இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் சென்னையிலிருந்து ஒரு திரைப்பட நடிகரும் அவரது காதலியான நடிகையும் கொழும்புக்கு வந்து கலதாரி மெரிடீன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்களை அழைத்தவர் செட்டியார் தெருவில் ஒரு பிரபல நகைக்கடை முதலாளி. அவர் மற்றும் ஒரு கிளையை திறக்கும்போது குறிபிட்ட நடிகரையும் அவரது காதலியையும் அந்தத் திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினர்களாக அழைத்து, எங்கள் பத்திரிகையில் அரைப்பக்கம் விளம்பரமும் கொடுத்திருந்தார். விளம்பரத்திற்குரிய கட்டணமும் செலுத்திய அந்த வர்த்தகப்பிரமுகர், குறிப்பிட்ட நடிகர் – நடிகையை யாராவது ஒரு நிருபர் சந்தித்து பேட்டிகண்டு பத்திரிகையில் எழுதி, தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் மேலும் பரவலான தகவல் தரவேண்டும் என்று பிரதம ஆசிரியரிடம் வினயமாக கேட்டுக்கொண்டார். அந்தவேலைக்கு பிரதம ஆசிரியர் என்னை அனுப்பியபோது வேண்டா வெறுப்பாகச்சென்றேன். ” ஒரு சினிமா நடிகரிடம் சென்று எதனைக்கேட்பது? அரசியல்வாதி – இலக்கியவாதியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அந்த சினிமா நடிகரிடம் என்ன கேட்கமுடியும்? அடுத்து எந்தப்படத்தில் நடிக்கிறீர்கள்? உடன் வந்திருக்கும் காதலியைத்தான் மணம் முடிக்கப்போகிறீர்களா? இலங்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ” இதனைத்தானே கேட்கமுடியும். இந்த பொறுப்பான(?) கேள்விகளுக்கும் அர்த்தமுள்ள இந்தக் கடமைக்கும் (?) நானா கிடைத்தேன். வேறு எவரும் இல்லையா? என்று எனது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினேன். என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் நன்கு தெரிந்துவைத்திருந்த ஆசிரியர், ” ஐஸே, நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும். பத்திரிகையாளருக்கு எல்லோரும் ஒன்றுதான். அது நாட்டின் அதிபராக இருந்தால் என்ன, சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களாக இருந்தால் என்ன எல்லோரும் ஒன்றுதான். பத்திரிகைக்கு செய்தி முக்கியம். அத்துடன் வரும் விளம்பரங்களும் அவசியம்” என்றார்.
அலுவலக படப்பிடிப்பாளரையும் அழைத்துக்கொண்டு அந்த நடிகர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். வரவேற்பு உபசரணைப்பெண்ணிடம் தகவல் கொடுத்தேன். அங்கிருந்து நடிகர் தங்கியிருந்த அறைக்கு இன்டர்கொம்மில் தகவல் சொல்லப்பட்டதும், நடிகர் என்னுடன் பேசினார். பத்திரிகையின் பெயரும் சொல்லி வந்தவிடயத்தையும் சொன்னேன். பதினைந்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். அவ்வாறே நானும் படப்பிடிப்பாளரும் காத்திருந்து சென்றோம். அவரும் அந்த நடிகையும் தங்களை அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்தார்கள்.
தமிழ்ப்பத்திரிகை என்றவுடன் நடிகர் தமிழ் இனம், தமிழ் மொழி என்று ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். உடனிருந்த நடிகை தமிழ் தெரியாதவர். அவர் தெலுங்கில் நடிகரிடம் ஏதோ சொன்னார். எமக்குத் தெலுங்கு தெரியாது. அலுவலகத்தில் ஆசிரியரிடம் குறிப்பிட்ட கேள்விகளையே அந்த நடிகரிடமும் கேட்டேன். ஆசிரியர் சொன்னவாறு நாய்வேடம் தரித்தேன்.
” எம்.ஜி. ஆர் – ஜானகி – என்.எஸ். கிருஷ்ணன் – மதுரம் – எஸ். எஸ். ராஜேந்திரன் – விஜயகுமாரி – ஏ.வி. எம். ராஜன் – புஷ்பலதா – ஜெமினி கணேசன் – சாவித்திரி – ஏ.எல். ராகவன் – எம். என். ராஜம் ஆகியோரைப்போன்று நீங்களும் மணம்முடித்து தொடர்ந்தும் திரையுலகில் நடித்துக்கொண்டிருப்பீர்களா? “