– தகவல்: முருகபூபதி –
( இம்மாதம் 24 ஆம் திகதி கல்முனையில் கவிஞர் மருதூர்கனியின் ஞாபகார்த்தமாக நடைபெறும் நிகழ்வை முன்னிட்டு எழுதப்படும் பதிவு)
1960 களில் ஈழத்தில் அலையடித்த கவித்துவ வெள்ளத்தின் கிழக்கிலங்கை ஊற்றுக்களில் மருதூர்க்கனியும் ஒருவர். மருதூர்க்கனியின் கவித்துவம் கற்பனைகளின் இரசனைக்கூடாரமாக அமையவில்லை. அது சமத்துவமான ஒரு சமூகத்தேடலுக்கான ஒரு ஆயுதமாக அமைந்தது என்று சொல்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. முற்போக்கு இலக்கிய சித்தாந்தத்தின் இலட்சிய வாதத்தினால் ஈர்க்கப்பட்ட மருதூர்க்கனி தனது பிரதேசத்தில் தனது மருதமுனைக்கிராமத்தில் தான் கண்ட ஏழை மக்களை நெசவாளிகளை – மீனவர்களை – பாய்பின்னிப்பிழைத்தாலும் சுயகௌரவத்துடன் வாழ்கின்ற பெண்களை தனது கதைகள் ஊடாக இனம் காட்டுகிறார். அவர்கள் பக்கம் நின்று குரல் கொடுக்கிறார். என்று சொல்கிறார் பேராசிரியை திருமதி சித்திரலேகா மௌனகுரு. இளம் பருவத்திலிருந்தே நாடகப்பிரியர் மருதூர்க்கனி. மனித இயக்கத்தை அவரது கண்கள் நாடகமாகக் கண்டன. மனிதர்களின் குணாதிசயங்கள் – ஆளுமை – துலங்கித்தெரியும் குணப்பாங்கு – என்பனவற்றை இதனால் வெகு நுணுக்கமாக அவர் கவனிக்கலானார். என்று எழுத்தாளர் செ. யோகநாதன் தெரிவித்துள்ளார். மருதூர்க்கனி – காணும்தோறும் பேசும்தோறும் உள்நெக்க நின்று உருகும் மனிதனாக இலக்கிய உலகில் தன்னை இனங்காட்டி வந்தவர். இவரை அரசியலிருந்து பிரித்து கவிஞனாக மட்டும் காண முடியாது. இவர் ஒரு தேசிய அரசியற் கலாசாரத்தின் மூலவிசை என்கிறார் வீரகேசரி – தினக்குரல் நாளேடுகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வன். புலவர்நாயகம் மருதூர்க்கனியின் கவித்துவத்தை உரைத்துப்பார்க்க எந்த ஓர் உரைகல்லும் தேவையில்லை. அவர் எப்போதோ அங்கீகரிக்கப்பட்டுவிட்டார். அவரே ஒரு கவிதைதான் என்று எம். எச். எம். அஷ்ரப் சொல்லியிருக்கிறார். மகா கவிகளான இக்பாலும் பாரதியும் காட்டிய பாதையிலே பயணம் மேற்கொள்ளவிழையும் மருதூர்க்கனி மானிட மேம்பாட்டுக்காகத் தன்னுடைய எழுத்தாற்றல் பயன்படும் என்ற வேட்கை மீதூரப்பெற்றவராகவும் காணப்படுகிறார் – என்று பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பதிவு செய்கிறார். முஸ்லிம்கள் மத்தியில் முன் என்றும் இல்லாத அளவு இனத்துவ உணர்வு மேலோங்கி எழுந்தவேளையில் அதன் ஸ்தாபன வெளிப்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயமாகி இக்கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதனுடன் இணைந்து செயற்பட்டு – அதன் மூத்த துணைத்தலைவரானவர் மருதூர்க்கனி என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். இங்கே நான் மருதூர்க்கனி பற்றி முக்கியமான ஏழு ஆளுமைகள் தெரிவித்த கருத்துக்களைத்தான் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.
மருதூர்க்கனி தொழில் ரீதியாக ஒரு பாடசாலை ஆசிரியர். அத்துடன் கவிஞர். நாடகாசிரியர். சிறுகதை எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், அரசியல் இயக்கம் ஒன்றின் ஸ்தாபகத்தலைவர். இவ்வாறு பன்முகத்தோற்றம் மிக்க ஒருவர் இன்று எம்மத்தியில் இல்லை. எனினும் அவரது நினைவுகள் எம்முடன் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது இலக்கிய வாரிசுகள் இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவரது குடும்ப வாரிசுகள் இன்றும் அவரது நினைவாக அவரது படைப்புகளை அச்சிலே பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப்பலனை வரம் என்றும் சொல்லலாம். அவருடைய அன்புத்துணைவியாரும் பிள்ளைகளும் மருமக்களும் மருதூர்க்கனிக்கு கிட்டிய பெரும் பேறு.
