யாழ் நகரத்துத் திரையரங்குகள் பற்றியதொரு நனவிடை தோய்தல்!

யாழ் ராணி திரையரங்குஅண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் பல திரையரங்குகள் பல இருந்தாலும் (மனோஹரா, ராணி, ராஜா, றீகல்,, ஹரன், சாந்தி, ஶ்ரீதர், லிடோ (பழைய வின்சர்), வின்சர் , வெலிங்டன் & றியோ ), இவற்றில் என்னை அதிகம் பாதித்தவை பற்றிய பதிவுகளிவை. இவற்றையும், இவற்றுக்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதன் அவசியம் கருதி அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தருகின்றேன்.

1. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று – ராணி

முகநூலில் Shan Naranderan ராணி (யாழ்ப்பாணம்) திரையரங்கின் புகைப்படமொன்றினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு மீண்டும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இன்று ராணி திரையரங்கு இருந்த இடத்தில் ‘சீமாட்டி’ வர்த்தக நிலையமுள்ளது. ஆனால் அன்று எம் பதின்ம வயதுகளில் அவ்வாழ்வுக்குரிய பொழுதுபோக்குகளில் முக்கிய இடத்தை வகித்த திரையரங்குகளிலொன்றாக விளங்கிய திரையரங்கு ராணி. முதன் முதலில் ராணி திரையரங்கைப் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் இ.போ.சபையின் பஸ்ஸில் வந்து , யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது கண் முன்னால் விரிந்தது ராணி திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண் எம்ஜிஆரின் பிரமாண்டமான , ஓவியர் மணியத்தின் ‘கட் அவுட்’ இடுப்பில் கைகளை வைத்து, மணிமுடியுனிருந்த அந்த எம்ஜிஆரின் கட்அவுட் இன்னும் கண் முன்னால் விரிகின்றது. இன்னுமொரு முறை அவ்விதம் வந்து யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படத்திலிடம் பெறும் ‘ஒரு பக்கம் பார்க்குறா’ பாடலுக்கான காட்சியை வெளிப்படுத்தும் இரு எம்ஜிஆர்களின் உயர்ந்த உருவங்களை உள்ளடக்கிய இரு ‘கட் அவுட்’டுகள். இவ்விதமாக ராணி திரையரங்குடன் ஆரம்பமாகியதென் உறவு.

யாழ் ராணியில் பார்த்த , நினைவில் நிற்கும் திரைப்படங்கள்: ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்காரவேலன்’, ‘ராஜா, பட்டிக்காடா பட்டணமா’, ‘சவாலே சமாளி’, ‘பணமா பாசமா’, ‘அன்புச் சகோதரர்கள்’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘என் தம்பி’, ‘இருவர் உள்ளம்’ (மீள் வெளியீடு), வி.பி.கணேசனின் ‘நான் உங்கள் தோழன்’ , ‘புதிய காற்று’, ‘நாளை நமதே’, ‘வாடைக்காற்று’ , ‘பட்டணத்தில் பூதம்’& ‘நீதி’

இன்னுமொரு விடயத்துக்காகவும் யாழ் ராணி நினைவிலுள்ளது. 1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸார் சுட்டுக் கலவரமாகிய சூழலில் தப்பி ஓடிக்கொண்டிருந்த மக்களைத் தன் திரையரங்கில் தங்க வைத்த மனிதாபிமானச் செயல் அது. அதன் மூலமும் ‘ராணி’ திரையரங்கு நெஞ்சில் பதிந்து விட்டது. இன்று திரையரங்கே இல்லாத நிலையில் இது போன்ற புகைப்படங்கள் அரியவை. சேகரித்துச் சேமிக்கப்பட வேண்டியவை. இவை ஒரு காலகட்ட வரலாற்றுச் சின்னங்கள்

Continue Reading →

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2019! 16.4.2019 அன்று சென்னையில் நடந்த விழா குறித்து சில எண்ணப்பதிவுகள்!

