலிப்போ
சீர்  அழிந்து நிற்கிறது
யார்  வருவார்  சீர்திருத்த
எனும் நிலையே  இருக்கிறது
நீ வந்து புத்தாண்டே
நிலை  திருத்தி  வைத்துவிடு

Continue Reading →