பதினெண் மேற்கணக்கு எனப்படும் சங்கஇலக்கியத்திற்குப் பிறகு பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு புறநூல் களவழிநாற்பது ஆகும். சோழமன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல். இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேரமன்னனுடைய நண்பன் ஆவார். கழுகலத்தில் நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதியாகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கருதப்படுகின்றது. இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப்போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் பற்றிக் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகள் பெற்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்நூல் பண்டைத்தமிழரின் அரசியலையும், ஆட்சிமுறையையும், அவற்றில் இடம்பெற்றுள்ள களப்போர் நிகழ்வுகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “களவழி என்பது ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடுவதாகத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.” (இளம்.தொல்.பொருள்.ப.115) அவற்றை ஏரோர் களவழி, தேரோர் களவழி எனக் குறிப்பிடும்; இளம்பூரணர், ஏரோர் களவழி என்பது நெற்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதென்றும், தேரோர் களவழி என்பது போர்க்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதாகவும் குறிப்பிடுகிறார். இதனை,
“ஓஓ உவமை உறழ்வின்றி ஒத்ததே
காவிரி நாடன் மலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ் மேலாள்
ஆவுதை காளாம்பி போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து” (களவழி நாற்பது. 36)
என்ற களவழி நாற்பது பாடலும் குறிப்பிடுகிறது. இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் “வேளாண் மக்கள் விளையுங் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித்த வென்றி” எனக் கூறுகிறார். வெள்ளைவாரணர் உரையில், “போர்க்களத்தில் நிகழ்த்த வேண்டிய போர் முறைகளை ஆராய்ந்தறிந்த இயல்பும், ஏர்த்தொழில் புரிபவனாகிய உழவர் வினையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும் வென்றியும் என்கிறார்.” ( சு.தமிழ்வேலு – களவழி களமும் காலமும். ப.37 )
( தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி கந்தப்பா (Shirley Candappa) அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையான Uma Maheswaran A MAN WHO CHANGED THE COURSE OF SRILANKA’S ETHNIC CONFLICT என்னும் கட்டுரையினை முடிந்த வரையில் குறுகிய நேரத்தில் மொழிபெயர்த்திருக்கின்றேன். 18.02.2019 அன்று Daily Mirror பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான ஆயுதபோராட்டத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் செயலதிபராக விளங்கிய உமாமகேஸ்வரன் பற்றி அண்மையில் எண்பதுகளில் இவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றிய சேர்லி கந்தப்பா அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கட்டுரை உமாமகேஸ்வரன் அவர்களைப்பல்வேறு கோணங்களில் எடை போடுவதாலும், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை உள்ளடக்கியுள்ளதாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான உமாமகேஸ்வரனின் ஆரம்பகால உறவு, தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் புரட்சிகர அமைப்பான ஜே.வி.பியுடனான தொடர்புகள் என பல விடயங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரையிது. )
பெப்ருவரி 18 உமா மகேஸ்வரனின் வருடாந்த நினைவுதினமாகும். உமா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகத்தலைவர், 18.2.1945 அன்று பிறந்தார். கோழைத்தனம்மிக்க கொலையாளி ஒருவனின் குண்டினால் 16.7.1989 அன்று அவர் பம்பலப்பிட்டியாவிலுள்ள ஃப்ராங்பேர்ட் பிளேஸில் கொல்லப்பட்டார்.
நான் முதன் முறையாக உமாவை அறிந்தது 1977 பொதுத்தேர்தலையடுத்து, வடக்கில் அகதி முகாம்களை அமைத்துக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளில் ஒருவராகவே. அன்றைய பிரதமரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பொருளாதாரத்தைத் தனியுடமை ஆக்குவதற்கான தனது திட்டங்களைச் சீர்குலைக்கக்கூடிய தனது எதிரிகளை அடக்குவதற்காகவும், அவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களுக்கெதிராகவும், மலையகத்தமிழர்களுக்கு எதிராகவும் கூடக் குண்டர்களை ஏவி விட்டார்.
