வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழாக்குறிப்புகள்!

வித்துவான் வேந்தனார்- வேந்தனார் இளஞ்சேய் -அன்பிற்குரிய தமிழ் நண்பர்களே! என் தந்தையாரின்  ஐந்து உரைநூல்கள், இலங்கைத் தமிழ் மாணவர்களுக்குப், பாடப் புத்தகங்களாக , 1952  ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இருந்தன. அவர் 1966  ஆம் ஆண்டே காலமாகிவிட்ட  போதும், அவரின் இப் பாட நூல்கள், பாடவிதானங்களில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமையால், மீண்டும் மீண்டும் மீள் பிரசுரம் செய்யப்பட்டன. உங்களில் பலர் இந் நூல்களை , உங்கள் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்புக்களில் படித்திருந்திருப்பீர்கள். தாம் படித்த இந்துசமயபாட நூல் , பாரதியார் பாடல்கள் விளக்கவுரை, கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம், கம்பராமாயணம் – சுந்தரகாண்டம்- காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும், கம்பரிமாயணம் அயோத்தியா காண்டம் – மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்  போன்ற சிறந்த உரைநூல்களைப்   பற்றிப் பலர்,  என்னுடன் மிக மிகப் பெருமையாகக் கூறியுள்ளார்கள். இந்த நூல்களை எல்லாம் , அத்துடன் என் தந்தையாரால் சேமித்து வைக்கப் பட்டிருந்த, அவரின் பல நூற்றுக் கணக்கான பத்திரிகைக் கட்டுரைகள் , அவரின் கையெழுத்துப் பிரதிகள் , அவரின் பல புகைப்படங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடைத்தற்கரிய பழம் பெரும் தமிழ் இலக்கிய நூல்கள்  , போன்ற அரும் பெரும் பொக்கிசங்களை நாம் 1995 ஆம் ஆண்டுப் பேரழிவில் , குடிப்பெயர்வில் இழந்தோம்.

என் தந்தையாரின் ஆக்கங்களை, கடந்த சில வருடங்களாக நான் மிகச் சிரமப்பட்டுத் தேடியெடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இன்று நான் சில நல்லுள்ளங்களின் உதவியினால் , என் தந்தையாரின் 5 உரை நூல்களையும் எடுக்க முடிந்துள்ளது. நூலகம் தாபகர் திரு பத்மநாபஜயரின் உதவியினால் மூன்று உரை நூல்களும், எனது நண்பர் திரு அருண் மனோகரனின் உதவியால் ஒரு உரை நூலும், எனது நண்பர் திருமதி குகா நித்தியானந்தன் உதவியால் ஒரு  உரை நூலும்  ஆக , ஜந்து உரை நுல்களும் கிடைத்துள்ளன. இவற்றில் நான்கு நூல்கள், நூலக இணையத்தில் தற்போது பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. மற்றைய உரைநூல் என்னிடம் கைவசம் உள்ளது.  விரைவில் நூலகம் இணையத்தில் பதிவிறக்கம் செய்ய ஒழுங்குகள் செய்யப்படும். நூலகம் இணையத்தளத்தில், வேந்தனார் அவர்களின் நான்கு உரைநூல்கள், “தன்னேர் இலாத தமிழ்” கட்டுரை நூல், கவிதைப் பூப்பொழில்(1964 & 2010), “குழந்தைமொழி”(2010” திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சி”(1962) என்பன பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளன. இவற்றை வாசித்து நீங்கள் பயனடைய முடியும்.

