லண்டன் 2019-
அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து சிலிர்த்துக் கொண்டிருந்தன.பழுத்துக் கொண்டிருக்கும் தக்காளிகள் காலைச்சூரியனின் இளம் சூட்டில் பளபளத்தன. வேலியில் படர்ந்து பூத்துக் கிடந்த சிறுமல்லிகையின் மணம் மனத்திற்கு இதமளித்தது. வசந்த காலம் முடியப்போகிறது. தோட்டத்தில் போட்டிருந்த மரக்கறிவகைகள் தங்கள் சேவையைமுடித்த திருப்தியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் தொடங்கி விட்டன. ஒரு சில மாதங்களுக்கு முன் விதைத்த சிறு பயிர்கள் முளைத்து வளர்ந்து அதைச் செய்தவளுக்குப் பல விதமான பரிசுகளைக் காய்களென்றும் பழங்களென்றும் கொடுத்துவிட்டு கால மாற்றத்தில் தளர்ந்து,முதிர்ந்து தங்கள் வாழ்க்யை முடித்துக் கொண்டிருக்கின்றன.
‘நானும் அப்படியா? இந்த செடி கொடிகள் தங்களை இந்தப் பூமியில் விதைக்கச் சொல்லி யாரையும் கேட்கவில்லை, எனது திருப்திக்கு எனது தேவைக்கு விதைத்தேன், பாதுகாத்தேன், இன்று அந்த விதையின் பல பரிமாணங்களை ஒரு பாதுகாவலன் மாதிரிப் பார்த்தக் கொண்டிருக்கிறேன்’ வாடித் தளர்ந்து கொண்டிருக்கும் திராட்சையிலைகளைத் தடவியபடி யோசித்துக் கொண்ட போது அவள் மனம் சட்டென்று அவளைப் பற்றிக் கேள்வி கேட்டது.
‘வாழ்க்கை என்ற வெற்றுக் கானல் நீரோட்;டத்தில் நானும் இப்படித்தானா? என்னைப் போன்ற பல பெண்களும் இப்படித்தானா, சுயமாக எதுவும் செய்ய முடியாத வெற்றுவிதைத் தொடர்களா,கானல் நீரோட்டத்தில் வெறும் பிம்பங்களா? ஞானேஸ்வரி தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்து அவள் கணவரின் குரல் சத்தமாக அவளையழைத்தது.
‘ஞானேஸ்வரி. யாரோ கதவைத் தட்டுகினம்’. அவர் மிகவும் சத்தமாக அவளையழைக்கிறார்.
அவளின் கணவருக்குப் பல வருத்தங்கள். பெரிதாக நடந்து திரிய முடியாது. அவள் ஒரு இயந்திரம்.அவர் அழைத்த குரலுக்கு அசைந்து திரியும் ஒரு நடமாடும் மனித இயந்திரம்.
அவள் தோட்டத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தாள்.
ஞானேஸ்வரி தனக்கு முன்னால் நிமிர்ந்து நின்றிருந்த ஆங்கிலேயப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தாள். அன்று திங்கட் கிழமை.வெளியில் பாடசாலை போகும் குழந்தைகள், வேலைக்குப்போகும் மாந்தர்கள் என்று தெருவில் பல சந்தடிகள். வந்து நின்ற ஆங்கிலேயப் பெண்மணி,’ ஹலோ எனது பெயர் மேரி டானியல், உள்ளூராட்சியின் முதியோர் நலவிடயங்களைச் சார்ந்த விசாரணைப் பிரிவிலிருந்து வருகிறேன். நீங்கள் திருமதி அருளம்பலம் ஞானேஸ்வரிதானே?’.
அவள் ஒரு அழகிய பெண். குரலும் மிகவும் இனிமையாகவும் கனிவாகவுமிருந்தது. முதியோர்களின் பராமரிப்புக்கென்றே பிறந்த அன்பான முகத்தில் ஒரு அழகிய சிறு புன்முறுவல் தவழ்ந்துகொண்டிருந்தது.