மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் ஓரிடத்தில் இவ்விதம் வருகின்றது: “அ.ந.கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோஸலிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேட வேண்டுமென்றால் மார்க்ஸே பால்சாக்கைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார்.”
இக்கூற்றினை சிறிது ஆராய்வோம். அ.ந.க சோலாவைப்பற்றி எழுதுவதிலென்ன தவறிருக்க முடியும். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எமிலி சோலாவின் நாவலான ‘நானா’வைத் தமிழுக்கு மொழிபெயர்த்து சுதந்திரன் பத்திரிகையில் வெளியிட்டவர் அ.ந.க. சோலாவின் பாதிப்பு அ.ந.க.வுக்கு நிறையவேயுண்டு. எமிலி சோலாவைப்பற்றி அவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அதில் சுதந்திரனில் ‘நானா’ தொடராக வெளியான சமயம் எழுதிய ‘எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி நானா மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா’ என்னும் கட்டுரையும் முக்கியமானது.
எமிலி ஸோலாவின் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்: “ஸோலா இலக்கியத்திலே மோகனமான கனவுகளைத் தோற்றுவிக்கும் போக்கில் நம்பிக்கை கொண்டவரல்ல. சாக்கடை உலகைச் சாக்கடை நாற்றத்தை நாம் உணரத்தக்கவகையில் இயற்கைத்தன்மையுடனே சமைப்பதில்தான் அவரது சிறந்த கலை வெற்றி பெறுகிறதென்று கூறலாம். ‘இயற்கை வாதம்’ (Naturalism) என்று அவரும் அவரது கோஷ்ட்டியினரும் தமது இலக்கியப் பாணிக்கு நாமகரணம் செய்து கொண்டனர்.”
மேலும் “பிளாபரியின் இலக்கியப் போக்குக்கும் ஸோலாவின் இலக்கியப் போக்குக்கும் வித்தியாசம். இருந்தபோதிலும் பிளாபரி பிளாபரி ஸோலாவின் அகண்டாகாரமான இலக்கிய வளத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்குப் பிடிக்காத அம்சம் ஸோலாவின் எல்லை மீறிய – சில சமயங்களில் அருவருப்பூட்டும் யதார்த்தவாதமேயாகும். பிளாபரி ஸோலாவைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.” என்றும் கூறுவார்.
இவற்றிலிருந்து இயற்கைவாதம் என்றால் தீவிர யதார்த்தவாதம் என்று முடிவு செய்யலாம். இயற்கைவாதம் , யதார்த்தவாதம் இரண்டுமே மானுட வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்திரிப்பவை. இரண்டுமே கற்பனாவாதப்படைப்புகளுக்கு எதிராகத் தோன்றிய இலக்கிய வடிவங்கள். இவற்றில் இயற்கைவாதம் இயற்கை, அதன் விதிகள், பரம்பரை, நிலவும் இயற்கைச் சூழல் ஆகியவை மானுட வாழ்வை நிர்ணயிக்கும் கூறுகள் என்பதை அக்கோட்பாட்டின் அடிப்படைகளாகக் கொள்பவை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அதன் சிக்கல்களை , கோரங்களை அப்படியே எடுத்துரைப்பவை. உண்மையில் இயற்கைவாதம் யதார்த்தவாதத்தின் தீவிர வடிவமே.