என்னால் தொகுக்கப்பட்டு ,2010 இல் வெளியிடப் பட்ட “வித்துவான் வேந்தனார்” என்ற நூலும் , நூலகம் இணையத் தளத்தில், எனது பெயரின் கீழ் பதிவிறக்கம் செய்யப் பட்டுள்ளது. இந்த நூல் வேந்தனார் பற்றித் தமிழ் அறிஞர்கள், அவரது நண்பர்கள், மாணவர்கள் ஆகியோர் காலத்திற்குக் காலம் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பாகும். வேந்தனார் பற்றி வருங்காலங்களில் ஆராய விருக்கும் தமிழ் இலக்கிய மாணவர்கட்கும், வேந்தனார் பற்றி அறிய விரும்புவர்களுக்கும் இந்நூல் மிகவும் பயன்தரக் கூடியது. வித்துவான் வேர்தனார் எழுதிய ஆக்கங்களில், எமக்குத் தெரிந்த ஆக்கங்கள் பற்றிய விபரம், இந்த நூலில் பக்கம் 146 – 154 வரை, பட்டியலிடப் பட்டுள்ளன. இவற்றில் தினகரன் பத்திரிகைக் கட்டுரைகளில்  ஓர் தொகுதியும், ஈழநாடு பத்திரிகை தொல்காப்பியக் கட்டுரைகளும், வரும்  28 சித்திரை 2019 இல், இரு கட்டுரை  நூல்களாக , இலண்டனில் வெளியிடப்படவுள்ளன. இவை இலக்கியப் பிரியர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்பது எனது திடமான  கணிப்பாகும். மீதமுள்ள அவரின் பத்திரிகைக் கட்டுரைகளும் இரண்டு – மூன்று  நூல்களாக , வருங் காலங்களில் வெளியிடப்படும். அவரின் குழந்தைப் பாடல்கள் 35 இல் 13 பாடல்களை, எனதருமைத் தமக்கையார் , இறுவெட்டில் வெளியிட்டிருந்தார். எனது கடந்த மூன்று வருட தேடல்களில், அவரின் மூன்று குழந்தைப் பாடல்கள்  மேலதிகமாக , ஈழநாடு , தினகரன் பத்திரிகைகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன . ஆக அவரின் 38 குழந்தைப் பாடல்களில், இசையமைக்கப் படாத 25 பாடல்களும், தற்போது இசையுடன் இறுவெட்டில் வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்தவகையில் அவரின் 38 குழந்தைப் பாடல்களும் , பிள்ளைகளின்வயதிற்கேற்ப  ,மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு , ஒவ்வொரு நூலுடனும் இறுவெட்டுக்களும் இணைக்கப்பட்டு, வரும் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்படவுள்ளன. இந்நூல்கள் இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கும் சிதறுண்டு வாழும் நம் தமிழ்  சிறார்களுக்கு மிக மிகப் பயனுள்ளதாக அமையும்  என்பதில், எனக்கு எவ்வித ஜயப்பாடும் இல்லை. இவற்றில் கணிசமான பாடல்கள், கடந்த 65 வருடங்களாக, உங்களில் பலராலும், சிறுவயதில்  பாலர் பாடப் புத்தகத்தில், நீங்கள் படித்த பாடல்களாகும். ( காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா, கும்பிடு நீ கும்பிடென்று குனிந்து சொல்லும் பாட்டி, சின்னச் சின்னப்பூனை, வெண்ணிலா, பறவைக்குஞ்சு, புள்ளிக்கோழி, மயில், கரும்பு தின்போம்  போன்ற பாடல்கள்).

Continue Reading →

க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்; விளையாடும் பூனைக்குட்டி!

 க.நா.சு(*10.2.2019 தேதியிட்ட சமீபத்திய திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

“இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால், எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வதுதான்” – க.நா.சு


க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்] [ ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988]

இந்தச் சிறு கட்டுரையை நான் இப்போது எழுதுவதற்குக் காரணம் க.நா.சுவின் பிறந்தநாள் ஜனவரி 31(1912) என்பதா? இல்லை. இலக்கிய விமர்சகராகத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்கள், விமர்சனம் என்ற பெயரில் சக-படைப்பாளிகளைக் கேவலப்படுத்துபவர்கள் க.நா.சு பெயரையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் க.நா.சுவின் விமர்சன அணுகுமுறையே இந்தவிதமாகத்தான் அமைந்திருந்தது என்று யாரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் எண்ணிவிட லாகாது என்பதற்காகவே இதை எழுதத் தோன்றியது].