அப்பொழுது நான் தேசிய கிறிஸ்தவ சபையின் அபிவிருத்தி ஆணைக்குழுவின் செயலாளராகவிருந்தேன். அரசாங்க ஒத்துழைப்பால் உருவான இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு , இடம் பெயர்ந்த தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான திட்ட உருவாக்கத்துக்கு உதவுவது என்னுடைய பணி. சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்களில் பலர் மலையகத்தமிழர்கள். மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அத்துடன் நூற்றாண்டுக்கும் அதிகமாகக் கடுமையாக உழைத்த தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
தமிழிழ மக்கள் விடுதலைக்கழகத்துக்காக கருத்துகளை வெளியிடும் பேச்சாளரான ஸ்கந்தா அவர்களின் கூற்றின்படி உமாவைக் கொன்ற சூத்திரதாரி கழகத்துக்குத் தெரிந்தவராக இருந்தபோதும், கொலையின் தொடர்ச்சியாக ஐரோப்பாவில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தபோதும், உமாவின் கொலைக்குத் திட்டமிட்ட, பின்னாலிருந்த சூத்திரதாரிகள் யாரென்பது தெளிவாகத்தெரியவில்லை. கொலைக்கு உரிமை கோரிய , கழகத்திலிருந்து பிரிந்த குழுவான பரந்தன் ராஜனின் குழுவினரின் கோரிக்கையினை அவர் நிராகரித்திருந்தார். ராஜனும் அவரது குழுவினரும் இந்திய உளவுத்துறையினால் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் உமாவின் கொலைக்கு உரிமை கோரியதற்குக் காரணம் அவ்விதம் கூறும்படி இந்திய உளவுத்துறை அவர்களை வேண்டியதனாலிருக்கக்கூடும்.
* சமர்ப்பணம் : மறைந்த உயிர் நண்பர் தாஜுக்கு
பறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒற்றை இறக்கையுள்ள விமானத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்கள் ஊரில் சில வீடுகளில் இருக்கிறது – மொட்டை மாடி மேல். ‘கப்பக்கார வூடு’ என்றால் முறைப்படி கப்பல்தானே இருக்க வேண்டும். இல்லை, அந்தக் காலத்தில் சைக்கூன் சிங்கப்பூர் என்று போய் பெரும்பணம் சம்பாதித்த சில சபராளிகள் அப்படித்தான் சும்மா விமானங்களை பெருமைக்காக வீட்டின் மேல் நிறுத்தினார்கள். முழுக்க முழுக்க சிமெண்ட்டால் கட்டப்பட்ட சிறு விமானங்கள்! எந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் முஸ்லீம்கள் நிகழ்த்தவில்லையென்று யார் சொன்னது? இப்போது உள்ள பரம்பரைக்கு அதற்கு பெயிண்ட் அடிக்கக்கூட முடியாததில் விமானங்களுக்கு ரோஷம் வந்து ஒரு பக்க இறக்கைகளை ஒடித்துக் கொண்டு விட்டன. புதிதாக அரபுநாடு போய் திரும்ப வரும் கப்பவூட்டுத் தம்பிகள், கஞ்சத்தனமாக தங்கள் வீட்டு நிலைப்படியிலோ புதிதாக வாங்கிய பைக்கிலோ அல்லது வேனிலோ ‘இது அல்லாஹ்வின் அருட்கொடை’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைப் பார்த்துத் திகைத்துப்போய் முடமாகிவிட்டன என்றும் சொல்லலாம்.
கப்பக்கார வீடு… கட்ட வெளக்கமாறானாலும் கப்ப வெளக்கமாறு…
எல்லாமே கப்பல் சம்பந்தப்பட்டது. இந்த மாலிமார், மரைக்காயர் எல்லாம் என்ன? கப்பல் சம்பந்தப்பட்ட பெயர்கள்தான். அதற்காக ரஜூலா கப்பலில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருந்த என் பெரிய மாமாவும், கப்பலே பார்க்காமல் விமானத்தில் கத்தாருக்குப் போன என் சின்ன மச்சானும் தன் பெயரை ‘நகுதா’ (கப்பல் கேப்டன்) என்று இன்னும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது! போதாதற்கு ஊர் அவுலியா வேறு மூழ்கவிருந்த ஒரு கப்பலைக் காப்பாற்றித் தொலைத்தார்கள். அவர்களின் கந்தூரியில் , பல வகை டிசைன் கப்பல்கள் – சோகப்பட்டினத்திலிருந்து நாங்கூர் வரை – 7 கி.மீ தூரம் ரோட்டிலேயே வந்து , ஊரெல்லாம் சுற்றும். சில ரயில்கள் , விமானங்கள் கூட ரோட்டில் ஓடுவதுண்டு. எல்லாம் அவுலியாவின் மகிமை !
