அண்மையில் இலங்கையில் ‘இஸ்லாமிய அரசின்’ (ஐஎஸ் அல்லது இஸ்) அனுசரணையுடன், வஹாபிஸத்தை நம்பும் தீவிரவாத முஸ்லிம் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு கிறிஸ்தவ ஆலயங்களில், நட்சத்திர ஹொட்டல்களில் நடாத்திய குண்டுத்தாக்குதல்கள் 9-11 தாக்குதலையொத்தது. மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட தாக்குதல்கள். வசதியான, படித்த இளைஞர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள். இந்த இஸ்லாமிய அமைப்பினை நடாத்தி வந்தவர் ஜஹ்ரான் ஹாசிம்.
ஒரு நாட்டில் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கிளர்ந்தெழுவார்கள். தற்கொலைத்தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறைகள் , இனக்கலவரங்கள் நடைபெற்றிருந்தாலும் அவை இலங்கைத்தமிழர்கள் கடந்த காலங்களில் அனுபவித்தவை போன்றவையல்ல. இருந்தாலும் எதற்காக இவ்வளவு மூர்க்கமாகக் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், வெளிநாட்டவர்கள் அதிகமாகத் தங்கியிருந்த நட்சத்திர ஹொட்டல்களிலும் தம் உயிரைத் துச்சமாக மதித்து இம்முஸ்லிம் அமைப்பினர் தற்கொலைத்தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
உண்மையில் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் வஹாபிசத்தை நம்புபவர்கள் அல்லர். அவர்கள் பிற இனங்களுடன் இணைந்து வாழ்பவர்கள். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருபவர்கள். இலங்கையின் முஸ்லிம் மக்களைப்பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள் எல்லாம் கடந்த காலங்களில் தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு பற்றியும், அதன் போதனைகளின் அபாயம் பற்றியெல்லாம் காவல் துறையினருக்கு அறியத்தந்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றையெல்லாம் காவல் துறையினர் உரிய முறையில் கவனத்துக்கெடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அண்மைய தாக்குதல்கள் பற்றிய அபாய முன்னறிவிப்புகளை, தகவல்களைக்கூட அவர்கள் அவ்விதம் கவனத்தில் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் கூட அறிவித்திருக்கவில்லை.
இவ்விதமான சூழலில் எதற்காக இவ்விதம் தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு தாக்குதல்களை நடாத்தியுள்ளது? இதற்கு முக்கிய காரணம் அவர்கள் இஸ்லாமிய அரசு அமைப்பின் கொள்கைகளை உள்வாங்கி அதனை இலங்கையில் செயற்படுத்தியதுதான். ‘இஸ்லாமிய அரசு’ அவ்விதமானதொரு அரசினை ஈராக்கிலிருந்து சிரியா வரை நடாத்தியிருந்தது. அதனை அது இழந்து விட்டாலும் அவ்வமைப்பு செயலிழந்து போகவில்லை. அவ்வமைப்பில் மேற்கு நாடுகளிலிருந்தெல்லாம் பலர் இணைந்து கொண்டார்கள். அவ்விதம் இணைந்து கொண்டவர்களெல்லாரும் தாம் வாழ்ந்த நாடுகளில் தமக்கேற்பட்ட அடக்குமுறைகளால் இணைந்துகொண்டவர்கள் அல்லர். அவர்கள் உலகளாவியரீதியில் இஸ்லாமிய அரசொன்றைனை ஸ்தாப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசின் போதனைகளை, தத்துவங்களை ஏற்றுக்கொண்டு இணைந்தவர்கள்.