எழுத்தாளர் க.நா.சுவின் நூற்றாண்டுவிழா என்று நினைக்கிறேன். சென்னை, மயிலையில் ஸ்ரீராம் அறக்கட்டளை –விருட்சம் சார்பாக ஒரு கூட்டம் நடந்தது. நானும் பேசினேன்.

க.நா.சுவின் வாழ்நாளில் கடைசி ஒன்றரை இரண்டு வருடங்கள் – அவர் சென்னைக்கு வந்துசேர்ந்த பின் தன எழுதுவதைப் பிரதியெடுக்க உதவிக்கு ஆட்கள் தேவை என்பதாக அவர் கூறியிருந்ததைப் படித்து ‘சாகித்ய அகாதெமி விருது வாங்கியவர் நீங்கள். உங்களுக்கு உதவ எத்தனையோ பேர் இருப்பார்கள். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமானால் அதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுவேன்’ என்றெல்லாம் நான் எழுதியனுப்பிய தபால் அட்டைக்கு ‘அப்படியெல்லாம் யாரும் உதவிக்கு இல்லை. நீங்கள் வரலாம். ஆனால், சன்மானம் எதுவும் தர இயலாது’ என்பதாக சுருக்கமாக பதில் வந்தது. அப்போது நான் மந்தைவெளியில் இருந்தேன். அவர் மயிலாப்பூர் கோயில் பக்கம். அதன்பின் அவருடைய இறப்புவரை தினமும் காலையில் இரவுப்பணி முடிந்து வீடு செல்லும் வழியில் அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கமாகியது. அவர் சொல்லச் சொல்ல எழுதுவதும், அல்லது அவருடைய எழுத்தாக் கங்களைப் பிரதியெடுத்துக்கொடுப்பதும் வழக்கமாகியது. அவருடைய கையெழுத்து சிற்றெறும்புகள் ஊர்ந்துசெல்வதைப்போல் சின்னச்சின்னதாக அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்கும். அப்போது தினமணிக்கதிரில் பணிபுரிந்துகொண்டிருந்த தேவகி குருநாத் நான், இன்னும் ஒருசிலரால் மட்டுமே அவற்றைத் தெளிவாக வாசிக்க முடியும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 326: இலங்கைக்கொடியும், வாளேந்திய சிங்கமும், கொடி மாற்றத்தின் அவசியமும்!

சிங்களக் கவிஞர் ஆரியவன்ச றனவீரவின் (Ariyawansa Ranaweera)அண்மையில் எழுத்தாளர் சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘தென்னிலங்கைக் கவிதைகள்’ நூலிலுள்ள சிங்களக் கவிஞர் ஆரியவன்ச றனவீரவின் (Ariyawansa Ranaweera) கவிதைகளிலொன்றான ‘இன்றைய சிங்கம்’ (Contemporary Lion) கவிதையை வாசித்தபோது பலவித எண்ணங்கள் இலங்கைக் கொடியினைப்பற்றி எழுந்தன. சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்புக் கவிதையான ‘இன்றைய சிங்கம்’ கவிதை வருமாறு:

கவிதை: இன்றைய சிங்கம்

வலக்கையில் வாள் ஏந்தி
தலையைச் சிலுப்பியபடி
காற்றில் படபடக்கிறது
சிங்கராஜா
எங்கள் சின்னம்.

மகாவம்சம்:
யானையின் தலையைப்பிளக்கிறது.
தனியே அலையும் சிங்கராஜா
அதன் வீர கர்ச்சனை
அதன் இனத்துக்கு ஆறுதல்
ஆபத்து வேளையில்
தன்னினத்தைக் காக்க
தலைமை தாங்கி
முன்னே செல்கிறது சிங்கம்.

அமைதி காலத்தில்
நீர்வளத்தை வசப்படுத்தி
பயிர்பச்சை செழிக்க
பாரிய குளங்களைக் கட்டியது.

