– முகநூலில் வெளியாகும் கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இப்பகுதியில் பிரசுரமாகும். இவ்விதமான பதிவுகள் முகநூலில் கலை, இலக்கிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவன. – பதிவுகள்.காம் –
அண்மையில் தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யை பலகாலம் கழித்து மீண்டும் வாசித்தேன். சாவி ஆசிரியராய் இருந்த தினமணிக் கதிரில் 1968ல் தொடராக வந்த புதினம் ‘செம்பருத்தி’.
தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒரு அசைக்கமுடியாத இடம் தி.ஜானகிராமனுடையது. தஞ்சை மண்ணின் மணம்கமழும் எழுத்து. காட்சி சித்தரிப்புகளிலும், உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தாக்கும் நுண்மையிலும் அவருக்கு இணை அவரே தான். அவருடைய பத்து நாவல்களில் மிகவும் அதிகம் விமரிசிக்கப்பட்டவை அம்மா வந்தாள், மோகமுள், மற்றும் மரப்பசு ஆகிய மூன்றும் எனில், அதிகம் கவனம் பெறாத நாவல் அவருடைய ‘செம்பருத்தி’ என சொல்லலாம்.
நிகழ்வுகளைக் கட்டமைக்கும் நேர்த்தி, சரளமான நடை, கதைசொல்லலை உரையாடல்களாலேயே நகர்த்திக் கொண்டுபோகும் லாவகம், சொல்லாமல் போனவற்றை ஓரிரு சொற்களில் பூடகமாய் இட்டுநிரப்பும் ஜாலம்….இவை தி ஜாவின் தனிமுத்திரை.
கண்களைக் கட்டிக்கொண்டு கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி நமக்குள் எழுப்பும் பரபரப்பையும் பரிவையும், அவருடைய முக்கிய வார்ப்புகள் எழுப்புவதை அந்தப் படைப்புகலைஞனின் வெற்றி எனத்தான் கொள்ள வேண்டும். ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம் காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று சித்தரித்தவர்கள் இல்லை. அந்த விவரிப்பு, ஒரு நூல் பிசகினாலும் ஆபாசமாய் அனர்த்தப் படக்கூடிய கட்டங்களை, அந்த எல்லையின் இழையிலேயே தடுமாற்றமின்றி கொண்டுசெல்லும் நுட்பம்……எவ்வளவு பெரிய படைப்பாளி தி ஜா?!
ஒரு சாதாரண கதையோட்டத்தை தன் புனைவின் மந்திரத்தூரிகையால் பெரும்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார் தி ஜா.
தி ஜா வின் படைப்புகளில், செம்பருத்தியில்தான் பெண்களின் சித்தரிப்பு ஏதோ ஒருவகையில் துர்க்குணமே சற்று தூக்கலாக காட்டியிருப்பதாய்ப் படுகிறது.
கதையின் ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் தி ஜாவின் கதைகூறல் மிக நளினமானது. நாவலை படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே உணர்ந்துகொள்ள, அவர் வைக்கும் வசீகரமான ‘மின்னல்வேக வினாவிடை பரிட்சை’யோ இது என்று தோன்றுகிறது.
தி ஜா வைப் படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும், வாசிப்பின் போது, இரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.