கவிதை: அ.ந..க.வின் ‘கடைசி நம்பிக்கை’!
பொதுவாகப் பெற்றொர் பிறக்கும் பிள்ளை புத்திக்கூர்மையுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவர். ஆனால் இந்தத்தந்தையோ அதற்கு நேர்மாறு. காரணம் மிகுந்த புத்திக்கூர்மை மிக்க தந்தையிவருக்கு இவருடைய புத்திக்கூர்மை வாழ்க்கைக்கு உதவவில்லை. ‘யானோ எனது புத்தியின் கூர்மையால் , வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கின்றேன்’ என்று வருந்துகின்றார். இதனால் இவர் வேண்டுவதுதான் யாதோ? தனது பிள்ளை அறியாமையிலும், மடமையிலும் சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்றார். அவற்றில் எவர்க்கும் குறைவிலாதிலங்க வேண்டுமென்று விரும்புகின்றார். 🙂
“இன்றென் நினைவு ஒன்றேயாகும் –
என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து
அறியாமையிலும் மடமைச்சிறப்பிலும்
எவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி
நிலவும் வாழ்க்கை நீள நடாத்”த வேண்டுமென்று விரும்புகின்றார்.
எதற்காகத் தெரியுமா?
அப்படியென்றால்தான் ,
“ஈற்றில் இந்த நாட்டை இயக்கும்
மந்திரி சபையிலும் குந்தியிருப்பான்” 🙂
ஓரு சீனக்கவிதையின் தமிழாக்கமிது. தமிழாக்கியிருப்பவர் அ.ந.கந்தசாமி. ‘தேன்மொழி’ சஞ்சிகையின் இரண்டாவது இதழில் (ஐப்பசி 1955) வெளியான கவிதை இது. இன்று ஆட்சிக்கட்டிலுள்ள அமைச்சர்கள் பலரைப்பார்க்கும்போது இக்கவிதையில் விரவிக்கிடக்கும் அங்கதம் இதழ்க்கோடியில் புன்னகையினை வரவழைக்கின்றது. அன்று பாடியது இன்றும் நன்கு பொருந்துகிறதல்லவா.