காதுகளை மறைத்து மேலெழும்பும் கொம்புகள்! கேட்டதும் தப்பில்லை ! சொன்னதும் தப்பில்லை ! நடப்பதும் தப்பில்லையா?!

எழுத்தாளர் முருகபூபதி -இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் சென்னையிலிருந்து ஒரு திரைப்பட நடிகரும் அவரது காதலியான நடிகையும் கொழும்புக்கு வந்து கலதாரி மெரிடீன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்களை அழைத்தவர் செட்டியார் தெருவில் ஒரு பிரபல நகைக்கடை முதலாளி. அவர் மற்றும் ஒரு கிளையை திறக்கும்போது குறிபிட்ட நடிகரையும் அவரது காதலியையும் அந்தத்  திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினர்களாக  அழைத்து,  எங்கள் பத்திரிகையில் அரைப்பக்கம் விளம்பரமும் கொடுத்திருந்தார். விளம்பரத்திற்குரிய கட்டணமும் செலுத்திய  அந்த வர்த்தகப்பிரமுகர், குறிப்பிட்ட நடிகர் – நடிகையை யாராவது ஒரு நிருபர் சந்தித்து பேட்டிகண்டு பத்திரிகையில் எழுதி,  தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும்  மேலும் பரவலான தகவல் தரவேண்டும் என்று பிரதம ஆசிரியரிடம் வினயமாக கேட்டுக்கொண்டார். அந்தவேலைக்கு பிரதம ஆசிரியர் என்னை அனுப்பியபோது வேண்டா வெறுப்பாகச்சென்றேன். ” ஒரு சினிமா நடிகரிடம் சென்று எதனைக்கேட்பது? அரசியல்வாதி – இலக்கியவாதியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அந்த சினிமா நடிகரிடம் என்ன கேட்கமுடியும்?  அடுத்து எந்தப்படத்தில் நடிக்கிறீர்கள்? உடன் வந்திருக்கும் காதலியைத்தான் மணம் முடிக்கப்போகிறீர்களா?  இலங்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ” இதனைத்தானே கேட்கமுடியும். இந்த பொறுப்பான(?) கேள்விகளுக்கும் அர்த்தமுள்ள இந்தக் கடமைக்கும் (?) நானா கிடைத்தேன். வேறு எவரும் இல்லையா? என்று எனது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினேன். என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் நன்கு தெரிந்துவைத்திருந்த ஆசிரியர், ” ஐஸே, நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும். பத்திரிகையாளருக்கு எல்லோரும் ஒன்றுதான். அது நாட்டின் அதிபராக இருந்தால் என்ன, சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களாக இருந்தால் என்ன எல்லோரும் ஒன்றுதான். பத்திரிகைக்கு செய்தி முக்கியம். அத்துடன் வரும் விளம்பரங்களும் அவசியம்” என்றார்.

அலுவலக படப்பிடிப்பாளரையும் அழைத்துக்கொண்டு அந்த நடிகர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். வரவேற்பு உபசரணைப்பெண்ணிடம் தகவல் கொடுத்தேன். அங்கிருந்து நடிகர் தங்கியிருந்த அறைக்கு இன்டர்கொம்மில் தகவல் சொல்லப்பட்டதும், நடிகர் என்னுடன் பேசினார். பத்திரிகையின் பெயரும் சொல்லி வந்தவிடயத்தையும் சொன்னேன். பதினைந்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். அவ்வாறே நானும் படப்பிடிப்பாளரும் காத்திருந்து சென்றோம். அவரும் அந்த நடிகையும் தங்களை அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்தார்கள்.

தமிழ்ப்பத்திரிகை என்றவுடன் நடிகர் தமிழ் இனம், தமிழ் மொழி என்று ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். உடனிருந்த நடிகை தமிழ் தெரியாதவர்.  அவர் தெலுங்கில் நடிகரிடம் ஏதோ சொன்னார். எமக்குத் தெலுங்கு தெரியாது. அலுவலகத்தில் ஆசிரியரிடம் குறிப்பிட்ட கேள்விகளையே அந்த நடிகரிடமும் கேட்டேன். ஆசிரியர் சொன்னவாறு நாய்வேடம் தரித்தேன்.