மகளுடைய விலங்கியல் நூல்:
இரவு பகலாய்
கண்ணை மூடியபடி
சோம்பி
தூங்கி வழியும்
சில அடிகள் ஓடும்
தன் இனத்தைப்புறக்கணிக்கும்
பெண் சிங்கம் கொண்டுவரும் இரைதான்
அதற்கு உணவு, ஆகாரம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 325 : எழுத்தாளர் பூர்ணிமா கருணாகரனின் கவிதைத்தொகுப்பு – ‘பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்!?

எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரனின் கவிதைத்தொகுப்பு -  'பெட்டைக் காகங்களிடுm குயில் குஞ்சுகள்!?'  – பூர்ணிமா கருணாகரனின் பெப்ருவரி 23, 2019 , ஸ்கார்பரோவில் (கனடா) நடைபெறுவுள்ளதாக அறிகின்றோம். நிகழ்வு வெற்றியடைந்திட வாழ்த்துகள். –


எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரன்எழுத்தாளர் பூர்ணிமா  கருணாகரனின் கவிதைத்தொகுதியான ‘பெட்டைக் காகங்களிடு குயில் குஞ்சுகள்!?’ என்னும் கவிதைத்தொகுப்பினை முகநூல் நண்பர் யோக  வளவன் தியா மூலம் கிடைத்தது. அதற்காகக் கவிஞருக்கு என் நன்றி. பொதுவாக நூல் மதிப்புரைக்காக நூல்களைத் தருபவர்கள் மதிப்புரைக்காகத் தம் நூல்களை அனுப்புவார்கள். ஆனால் கனடாவிலோ வசதியாக வாழ்பவர்கள் தம் நூல்களையும் வாங்கி அவற்றுக்கான மதிப்புரையினையும்  எழுத வேண்டுமென்று நினைப்பார்கள். இந்நிலையில் எங்கோ தொலைவிலிருக்கும் கவிஞர் பூர்ணிமா கருணாகரன் தன் நூலினை எனக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றார். அதற்காக அவருக்கு மனப்பூர்வமான நன்றி. நூலினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தின் பெயரினை நூலில் காணவில்லை. அதனால் நூலை நூலாசிரியரே  எடிசன் அச்சகம் உதவியுடன் நூலினை வெளியிட்டுள்ளார் என்று கருதுகின்றேன். எடிசன் ‘பிரிண்டர்ஸ்’ மூலம் வடிவமைப்புச் செய்யப்பட்டு நூல் வெளிவந்துள்ளதை நூலிலுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. பளபளப்புத் தாள்களில் நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது. வாழ்த்தப்பட வேண்டியதொன்று.

நூலினை மேலோட்டமாக வாசித்தபோது அவதானித்த சில விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்: ஆசிரியர் மீதான அவரது தந்தையாரின் ஆளுமை ஏற்படுத்திய பாதிப்புகளையும், அவற்றின் விளைவாக ஆசிரியரின் எண்ணங்களிலுதித்த கருத்துகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் நூலின் வாசிப்பின்போது அவதானித்தேன். இவை தவிர நூல் ஆசிரியரின் பார்வையிலான பெண்கள் பற்றிய் நோக்கு பெண் உரிமை பற்றி விரிவாக அறியப்பட்டு, புரியப்பட்டுள்ள நிலையில் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிவிடலாம். கவிதைகளின் ஏனைய கூறு பொருட்களாக மனிதத்துவம், பெண் கல்வி, தாய்மை, தந்தைமை, பெண்ணுரிமை, விதவைகளின் நிலை, மானுட வாழ்க்கை, சமூகச்சீரழிவுகள் காரணமாக முதிர்கன்னிகளாக வாடும் பெண்களின் நிலை, புகலிடத்தமிழர்தம் வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புகள், முன்னாட் போராளிகளின் நிகழ்கால நிலை, முதியவர்களின் நிலை, மானுட சமுதாயத்தில் தொடரும் வன்முறை என்று பல்வேறு விடயங்களைப்பற்றிய கவிஞரின் எண்ணங்கள், அறச்சீற்றங்கள் கவிதைகளாகியுள்ளன.