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2019! 16.4.2019 அன்று சென்னையில் நடந்த விழா குறித்து சில எண்ணப்பதிவுகள்!

கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது _ மேடையெங்கும் படைப்பாளிகளே பிரதானமாக வீற்றிருந்தது!

நிகழ்வு: எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு. இன்று எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்த நாள். இன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் தமிழவன், அம்ஷன் குமார், கோபாலகிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன், கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான எஸ்.சண்முகம், விருது பெறும் படைப்பாளிகளான கவிஞர் யூமா வாசுகி, எழுத்தாளரும் – நாடகவியலாளருமான வெளி ரங்கராஜன், என விழா நாயகர்களாக படைப்பாளிகள் மட்டுமே மேடையில் வீற்றிருந்ததும். அமரர் மா.அரங்கநாதன் குறித்துப் பேசியதும், விருதுபெற்றவர்கள் குறித்து உரையாற்றி யதும் இந்த இலக்கியக்கூட்டத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியது என்றால் மிகையாகாது!

விழா நிகழ்வுகளை, சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களை எழுத்தாளர் அகரமுதல்வன் நேர்த்தியாக அறிமுகம் செய்தார்.

மேலும், இந்தப் படைப்பாளிகள் அனைவருமே தமிழின் நவீன இலக்கிய வெளியோடும், சிறுபத்திரிகை வெளிக்கும் மிகவும் பரிச்சயமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இத்தகைய இலக்கிய மேடைகள் பலவற்றில் தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அறவே அறியாத திரைப்படத்துறையினர், அரசியல்வாதிகள், சமூகத்தில் அந்தஸ்து வாய்ந்தவர்கள் என்று வந்து சம்பந்தமேயில்லாமல் எதையாவது பேசுவதும், தங்கள் பேச்சில் தங்களையே முனைப்பாக முன்னிறுத்திக்கொள்வதும், அல்லது தங்கள் தானைத்தலைவர் களிடமிருந்துதான் தமிழே தோன்றியது என்றவிதமாய் எதையாவது சொல்லிவைப்பதும் அடிக்கடி நிகழ்கிறது.

இலக்கியமேடையிலும் தங்கள் பதவி, பணத்தால் தங்களை முன்னிறுத்தி, கௌரவிக்கப்படும் படைப்பாளிகளைப் பின்னுக்குத் தள்ளும் போக்கைப் பார்த்து எத்தனையோ நாட்கள் வருத்தப்பட்டதுண்டு.

முன்பொரு முறை தமிழக – மலேசிய கவிஞர்கள் சந்திப்பு ஒன்றை நான் பொறுப்பேற்று நடத்தினேன். சமகால கவிதைவெளியில் இயங்கிவரும் பல தமிழ்க்கவிஞர்கள் இடம்பெற்ற அந்த நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்துகொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ‘புரியாக்கவிதைதான் எழுதுகிறார்கள் என்று சாட ஆரம்பித்து வைரமுத்துபோல் எழுதவேண்டும் என்று முடித்தார். நான் உள்ளுக்குள் உறுமிக்கொண்டிருப்பதைக் கண்ட விழா ஏற்பாட்டாளர் நிகழ்வில் என்னைப் பேசவிடாமலே நிகழ்ச்சியை முடித்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நான் அந்தச் சதியை முறியடித்து வெற்றிகரமாய் மேடையேறி ‘கவிதை புரியவில்லை’ என்று சொல்வதிலுள்ள அபத்தத்தைப் புட்டுப்புட்டுவைத்துவிட்டுத் திரும்பிப்பார்த்தால் பிரதம விருந்தினரான அந்த ஐ.ஏ.ஏஸ்க்காரரைக் காணவில்லை. அவர் தன் பேச்சை முடித்துவிட்டு எப்போதோ வீட்டுக்குப் போயிருந்தார்!

Continue Reading →