காலனிய ஆட்சி காலத்தில் இந்து மதத்தின் பண்பாட்டுச் சூழலையும் தகவமைப்புக்களையும் உடைத்தெறிந்து விமர்சனத்துக்குட்படுத்திய நூல் இந்துமத ஆசார ஆபாச தரிசினி. 1882 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நூல் இந்து மதத்தினைக் கடுமையான முறையில் எதிர்த்தும் அ.வெங்கடாசலனார் பொது வெளியில் அடையாளம் தெரியாத நபராகவே இருந்திருக்கிறார்.
இவரது சிந்தனைப்போக்கு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மலர்ந்த நவீன அறிவு மரபினையொட்டியதாகவும் சமூகத்தின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அறிவு தெளிவினைப் பெற வேண்டிய நோக்கத்தினைக் கொண்டதாகவும் இருக்கிறது. மத்திய கால ஐரோப்பாவில் சமூகத்தின் அனைத்து நடைமுறைகளுக்கான விளக்கங்களும் மதத்தில் இருந்து பெறப்பட்டன. ஆனால் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தத்துவம், மதம், சமூகம் என எல்லாவற்றிற்குமான விளக்கங்கள் விஞ்ஞானங்களில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற தூண்டுகோளை விதைத்தவர் தெகார்த்.
‘பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றிய முக்கியத் தத்துவவாதிகளை அனுபவ வாதிகள், அறிவுவாதிகள் என வகைப்படுத்தலாம். அனுபவவாதிகள் புலனுணர்வுக்கும் புலனறிவுக்கும் முதன்மை தந்தார்கள். அறிவுவாதிகளோ மனித மனத்தில் உள்ளார்ததும், புறஉலகைப் புரிந்துகொண்டு விளக்கவல்லதும் எனத் தாங்கள் கருதிய அறிவுக்கு முதன்மை வழங்கினர். (எஸ்.வி.ராஜதுரை, இருத்தலியமும் மார்க்ஸியமும், விடியல், ப. 53) இரண்டு அணுமுறையாளர்களும் சமுதாயம், மனிதன், இயற்கை ஆகியன பற்றி அன்றைய கத்தோலிக்கத் திருச்சபை கூறிவந்த பொதுவான விடயங்களை விமர்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவரை உலகத்தில் இருந்துவந்த கருத்தியல்களுக்கான மூல ஆதாரங்கள் மதத்தில் இருந்துதான் பெறப்பட்டிருக்கின்றன. இத்தகைய அதிகாரத்துவத்தைப் பெயர்த்துப்போட்ட நிகழ்வுகள் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, நியூட்டனில் இருந்து காண்ட் அளவிலான தத்துவ விளக்கங்களாக வளர்ச்சியடைந்தது.
இதேபோன்றதொரு உறுதியான சமூக ஊட்டாட்டங்கள் இந்தியச் சமூகத்தில் நடைபெறவில்லையென்றாலும் காலம் கடந்துவிட்ட காலனியக்கால கல்வி வாய்ப்புகளிலும் காலனியத்தின் நிர்வாகம் மற்றும் தொழில் முறைகளினால் இந்தியாவில் சீர்த்திருத்த அமைப்புகளாக உருப்பெற்றன. காலனிய காலத்தில் உண்டான சமூகச் சீர்த்திருத்த அமைப்புகள் பெரும்பாலும் மதத்தைப் புதிய நெறிமுறைகளில் வளர்ப்பதாகத்தான் இருந்தனவேயன்றி விஞ்ஞானப் பார்வையைக் கொண்டதாக இல்லை. இப்படியிருந்த ஒரு சமூகத்தில்தான் அ.வெங்கடாசலனார் இந்து மதத்தின் சடங்குகள், மத நம்பிக்கைகள், ஒழுக்க விதிகளைக் கட்டவிழ்த்து தகர்க்கிறார்.
காலனியத்திற்கு முன்பிருந்த ஆட்சி முறைகள் இத்தகைய சிந்தனை முறைக்கு வழிவகுக்கவில்லை. காரணம் தமிழக நிலங்கள் பாளையங்களாகவும் ஜமீன்களாகவும் பல படித்தான போர்களையும் வரி அழுத்தங்களையும் கொண்டிருந்த சமூகப் பின்னணியில் இனம் சார்ந்த ஒற்றுமை எண்ணங்களைக் காலனிய ஆட்சியால்தான் விதைக்க முடிந்தது.