” எம்.ஜி. ஆர் – ஜானகி –  என்.எஸ். கிருஷ்ணன் –  மதுரம் – எஸ். எஸ். ராஜேந்திரன் – விஜயகுமாரி – ஏ.வி. எம். ராஜன் – புஷ்பலதா – ஜெமினி கணேசன் – சாவித்திரி – ஏ.எல். ராகவன் – எம். என். ராஜம்  ஆகியோரைப்போன்று நீங்களும் மணம்முடித்து தொடர்ந்தும் திரையுலகில் நடித்துக்கொண்டிருப்பீர்களா? “

Continue Reading →

தேவகாந்தனின் ‘கதாகாலம்’ – மற்றொரு மகாபாரத மறுவாசிப்பு

– கேரளத்தின் துஞ்சன்பறம்பில் 2018 டிசம்பர் 21-23 நடந்த மகாபாரத சர்வதேச மகாநாட்டில்  கவிஞர்  சோ.பத்மநாதன் ஆற்றிய உரை. –

தேவகாந்தனின் 'கதாகாலம்'-   கவிஞர் சோ.பத்மநாதன்  -மகாபாரதம் என்பது என்ன? வியாசரால் சம்ஸ்கிருத மொழியில் சொல்லப்பட்ட ஃ எழுதப்பட்ட ஒரு கதை. அரசுரிமை பற்றி தாயாதிகளிடையே எழுந்த தகராறு கொடிய போராய் விளைந்து பேரழிவில் முடிந்ததை இக்கதை கூறுகிறது.  கி.மு  1000 அளவில் இன்றைய தில்லிக்கு  அண்மையில் இருந்த அஸ்தினாபுரமே இக்கதைக்குக் களம். பல நூற்றாண்டுகளாக உபகண்டத்தின் பல பகுதிகளில் வாய்மொழியாக வழங்கியதாதலின், என்ன தான் வரலாற்றடிப்படை இருந்தாலும், மகாபாரதம் புனைவாகவே எம்மை வந்தடைந்துள்ளது எனக் கொள்வது தவறாகாது.

பாரதக் கதையைச் சொன்னவர்கள் சூதர்கள்.  இக்கதை சொல்லிகள் சொன்னவை ‘ஜெய கதைகள்’ எனப்பட்டன.  சைவசம்பாயனர், உக்கிரசிரவஸ் முதலிய புகழ்பெற்ற கதை சொல்லிகளோடு பேரறியாக் கதை சொல்லிகள் பலர் நாடுமுழுவதும் திரிந்து பாமர மக்களுக்குப் பாரதக் கதை சொன்னார்கள்.

தன் தந்தை பரீக்ஷித்து பாம்பு தீண்டி இறந்ததால், பாம்பினத்தையே பழிவாங்குதற்காக, ஜனமேஜயன் ஒரு ஸர்ப்பயாகம் செய்யத் தொடங்குகிறான்.  அவனுக்கு வைசம்பாயனர் பாரதக் கதையைச் சொல்கிறார்.

மகாபாரதம் வாய்மொழி மரபுவழி வந்து பிற்காலத்தில் எழுத்துருவம் பெற்றது என்பது வெளிப்படை. கதை சொல்லியான வியாசர் (கிருஷ்ண துவைவபாயனர்) ஒரு கதாபாத்திரமாகவும் வருகிறார்.

மகாபாரதத்தைத் தமிழ் செய்யும் முயற்சிகள் மிகப்பழைய காலத்திலிருந்து நடைபெற்று வந்துள்ளன. ‘மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்பது கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குரிய சின்னமனூர்ச் செப்பேடு.  9ஆம் நூற்றாண்டில் எழுந்த பெருந்தேவனாருடைய பாரதவெண்பா – முழமையானதாய் இல்லாதபோதும் – தமிழில் கிடைக்கும் மகாபாரதங்களுள் காலத்தால் முந்தியது.