கப்பக்கார வூட்டு ஆண்பிள்ளைகளை ‘கப்பவூட்டுத் தம்பி’ என்று செல்லமாக அழைக்கும் ஊர் அது . கப்பவூட்டு பெரியதம்பி; நடுத்தம்பி ; சின்னதம்பி ; தம்பி… அவரின் ‘தம்பி’…
சிராஜுதீனும் என்னைப் போல ஒரு கப்ப வூட்டுத் தம்பிதான். ஆனால் பக்கத்து ஊர். உட்டச்சேரி என்ற உண்மையான பெயரை எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள் என்பதால் வேண்டாம்.
சிராஜின் உற்சாகம் எனக்கும் ஒரு நாள் தொற்றியது. துபாய் வந்ததிலிருந்து ‘ஒரு நல்ல செய்தி’ என்று அன்றுதான் சொல்கிறார்.
‘எழுதுறதை வுட்டுப்புட்டீங்களோ ?’ – வெடைத்தேன். சந்தோஷமாக இருக்கும்போது நாம் உண்மையை சொன்னாலும் அது வேடிக்கையாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் சொன்னது பொய். சிராஜ் நன்றாகவே எழுதுவார்.
‘இல்லே.. அதைவிட சந்தோஷம். ரூமுக்கு ராத்திரி வர்றீங்க. கொண்டாடுறோம்!’. போனை வைத்து விட்டார். அர்த்தம் என்ன என்ன என்று படித்தவரைக் கேட்க வைக்கும் அவரது கவிதைகளின் சஸ்பென்ஸ் மாதிரி இருந்தது. அது எனக்கும் பிடித்திருந்தது. சொட்டுச் சொட்டாக வடித்தாலும் அல்லது ‘சர்’ரென்று ஊற்றினாலும் நீரா, உருகும் பனிக்கட்டியா என்று புரியாத வெண் மயக்கம்தான். இருந்தாலும் என்ன, அவரை எனக்குப் பிடிக்கும். அதிகாரம் செய்யும் அன்பு அவருடையது. எங்கே பார்த்தாலும் ‘எப்படி இருக்கிறீங்க?’ என்று மணிக்கட்டை அவர் அழுத்தும் அழுத்தில் என் நரம்புகள் முழுக்கப் பாயும் அன்பெனும் இரத்தம்…
இது கவிஞர் தமிழ் உதயாவின் கவிதை:
வீடு மயானமான தினம்
தெருவோ ஊரோ அன்றி நாடோ
தேவையாய் இருக்கக்கூடும்
வெளியேறும் அறையின்
ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும்
நிசப்தத்தின்
சப்த அடையாளம் கதவு
தாவிப்பறக்கும் மின்மினிகள் அக்கதவு நீக்கில் நசிபட்டு
மாசற்று ஒளிர்கிறது
அது மனிதத் துயரை முகவரியிட்டு மூடி மூடித் திறக்கிறது
கண்ணீர் ததும்பாத மனித சஞ்சாரம் ஓர் அமரகானத்தை இசைத்து விடலாம்
வீணையின் அடிநாதம் அறுந்திராத கணமொன்று
துடித்துக் கொண்டிருக்கையில்
தந்தியில் இளையோடும் உயிருக்கு துருவேறுவதில்லை தோழா
ஒரு கவிதையில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதுதான் ஒரு கவிதை நமக்குப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் முதற்காரணம் என்று தோன்றுகிறது. முழுமுதற் காரணம் என்று சொல்லலாமா, தெரியவில்லை. ஒரு கவிதையின் அனைத்துவரிகளும் நமக்குப் புரிவதால் மட்டுமே அந்தக் கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடும் என்று சொல்லவியலாது. அதேபோல், சிலவரிகள் புரியாமலிருந்தாலும் ஒரு கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடுவதும் உண்டு.
நாம் தினசரி பார்க்கும் ஒன்றை – ஒரு பொருளையோ, இடத்தையோ, மனிதரையோ, நிகழ்வையோ வேறொரு கோணத்தில் பார்க்கும் கவிதை – வாழ்க்கை குறித்த ஒரு புதுப்பார்வையையே நமக்கு ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. கவிதையின் வரிகளில் காட்சிப்படுத்தப்படும் சில நமக்குப் பிடிபடாமல் இருக்கலாம். இதனாலேயே சிலருக்கு ஒரு கவிதை பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம்.
ஒரு முழுக்கவிதையும் திட்டவட்டமாக ஒரு அர்த்தத்தை நமக்குத் தரவில்லை யாயினும் கூட (நமக்கு என்ற வார்த்தை அடிக்கோடிடப்பட வேண்டியது) அதில் சில வரிகள், சில படிமங்கள், காட்சியுருவாக்கங்கள் நம்மை ஈர்க்கலாம்; நெகிழ வைக்கலாம்.