தொகுப்பின்  முதற் கவிதை அவரது தந்தையாரின் ஆளுமையினை, அவ்வாளுமை கவிஞரின் மீது ஏற்படுத்திய பாதிப்பினை வெளிப்படுத்துகின்றது. கூடவே தந்தையாருக்கு நடந்த கொடுமையினையும் எடுத்துக்கூறுகின்றது. முதலாவது கவிதையான ‘அப்பாவின் கை பிடித்து..’ தந்தையின் ஆளுமையினைப் பற்றி விபரிக்கையில் அவரது தலைமைத்துவப்பண்பினை விபரிக்கின்றது. அவ்விதம் விபரிக்கையில் அவ்வாளுமை கவிஞருக்குக் கற்றுத்தந்த அப்பண்புகளையும் எடுத்துரைக்கின்றது:

” தலைவன் என்பவன் எப்படி
தலைமைத்துவம் என்பது
எப்படி என்பதைக்
கற்பித்து வந்தவன் நீ”

“மிருக வதை
வேள்வித் தடை
அன்றே
அதை
உரத்துச் சொன்னவன் நீ” என்று கூறும் கவிஞரின்  வரிகள் தந்தையாரின் மிருக வதைக்கெதிரான குரலினையும் எடுத்துக்காட்டுகின்றன. கீழுள்ள வரிகள் தந்தையாரின் மேலுமொரு முக்கிய பண்பொன்றினை எடுத்துரைக்கின்றது.

“வீரத்தை உன் பேச்சில் காட்டி
விவேகம் செயலில் காட்டி
வணங்காய் முடியாய்
வாழ்ந்து மடிந்தவன் நீ”

இவ்விதமாக வணங்காமுடியாய் வாழ்ந்தவர் கவிஞரின் தந்தை. இவ்விதமாகத் தந்தையாரின் ஆளுமை. அது ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் கவிதை இன்னுமொரு விடயத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது போர்ச்சூழலில் அவர் தந்தையை இழந்தது எப்படி, இழப்பதற்குரிய காரணம் அல்லது காரணங்கள் எவை என்பவை பற்றியெல்லாம் கவிதை ஆராய்கின்றது. பின்வரும் வரிகள் கவிஞரின் தந்தைக்கு ஏற்பட்ட நிலையினை விபரிக்கின்றது.

Continue Reading →

கவிதை: லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) கவிதைகள்

1. அவரவர் – அடுத்தவர்

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) (* சமர்ப்பணம்: கவிதைப் பிதாமகர்களுக்கும் ‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்)

‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமாவென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
“வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ”ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
“முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ” என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!

(*சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தனிமொழியின் உரையாடல்’ – கவிதைத் தொகுப்பிலிருந்து)

2. சதுர நிலவின் மும்முனைகள்

தன் சதுர நிலவை
உள்ளங்கைக்குள் பொதிந்துவைத்திருந்தது குழந்தை.
வட்டமாயில்லாதது எப்படிச் சந்திரனாகும் என்று
கெக்கலித்துக் குற்றஞ்சாட்டி
கத்தித்தீர்த்த திறனாய்வாளரைப் பார்த்து
கன்னங்குழியச் சிரித்து
தன் ஒரு நிலவைப் பல வடிவங்களில்
பிய்த்துப்போட்டதில்
பெருகிய ஒளிவெள்ளத்தைக்
கைகுவித்து மொண்டு குடித்து மகிழ்ந்த குழந்தை
நாவறள நின்றிருந்தவரை அன்பொழுகப் பார்த்து
அவர் கையிலிருந்த தரவரிசைப்பட்டியல் தாளைத்
தன் சின்னக்கைகளால் விளையாட்டாய்ப் பறித்து
அதில் சிறிது ஒளிநீரை அள்ளி ஊற்றி
அவரிடம் குடிக்கச் சொல்லித் தந்த பின்
தன்போக்கில் துள்ளி முன்னேறிச் சென்றது.

