முன்னுரை
மனிதன் தொடக்க காலத்தில் இயற்கையைக்கண்டு அச்சம் கொள்ள நேரிட்டான். அதனால் இயற்கையைக் கடவுளாக நினைத்து வழிபடத் தொடங்கினான். இனக்குழு வாழ்க்கையிலிருந்தக் கூட்டத்தினர் தெய்வங்களைக் கண்டும், பார்த்தும், உருவகித்துக்கொண்டும் ஏற்படுத்திக்கொண்டும் அதனை வணங்கி வாழ்ந்து வந்தனர். இத்தெய்வங்கள் மலை, காடு, மரங்களான ஆலமரம், வாகைமரம், கடம்பமரம், வேப்பமரம், மரம், மராமரம், பனைமரம், வேங்கைமரம், முரசில்மரம், இல்லில், கந்தில், பொற்றாமரைக்குளம், கினை (பறை), குவளைப்பூ, தாமரைப்பூ, நடுகல், மரத்தின்பொந்து, பாறை, அருவிநீர் எனப் பல்வேறு இடங்களில் குடிகொண்டிருந்தன. இதனை நற்றிணை “அணங்கொடு நின்றது மலை” (நற்.குறி.165:3). என்கிறது. மக்கள் மத்தியலும் பல்வேறு விதமான தெய்வம் தொடர்பான நம்பிக்கைகளும், பறவைகள், விலங்குகள் வாயிலாக வெளிப்படும் நம்பிக்கையும், தொழில் தொடர்பான நம்பிக்கையும் வழக்கத்தில் நிலவி வந்தன. இக்குறிகளை எல்லாம் சமுக மரபு, பண்பாட்டு மரபு, குலக்குறி மரபு என்றழைத்தனா். அஃது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குலக்குறியியல் பொது விளக்கம்
குலக்குறி மனித வாழ்வோடு காலங்காலமாகப் பரிணமதித்து வரக்கூடிய ஒரு அடையாளம் சார்ந்த படிமாகும். இதில் விலங்கையோ பறவையோ ஒரு பொருளையோ தங்களது குலக்குழு முழுமைக்கும் வழிகாட்டியாக வணக்கத்திற்குரியதாக மூதாதையர்களாகக் காண்பதே ஆகும். இதில் ஓா் இனக்குழு மனிதன் தனக்கு இணையாக தன் கூட்டத்து மக்களுள் ஒருவராகக் கருதி ஒரு விலங்கையோ பறவையையோ தாவர வகையையோ அணுகி நடந்து கொள்வானேயானால் அது நிச்சயம் குலக்குறிப் பண்பாட்டிற்கே உரிய இயல்புகளில் ஒன்றாகும்.
தோழமை உணா்வுடன் உறவு பாராட்டப்படுகிற ஓா் இனக்குழுவினைச் சுட்டும் உயிருள்ள அல்லது உயிரற்றப் பொருளே அவ்வினக்குழுவின் குலக்குறி அடையாளம் ஆகும் என்று ஆ.தனஞ்செயன் முன்வைக்கிறார். எமிலி தா்கைம் அவா்கள் குலக்குறி வழிபாட்டினை பற்றிக் தொடக்கில் பயன்படுத்தினார். பின்னா் ஜான் பொ்கூசன் மெக்லெனன் கூறும்போது, இன்றுள்ள சமயமுறைகளில் இன்றியமையாதெனக் கருதப்படும் பண்பாட்டு மரபுகளான வழிபாட்டுப்பொருள்கள், அதன்மீதான நம்பிக்கை, நம்பிக்கையில் உறுதிகொண்டோர், சடங்கு, சடங்கு செய்தல் போன்றவற்றைக் கொண்ட ஆரம்பகாலச் சமயமாகக் குலக்குறியியம் தோன்றியது என்கிறார். இத்தன்மை கொண்டு பார்க்கும்போது குலக்குறி, வழிபாடு, நம்பிக்கை என்ற இரண்டின் அடிப்படையில் எழுந்ததே ஆகும்.
குலக்குறி மரபில் – தெய்வமும் நம்பிக்கையும்
முல்லை நிலத்தின் தெய்வமாக திருமால் கருதப்படுகிறது. தொல்காப்பியம் இதனை, “மாயோன் மேய காடுறை உலகம்”(தொல்.பொரு.அகத்.5நூற்) என்று திருமாலை நிலத்தோடு தொடர்பு படுத்தி வெளிக்காட்டுகிறது. அகநானூற்றில் “மரஞ்செல மதித்த மால் போல” (அகம்.59-4)என்று கூறுகிறது. தொல்காப்பியம் கூறும் ‘மாயோன்’ தென்னாட்டில் முல்லைநிலத் தெய்வமாகவும், கண்ணனாகவும் காட்சிபடுத்தப்படுகின்றான். ஆனால் சங்க இலக்கியத்தில் மால், மாயோன் என்ற பெயர்களே வழக்கிலிருந்தன. மால் என்பதற்குப் பெரியோன் என்றும், மாயோன் என்பதற்குக் கரியவன் என்றும் கருத்து உள்ளன.