வில்லிபாரதம் என வழங்கும் வில்லிபுத்தூராழ்வார் பாரதம் 15ஆம் நூற்றாண்டில் வந்தது.  செய்யுள்களால் அமைந்த இந்நூலை அச்சுவாகனமேற்றியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர்.

மகாபாரதத்தின் நாயகியாகிய பாஞ்சாலி (திரௌபதி)யை மையப்படுத்தி சூதாட்டத்தில் அவள் பணயமாக வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதையும் அவள் சபதத்தையும் ஐந்து சருக்கங்களில், எளிய நடையில் ஒரு நவீன காவியமாகப் பாடியவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்.  பாஞ்சாலிக்கு நேர்ந்த அடிமை வாழ்வையும் அவமானத்தையும் அந்நியர் ஆட்சியில் பாரதநாட்டுக்கு நேர்ந்த இழிநிலையாக, பூடகமாகச் சுட்டி, தேசவிடுதலைக் குரலாக தன் படைப்பை ஆக்கியது பாரதியின் சாதனை எனலாம்.

மகாபாரதத்தை மீளக்கூறும் முயற்சிகள் நெடுங்காலமாக நடைபெற்று வந்துள்ளன.  என் பார்வைப் பரப்புக்கெட்டியவற்றுள் மிகப் பழைய மீள்கூறல் ஐராவதி கார்வேயினுடையது (1967) இது மராத்தியில் எழுதப்பட்டது.  அமெரிக்காவின் பென்ஸில்வேனிய பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்ட காலத்தில் (1969) இப்பெண்மணி ‘யுகாந்தா’ என்னும் தலைப்பில் இதை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் மேலும் பல மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டது.

திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவியாவது வேண்டும் என்றே செய்யப்பட்டதல்ல என்றும், குந்தி உள்ளே இருக்க வெளியே பாண்டவரும் நிற்க, ‘அம்மா, ஒரு கனி கொண்டு வந்தோம்!’ என்று யுதிஷ்ரன் சொன்னான் என்றும், ‘நீங்கள் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று குந்தி சொன்னதாகவும், தாயின் கட்டளையைப் பாண்டவர்கள் நிறைவேற்றியதாகவும், காலம் காலமாகக் கதை சொல்லப்பட்டு வந்தது.  இதைப் புறந்தள்ளி, பாண்டவர்களை ஒற்றுமையாக வைத்திருப்பதற்காக, குந்தி செய்த சூழ்ச்சியாக இதை கார்வே காட்டுகிறார். ‘தன் மக்கள் மூவரை மட்டுமன்றி மாத்ரியின் மக்களையும் பிரிக்க முடியாதபடி குந்தி பிணைத்தாள்’

திருதராஷ்டிரன் பாண்டவர்களையும் குந்தியையும் வாரணாவதம் அனுப்புகிறான்.  அரக்கு மாளிகையில் வைத்து அவர்களை எரிக்க, புரோசனன் என்றொருவன் ஏற்பாடு செய்யப்படுகிறான்.  இச்சதியை முன்கூட்டியே அறிந்த விதுரன், யுதிஷ்டிரனை எச்சரித்ததுமன்றி, அவர்கள் தப்பும் மார்க்கத்தையும் சொல்லி இருந்தான்.  வாரணாவதத்தில் வசித்த காலத்தில், தன்னோடு நெருக்கமாகப் பழகிய ஒரு வேட்டுவப் பெண்ணுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் உணவும் மதுவும் கொடுத்து உறங்கச் செய்தபின், சுருங்கை வழியே குந்தியும் பிள்ளைகளும் தப்பிச் செல்ல, வேட்டுவப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அரக்கு மாளிகையில் எரிந்து ஒழிந்தனர்.

Continue Reading →