” நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை. என்றாலும்கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படியிருக்கவேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை, என் சமூகத்துக்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியிலிருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் வரவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா? என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப்பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்ன இயக்குநர் மகேந்திரன் நேற்று 02 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.
” முள்ளும் மலரும் ” மகேந்திரன் என அறியப்பட்ட இவரின் இயற்பெயர் ஜோசப் அலெக்ஸாண்டர். தமிழகத்தில் இளையான்குடி இவரது பூர்வீகஊர். மாணவப்பருவத்திலேயே கையெழுத்து சஞ்சிகை நடத்தியிருக்கும் இவரது எழுத்தனுபவம், பின்னாளில் சென்னையில் பத்திரிகை ஊடகத்துறையினுள் இவரை அழைத்துக்கொண்டது.
மதுரை அழகப்பா கல்லுரியில் இவர் படிக்கும் காலத்தில் ( 1958) எம்.ஜி. ஆர். இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைக்குவந்து வெற்றிபெறுகிறது. அந்த வெற்றிவிழாவை கொண்டாட மதுரைக்கும் வரும்போது அலெக்ஸாண்டர் படித்த கல்லூரிக்கும் அழைக்கப்படுகிறார்.
அந்த விழாவில் எதிர்பாரதவிதமாக அலெக்ஸாண்டர் பேசவேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. திரைப்படங்களில் காதலிகளுடன் ஓடிப்பிடித்து பாட்டுக்கு உதடு அசைத்து பாடும் எம். ஜி.ஆர் பற்றி இவர் இவ்வாறு பேசுகின்றார்: ” நம் கல்லூரியில் காதலிக்கிறவர்கள் என்ன பாடு படுகிறார்கள். ஊரே கூடிப்பேசுகிற அளவுக்கு அவர்கள் காதலித்துவிட்டு இன்றைக்கு எவ்வளவு அவமானப்படுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் நல்லாத் தெரியும். ஆனால், இவர் ( எம்.ஜி.ஆரைக்காட்டி) சினிமாவில் டூயட் பாடிக்கொண்டே காதலியோடு ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓடிப்பாடி ஆடிக்காதலிக்கிறார். இவர் காதலிக்கிறதைப்பார்த்து சினிமாவுலே எந்தப் பிரின்சிபாலும் கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை. ஊர்க்காரர்களும் இவர்கள் காதலிப்பதைப் பொருட்படுத்துவதில்லை”
மண்டபம் கைதட்டலினால் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் திகைத்தார். தொடர்ந்து அந்தப்பேச்சைக்கேட்டு ரசித்த எம்.ஜி.ஆர், தனது ஏற்புரையையடுத்து விடைபெறும்போது ஒரு காகிதத்தில் ” நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன்கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர். வாழ்க ” என்று எழுதிக்கொடுக்கிறார். இச்சம்பவம் நடந்த திகதி: 30-11-1958.
இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் அடங்கிய நூல்தான் மகேந்திரன் எழுதியிருக்கும் சினிமாவும் நானும். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. சென்னையில் நடத்திய மித்ர பதிப்பகம் இந்த நூலை 2003 இல் வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 2005 இல் வெளியானது.