Continue Reading →

இலக்கியத் திறனாய்வும் இருக்கவேண்டிய தகுதியும்

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) வணக்கம்.  இலங்கையில் விமர்சன மரபு இல்லை என்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பது தொடர்பாய் பதிவுகள் இணையதள ஆசிரியர் வ.ந.கிரிதரன் தனது இதழில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த உரையின் சுட்டியையும் தந்துள்ளார். விமர்சனம் என்ற இந்த ஒன்று தொடர்பாய் சில கருத்துகளை இங்கே பகிரத் தோன்றுகிறது. 

இலக்கியத்திற்கு விமர்சனம் தேவை, விமர்சன மரபு தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.  அதேசமயம், விமர்சகர் என்பவருக்கும் அதற்கான அடிப்படைத் தகுதிகள் சில உள்ளன என்பதையும் யாரும் மறுக்கவியலாது. அதேபோல், இலக்கிய விமர்சகராகத் தன்னை பாவித்துக்கொள்பவர் பொதுவெளியில் இலக்கிய விமர்சனம் குறித்துப் பேசும்போது ஒரு குறைந்தபட்ச கண்ணியத்தைத் தன் வார்த்தைகளில் கையாளவேண்டியது அவசியம் என்பதையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இலக்கிய விமர்சனம் தொடர்பான எழுத்தாளர் ஜெயமோகனின் உரையைக் கேட்டேன். :[https://www.youtube.com/watch…] இலக்கியம் சார்ந்த ஒரு கருத்தை முன்வைக்க இத்தனை எகத்தாளமும் தடித்தனமும் அவசியமா? இலங்கைக் கவிஞர்கள் என 300 பெயர்கள் அடங்கிய் ஒரு பட்டியலை திரு பொன்னம்பலம் என்பவர் தந்ததாகக் குறிப்பிட்டு அதற்கு ஒரு பதில் எழுதியதாகவும் அதில் ” ஒரு நாட்டில் 200 நல்ல கவிஞர்கள் இருந்தால் அதுக்கு பூச்சிமருந்து கண்டுபிடித்து அழிக்கத்தான் வேண்டும். நாட்டுல சட்டம் ஒழுங்கு என்னாவது? மகளிருடைய கற்பு என்னாவது?” என்று பேசுகிறார். கேட்கவே அருவருப்பாக இருந்தது. அளப்பரிய வருத்தத்தைத் தந்தது. 

அவர் வேடிக்கையாகப் பேசியதாக சிலாகிக்கவும், இலக்கியத்தில் பகடிக்கு இடமிருக்கிறது என்று நியாயம் பேசவும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் மீது குறிப்பாக இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் வீசப்படும்போது அவர்கள் இதே பெருந்தன்மையோடு அவற்றை எதிர்கொள்வார்களா என்று தெரியவில்லை.

இலக்கியம் என்பது அடிப்படையாக மொழி சார்ந்தது. ஒரு மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் தங்களுக்குள் ஒத்துறவு உணர்வதும், சகோதரத்துவம் பேணுவதும் இயல்பு. ஆனால், எழுத்தாளர் ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களுக்கென்று அங்கே விமர்சன மரபு இல்லை என்றும், இலக்கிய தரப்படுத்தல் இல்லையென்றும் அங்குள்ள எழுத்தாளர்கள் தமிழ்நாட்டிலுள்ள கோட்பாடுகளையும் அளவுகோல்களையும் விமர்சனங்களையும்தான் நாடவேண்டியிருக்கிறது எனவும், தமிழ்ப்படைப்பாளிகளை நாடுவாரியாகப் பிரிக்கிறார். இலக்கியத்தில் உலகத்தரம் என்று ஒன்று இருக்கிறது. இதில் உலகெங்குமுள்ள தமிழ் எழுத்தாளர்களை இப்படி நாடுவாரியாகப் பிரித்துப்பேசுவது எப்படி சரியாகும்? பிரமிள் எந்த நாட்டுக்குச் சொந்தம்?

