எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :
” வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது – வெறும் வசனம்தான் ” ( கு.ப. ராஜகோபாலன் – 1939 இல் )
மேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:
இது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதையின் அம்சங்களைப்போல் வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார். கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து. இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து. ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை. இன்று கவிதை மரபினை மீறி முற்றாக இன்னொரு தளத்தில் பயணிக்கின்றது. கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு . அதனடிப்படையில் மட்டுமே மரபுக்கவிதையோ அல்லது ஏனைய கவிதை வடிவங்களோ நோக்கப்பட வேண்டுமென்று கருதுகின்றேன். அவ்விதம் கவிதையொன்றினை ஆராய்கையில் அதில் மரபுக்கவிதையின் கூறுகள் உள்ளனவா , இல்லையா என்று ஆராயலாமே தவிர அவை இருந்தால் மட்டுமே அது கவிதையா அல்லது இல்லையா என்று தீர்மானிக்க முடியாது. அவ்விதம் ஆராய்கையில் அதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி, பொருள் போன்ற ஏனைய பல விடயங்களும் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.
எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் ‘இன்ஸான்’ பத்திரிகை பற்றிப்பின்வருமாறு பதிவு செய்திருந்தார்:
“1965-1970 காலப் பகுதியில் ‘ இன்ஸான்'( மனிதன்) என்ற வாராந்தரி பத்திரிகை ஏ.ஏ.லத்தீஃபை ஆசிரியராக கொண்டு வெளியாகியது. முஸ்லிம் வாழ்வியலை,சமூகப் பார்வையுடன் இலக்கியமாக்கும் வாய்ப்பை வழங்கி வழிகாட்டியது. இதனூடாக வெளிப்பட்ட சிறுகதையாளர்களில குறிப்பிடத்தக்க ஒருவர் எம்.பி.எம. நிஸ்வான். ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் ஒரு பத்தோ இருபதோ இன்ஸான் கதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சி கைகூடவில்லை.இன்ஸானோடு சம்பந்தப்பட்ட ஒருசிலரே இன்று எம்மத்தியில் உள்ளனர்.அவர்கள் சந்திக்கும்போது பேசிக் கலைவதைத்தவிர வேறொன்றும் ஆகவில்லை. முஸ்லிம்களின் இலக்கியம் என்பது அனாதை இலக்கியமே என்பதற்கு இதைத்தவிர வேறென்ன அத்தாட்சி வேண்டும்? பாணந்துறை எம்.பி.எம்.நிஸ்வானின் இரு நூல்களின் வெளியீடு கடந்த 07.04.2018ல் உம்முல் மலீஹா மண்டபத்தில் நடைபெற்றபோது கருத்துரை வழங்குகையில் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறினேன்.”
எழுத்தாளர் அந்தனி ஜீவா ‘தினகரன்’ (இலங்கை) பத்திரிகையில் எழுத்தாளர்ர் அ.ந.கந்தசாமி பற்றி எழுதிய ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:
” அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் ‘யூத அராபிய உறவுகள்’ என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை ‘இன்ஸான்’ வார இதழில் தொடர்ந்து எழுதினார். “
கலாபூஷணம் மாத்தளை பெ.வடிவேலன் செப்டம்பர் 30, 2012 தினகரன் (இலங்கை) பத்திரிகையில் எழுதிய எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிய ‘நக்கிள்ஸ் மலைகளின் மடிதனிலே…’ கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறுவார்:
“1965-1968 காலப்பகுதியில் இன்ஸான்” எழுப்பிய அலை ஓசையை மறக்க முடியாது. முஸ்லிம்களின் வரலாறு கலை இலக்கியம் சமூகவியல் போன்றவற்றில் இன்ஸான் ஆற்றிய பணி கால ஓட்டத்தில் கரைந்துவிட முடியாத ஒன்று “இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக்கான சோனகத் தமிழ் அழகை வீச்சாகக்கொண்டு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய பத்திரிகை அது”
ஏ. ஏ. லத்தீப் அவர்களே ‘இன்ஸான்’ பத்திரிகையையும் நடாத்தியதை மேற்படி கட்டுரையிலுள்ள “நானும் இலக்கிய ஆர்வலர் ஜனாப் நkர் ரியாலும் இன்ஸான் லத்தீஃபை பற்றி பலமணிநேரம் கலந்துரையாடினோம்” என்னும் கூற்று வெளிப்படுத்துக்கின்றது. மேற்படி கட்டுரை எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் பற்றிப் பின்வருமாறு கூறுவது அவரது கலை, இலக்கியப்பங்களிப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது: