அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் யாழ் நகரில் பல திரையரங்குகள் பல இருந்தாலும் (மனோஹரா, ராணி, ராஜா, றீகல்,, ஹரன், சாந்தி, ஶ்ரீதர், லிடோ (பழைய வின்சர்), வின்சர் , வெலிங்டன் & றியோ ), இவற்றில் என்னை அதிகம் பாதித்தவை பற்றிய பதிவுகளிவை. இவற்றையும், இவற்றுக்கான எதிர்வினைகளையும் பதிவு செய்வதன் அவசியம் கருதி அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தருகின்றேன்.
1. யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று – ராணி
முகநூலில் Shan Naranderan ராணி (யாழ்ப்பாணம்) திரையரங்கின் புகைப்படமொன்றினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு மீண்டும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இன்று ராணி திரையரங்கு இருந்த இடத்தில் ‘சீமாட்டி’ வர்த்தக நிலையமுள்ளது. ஆனால் அன்று எம் பதின்ம வயதுகளில் அவ்வாழ்வுக்குரிய பொழுதுபோக்குகளில் முக்கிய இடத்தை வகித்த திரையரங்குகளிலொன்றாக விளங்கிய திரையரங்கு ராணி. முதன் முதலில் ராணி திரையரங்கைப் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் இ.போ.சபையின் பஸ்ஸில் வந்து , யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது கண் முன்னால் விரிந்தது ராணி திரையரங்கின் முன் அமைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண் எம்ஜிஆரின் பிரமாண்டமான , ஓவியர் மணியத்தின் ‘கட் அவுட்’ இடுப்பில் கைகளை வைத்து, மணிமுடியுனிருந்த அந்த எம்ஜிஆரின் கட்அவுட் இன்னும் கண் முன்னால் விரிகின்றது. இன்னுமொரு முறை அவ்விதம் வந்து யாழ் பஸ் நிலையத்தில் இறங்கியபொழுது ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படத்திலிடம் பெறும் ‘ஒரு பக்கம் பார்க்குறா’ பாடலுக்கான காட்சியை வெளிப்படுத்தும் இரு எம்ஜிஆர்களின் உயர்ந்த உருவங்களை உள்ளடக்கிய இரு ‘கட் அவுட்’டுகள். இவ்விதமாக ராணி திரையரங்குடன் ஆரம்பமாகியதென் உறவு.
யாழ் ராணியில் பார்த்த , நினைவில் நிற்கும் திரைப்படங்கள்: ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்காரவேலன்’, ‘ராஜா, பட்டிக்காடா பட்டணமா’, ‘சவாலே சமாளி’, ‘பணமா பாசமா’, ‘அன்புச் சகோதரர்கள்’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘என் தம்பி’, ‘இருவர் உள்ளம்’ (மீள் வெளியீடு), வி.பி.கணேசனின் ‘நான் உங்கள் தோழன்’ , ‘புதிய காற்று’, ‘நாளை நமதே’, ‘வாடைக்காற்று’ , ‘பட்டணத்தில் பூதம்’& ‘நீதி’
இன்னுமொரு விடயத்துக்காகவும் யாழ் ராணி நினைவிலுள்ளது. 1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிஸார் சுட்டுக் கலவரமாகிய சூழலில் தப்பி ஓடிக்கொண்டிருந்த மக்களைத் தன் திரையரங்கில் தங்க வைத்த மனிதாபிமானச் செயல் அது. அதன் மூலமும் ‘ராணி’ திரையரங்கு நெஞ்சில் பதிந்து விட்டது. இன்று திரையரங்கே இல்லாத நிலையில் இது போன்ற புகைப்படங்கள் அரியவை. சேகரித்துச் சேமிக்கப்பட வேண்டியவை. இவை ஒரு காலகட்ட வரலாற்றுச் சின்னங்கள்