ஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு இருக்கிறது. கவிஞனின் கற்பனையில் உதிக்கும் கவிதையாயினும் சரி, உண்மைச் சம்பவமாயினும் சரி இரண்டுமே வாசகனின் மனதில் நிறைந்துவிடக் கூடியதாக இருக்கின்றது.
இலக்கியத் துறையில் காலடி எடுத்துவைப்பவர்கள் எல்லோரும் பல்வேறு துறைகளிலும் தனித்துவமாக மிளர்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு இலக்கியவாதி கவிஞனாக, கணக்காளனாக, வைத்தியனாக, வியாபாரியாக, ஆசிரியனாக, சட்டத்தரணியாக என்றெல்லம் பல்தரப்பட்ட துறைகளிலிருந்தும் இலக்கியம் படைக்கின்றான்.
அந்தவகையில் வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா அவர்களும் தனது தம்பியார் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள் என்ற கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவரது கவிதை வீச்சு, வாள் வீச்சைப் போன்று வீரியமானது. எதையும் துணிந்து சொல்லக்கூடியதொரு துணிச்சல் மிக்க கவிஞர். அதேநேரம் கனிந்த இதயமும் உதவி செய்யக் கூடிய குழந்தை மனமும் படைத்த ஒரு வைத்தியராகவும் இவர் காணப்படுகின்றார்.
”தம்பியார்” என்ற இந்தக் கவிதைத் தொகுதி இனக் கலவரங்களில் உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் சமர்ப்பணம் செய்ப்பட்டுள்ளது.
இதிலுள்ள கவிதைகள் அப்பாவி மக்களை கூறுபோட்டுவிற்று அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடியாக இருப்பதோடு சிந்தனைக்குள் சொருகி சிந்திக்க வைப்பதாகவும் காணப்படுகின்றன. சிறுபான்மைமக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களின்;போது இவரது பேனையானது ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. அவர்களின் நலனுக்காக பாடுபட்டிருக்கின்றது.
இதுபற்றி நூலாசிரியர் தனது உரையில் ”சிறுபான்மை என்றால் அடிமைகள் போன்று நடத்தப்பட வேண்டியவர்கள் அல்லர். இந்தநாட்டில் சிறுபான்மை இன மக்களின் இருப்பைப் படுகுழியில் போட்டு மூடிவிட்டு பெரும்பான்மையினர் என்று பெரிய அளவில் பட்டப் பகலில் அட்டூழியம் புரிபவர்களுக்கு எதிராக எனது கவிதைகள் பெரிய ஊசிபோடும்” என்று தனது ஆழ்மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
பிக்குகள் ஓதும் குர்ஆன் (பக்கம் 01) என்றமுதல் கவிதையின் தலைப்பே ஒரு வேகத்தோடும் விவேகத்தோடும் இடப்பட்டடிருப்பது நன்கு புலப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித வேத நூலான அல்குர்ஆனை விமர்சித்து அதற்கு எதிராகப் பேசியமையை எதிர்த்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.
Continue Reading →