அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் (Hate Crimes) 17 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை கூறியிருப்பது, எம்மைப் பொறுத்தவரை, ஒரு புதினமல்ல! ஆனால், கனடாவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் 47 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றன என்பது கனடியர்களால் புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு செய்தியல்ல! கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படத் தொடங்கிய கடந்த 10 வருடங்களில் இதுவே மிகப் பெரும் அதிகரிப்பு. 29-11-2018 வியாழன்று கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் காணப்படும் இத்தகவல்களைக் கனடியர்கள் கருத்தில் கொள்ளாமல், வெறுமனே கடந்துசெல்ல முடியாது.
கனடா, உலகில் முதன்முதலாகப் பன்முகப் பண்பாட்டுக் கருத்தியலுக்கு வெற்றிகரமாக வித்தூன்றிய பெருமைக்குரிய நாடு; இருக்க இடம்தேடிவரும் உலகநாட்டு ஏதிலிகளை இன்முகம் காட்டி வரவேற்பதற்கெனத் தன் வாசற்கதவை எப்போதும் அகலத் திறந்து வைத்திருக்கும், தயவும் தாராண்மையும் கொண்ட நாடு; வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, உச்சப் பலாபலன் பெறுதற்கான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொண்ட நாடு; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மக்களாட்சிப் பண்புகளை, மையவிழுமியங்களாகக் கொண்ட நாடு; அன்பை விதைத்து, அதனை உரமூட்டி வளர்த்தெடுத்து, அதன் பயனுறு விளைச்சல்களை அறுவடை செய்வதில் வெற்றிகண்ட நாடு. இத்தகைய உன்னதங்களைத் தன்னகத்தே கொண்ட கனடிய மண்ணில், இன்று வெறுப்பும், பகைமையும், வன்மமும் உப்பாக ஊடுபரவ ஆரம்பித்துள்ளமை, இந்த நாட்டு மக்களுக்கு உவப்பான செய்தியல்ல!
‘இனத்துவம், பாலியல் போன்ற பல்வகை வேறுபாடுகள் சார்ந்த வெறுப்புணர்ச்சியினால் அல்லது தப்பபிப்பிராயத்தினால் தூண்டப்பட்டு, பொதுவாக வன்செயலில் வந்து முடியும் ஒரு குற்றச் செயலே வெறுப்புக் குற்றம்’ என வரைவிலக்கணம் ஒன்று கூறுகின்றது. இதன்படி, குறிப்பிட்ட சமூகக் குழுக்களை அல்லது இனங்களை இலக்காகக் கொண்டே, குற்றம் புரிவோர் இவ்வாறான வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரியவருகின்றது.
2016ஆம் ஆண்டு கனடாவில் 1,409 வெறுப்புக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்து வந்த ஆண்டில் (2017), அதன் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்திருக்கின்றது. 2014 முதல், கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளபோதிலும், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிகரிப்பு, புறக்கணிக்க முடியாதபடி கணிசமானது எனக் கனடியப் புள்ளிவிபரத் திணைக்களப் பேச்சாளரான றெபெக்கா கொங் (Rebecca Kong) கூறுகின்றார். மேலும், ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களுள், தனியார் சொத்துக்களைத் தாக்கியழித்தல், பொதுச்சுவர் அவதூற்று எழுத்துருவங்கள் (graffities) போன்ற வெறுப்புக் குற்றங்கள் காரணமாகவே 2017ஆம் ஆண்டு இவற்றின் எண்ணிக்கை திடீரென உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களில் 43 சதவீதமானவை, இன வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 41 சதவீதமானவை, மத வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 10 சதவீதமானவை, பாலின வேறுபாடு அல்லது பாலினச் செயற்பாடு சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவ்வகைப்பட்ட குற்றங்களுள் அநேகமானவை, முஸ்லீம்களையும் யூதர்களையும் கறுப்பினத்தவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டவையாகும். குறிப்பாக, முஸ்லீம்களுக்கு எதிராக 349 வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் 2017ஆம் ஆண்டு இடம்பெற்றிருப்பதாகவும், இவ்வெண்ணிக்கை முன்னைய ஆண்டுக்கான எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானதெனவும் கண்டறியப்பட்டிருக்கின்றது.
2014இல் இடம்பெற்ற கருத்துக் கணிப்பின் பிரகாரம், அக்காலப் பகுதியில் வெறுப்புக் குற்றங்களுக்கு இலக்கானவர்களுள் சுமார் 66 சதவீதத்தினர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யவில்லை. முறைப்பாடு செய்வோர் மீண்டும் பழிவாங்கப்படுவார்கள் என்றும், முறைப்பாடுகளை யாரும் நம்பப்போவதில்லை என்றும், சம்பந்தப்பட்டோர் மனங்களில் அந்நாட்களில் நிலவிவந்த அச்சமும் அவநம்பிக்கையுமே அதற்கான பிரதான காரணங்களாகும். பிற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்டோர்க்கு காவற் துறை வழங்கிவந்துள்ள ஊக்குவிப்பு, 2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழி திறந்துள்ளதெனலாம்.
Continue Reading →