தமிழின் கவிஞர்கள், குறிப்பாக இலங்கைக் கவிஞர்கள் நடப்புச் சமூகச் சூழலில் எத்தனையோ புறக்கணிப்பினூடாகவும் , வாழ்வியல் நெருக்கடி ளினூடாகவும் கவிதை பால் கொண்ட ஆர்வம் காரணமாக அதில் தொடர்ந்து இயங்கிக்கொண் டிருக்கிறார்கள். அவர்களைத் தன் வார்த்தைகளால் இத்தனை கேவலப்படுத்தியிருப்பது மகா கொடுமை. இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் அவற்றைப் பிரயோகிப்பவர்களின் calibreஐத் தான் அடிக்கோடிட் டுக் காட்டுவதாக அமையும்.

அரைமணி நேர உரையில் அந்த நான்கு வரிகள் தான் உங்களுக்குக் கேட்டதா என்று கேட்பதில் எந்தப் பொருளுமில்லை; எந்தப் பயனுமில்லை. அவர் உரை ஒரு குடம் பாலோ, வேறு எதுவோ – அந்த நான்கைந்து வரிகள் வெகு அநாகரீகமானவை. எழுத்தாளர்கள் எத்தனை நுட்பமாக மொழியைக் கையாள்பவர்கள். ஒரு பொதுவெளியில் ஒரு கருத்தை நயமாக, நாகரீகமாக முன்வைக்க முடியாதா என்ன? தெரியாதா என்ன? எல்லாம் முடியும். எல்லாம் தெரியும் – ஆனாலும் இப்படித்தான் பேசுவது என்றால்…..?

Continue Reading →

இலங்கையின் சுதந்திரமும் , தமிழர்களும்!

இலங்கையின் சுதந்திரமும் , தமிழர்களும்!

இலங்கை என்னும் நாடு அங்கு வாழும் அனைவருக்கும் உரிய தாய்நாடு. ஆனால் நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 2009 வரை அங்கு வாழும் சிறுபான்மையின மக்களுக்கெதிராகக் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள், அரச அடக்குமுறைகள் , பயங்கரவாதத் தடைச்சட்டத் துஷ்பிரயோகம், மற்றும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் பலியாகிய தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காத நிலையில், சிறுபான்மையின மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இலங்கையில் அனைத்து மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாகி , அனைத்து மக்களும் நீதியின் முன் சமம் என்னும் நிலை உருவாகாத நிலையில், இழந்த காணிகள் இன்னும் முழுமையாகக் கிடைக்காத நிலையில், இன்னும் போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள் நடைபெற்று நீதி கிடைக்காத வரையில் இதுவரை நடைபெற்ற வன்முறைகளால பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்விதம் மனமொன்றி நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவார்கள்?

Continue Reading →

ஆய்வு: தொண்டைமண்டலத்தில் தொல்பழங்காலப் பதிவுகள்

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -தொண்டைமண்டலம் தொல்பழங்காலம் தொட்டே ஒரு வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இயங்கிவருகிறது. இது பழையகற்காலம், புதியகற்காலம், பெரும்கற்காலம் என்று அதன் தொன்மையினை வரையறுத்துக் காட்டுகிறது. இப்பகுதிகளில் தொல்லுயிர்ப்படிமங்கள், தொல்மரப்படிமங்கள், கல்திட்டை, கல்பதுக்கை, கற்கிடை, ஈமத்தாழி, ஈமப்பேழை எனப் பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் காணக்கிடக்கின்றன.

தொல்லுயிர்ப்படிவுகள்
தொன்மைச்சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி அழிந்துபோன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் தொல்லுயிர் படிவுகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தொண்டைமண்டலப் பகுதிகளில் பெருமளவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருங்காட்டுக்கோட்டை, கண்ணன்தாங்கல், சிவன்கூடல் போன்ற ஊர்களில் தாவரப் படிமங்கள், பழங்கற்காலக் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன (நடன.காசிநாதன்,2010:10-11).

பழையகற்காலப்பண்பாடு
இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் (Pleistocene) காலத்தில் பழையகற்காலப்பண்பாடு தோன்றியது. இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் காடுகளிலும் மலைகளிலும் நாடோடியாக வாழ்ந்தான். அவன் கொடியமிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தம்வாழ்வின் பல உபயோகங்களுக்கும் குவார்ட்சைட் (Quartzite) எனப்படும் கூழாங்கற்களிலிருந்து செய்யப்பட்ட கடினமான கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இந்தியாவில் இப்பழையகற்காலமானது கற்கருவிகளின் பொதுத் தன்மைகளையும் தொழில்நுட்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் முதற் பழங்கற்காலம் (Early or Lower Palaeolithic Age) எனப்படும் காலம் ஏறத்தாழ 5,00,000 – 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இக்காலத்தில் வாழ்ந்த மனிதன் கூழாங்கற்களினாலான கைக்கோடாரி (Hand Axe), வெட்டுக்கருவி (Chopper), கூர்முனைக்கருவி (Points), வட்டுக்கருவி அல்லது தட்டுவடிவக்கருவி (Discoids), கிழிப்பான் (Cleavers) போன்ற பெரியவகை கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இதற்கடுத்துவரும் இடைப் பழங்கற்காலமானது (Middle Palaeolithic Age), சுமார் 50,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலத்தில் நிலவியதாகும். இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் சிறிது அறிவுத்திறன் வளர்ச்சி பெற்றவனாகமாறி இருந்தான். இக்காலத்தில் பயன்படுத்தப் பட்ட கற்கருவிகள் அளவில் சிறியவையாகவும் நேர்த்தியானவையாகவும் செய்யப்பட்டிருந்தன. கூழாங்கற்களுடன் செர்ட் எனப்படும் இளம்பச்சைநிற வகைக்கற்கள் ஆயுதங்களைச் செய்யப்பயன்படுத்தப்பட்டன. இக்காலத்தில் கைக்கோடாரி, கூர்முனைக்கருவி, வட்டுகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், ஈட்டிகள், வாய்ச்சிகள் போன்ற பலவகை கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. கடைப் பழங்கற்காலம் (Later or Upper Palaeolithic Age) எனப்படும் சுமார் 20,000 – 10,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மூன்றாவது காலக்கட்டத்தில் சில்லுக்கருவிகளை (Flake tools) பயன்படுத்தியதோடு, குவார்ட்ஸ் (Quartrz), செர்ட் (Chert) போன்ற வகைக்கற்களினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான கூர்மையான, நேர்த்தியான ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பிளேடு (Blade), துளைப்பான் (Borer), கத்தி (Knife), சுரண்டி (Scrapper), கிழிப்பான் (Cleaver) போன்ற வகையான கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். மேற்குறிப்பிட்ட மூன்று பழங்கற்காலப் பண்பாடுகளும் நிலவிய தற்கான சான்றுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாகக் காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (நடன. காசிநாதன்,2010:12).

Continue Reading →

இளஞ்சேய் வேந்தனார் கவிதைகள்!

- வேந்தனார் இளஞ்சேய் -

1. சிதறிப்போன ஆசைகள்

பனி பொழிந்ததின்று மாலையிங்கு
பள்ளிச்சிறுவர் பனியள்ளி வீசினர்
பார்க்கப் பார்க்க என்நினைவுகள்
புலத்து வாழ்வை எண்ணியேங்கின

சின்னச் சின்ன ஆசைகள்
சிதறிப் போன ஆசைகள்
வாலிபத்தில் இழந்து விட்ட
வசந்த காலப் பொழுதுகள்

ஊர்க்காற்றை சுவாசித்திட ஆசை
உருண்டு மண்ணில்புரள ஆசை
மழையில் கப்பல்விடவும் ஆசை
மாங்காய் எறிந்துவீழ்த்த ஆசை

Continue Reading →