“சோஷலிஸம் அமெரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானது; அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளுடனும் ஆதிக்கங்களுடன் பிறந்த நாடல்ல. பூரண சுதந்திரத்துடனும் விடுதலையுடனும் பிறந்த நாடு; ஆகவே அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோஷலிஸ நாடாகப் போவதில்லை.” இது அண்மையில் இடம்பெற்ற ‘State of the Union’ உரையில் அமெரிக்க அதிபர் டொனல்டு ற்ரம்ப் விடுத்த அறைகூவல். 2020இல் மீண்டும் அதிபராகும் எண்ணத்தின் எதிரொலி. ஜனநாயகக் கட்சியினரைச் சோஷலிஸவாதிகள் எனக் கூறி, அவர்களது முகங்களில் சேறுபூசும் முயற்சி. சோஷலிஸம் என்னும் சொல்லைச் சொல்லிச் சொல்லியே, அமெரிக்க மக்களை அச்சமூட்டித் தம்வயப்படுத்தும் தந்திரம்.
பனிப்போர்க் காலத்தில் சோவியத் யூனியனையும் நேசநாடுகளையும் உதாரணங்காட்டி, அமெரிக்க அரசியல்வாதிகளால் மக்கள் மனங்களில் சோஷலிஸ வெறுப்பை விதைக்க முடிந்தது. சோவியத் யூனியன் சிதறுண்டு, இப்போது மூன்று தசாப்தங்களாகிவிட்டன. ரஷ்யா, சீனா, வடகொரியா, கியூபா மற்றும் முன்னாள் வார்ஸோ ஒப்பந்த நாடுகள் ஒருசிலவும் வார்த்தையளவில்தான் இன்று சோஷலிஸ நாடுகள். இவ்வாறு சோஷலிஸத்தை நடைமுறைப்படுத்துவதில் வழுக்கி விழுந்த நாடுகளைச் சுட்டிக்காட்டி, ‘சோஷலிசம் செத்துவிட்டது’ என அமெரிக்கா தலைமையிலான அனைத்து முதலாளித்துவ நாடுகளும் உலக மக்களை மூளைச் சலவை செய்துவந்தன. ஆயினும் இத்தந்திரோபாய வியூகத்தில் இப்போது ஆங்காங்கே விரிசல்கள் வெளித் தெரியத் துவங்கியுள்ளன.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்கர்களும் ஐரோப்பிய தாராண்மைச் சீர்திருத்தவாதிகளும் ஒன்றிணைந்து, முதலாளித்துவத்தால் தீர்த்துவைக்க முடியாதிருந்த சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றை, சோஷலிஸத்தைப் பயன்படுத்தித் தீர்க்க முயன்றனர். இதையொத்த, இந்நாளைய முயற்சிகளின் பலாபலன்களை நோர்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறுவடை செய்துவருகின்றன. இவ்வாறே முதலாளித்துவத்தின் முதுகெலும்பான அமெரிக்காவிலும் சோஷலிஸம் எனப்படும் சமதர்மம் பின்பற்றப்பட வேண்டும் எனும் குரல் இன்று ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
அனைவருக்குமான இலவச ஆரோக்கியப் பராமரிப்பு, இலவசக் கல்வி, பணி ஓய்வுகால உதவி, சமூகநல உதவிக் கொடுப்பனவு போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய சமதர்ம அம்சம் கொண்ட அரசாங்கமே இப்போது அமெரிக்காவுக்குத் தேவை என்ற கருத்து – குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் – பரவி வருகின்றது. செல்வந்தர்களுக்கு மட்டுமன்றி, சகலருக்குமான ஒரு பொருளாதார முறைமையை உருவாக்குவதுதான் சமதர்மம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 2016இல் அமெரிக்க அதிபர் பதவிக்கென, ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறங்கிய Bernie Sanders சுமார் 12 மில்லியன் மக்களது ஆதரவைப் பெற்றிருந்தார். இதே கொள்கைகளின் அடிப்படையில் காங்கிரசுக்கான 2018 இடைக்காலத் தேர்தலில், நியூயோர்க்கில் போட்டியிட்ட Alexandria Ocasio-Cortez, மிச்சிக்கனிலிருந்து போட்டியிட்ட Rashida Tlaib ஆகிய இரு இளம் பெண் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். ‘சோஷலிஸம் என்பது கடுமையான அரச கட்டுப்பாட்டுடன் கூடிய முன்னாள் சோவியத் ஆட்சி முறையல்ல; சோஷலிஸம் என்பது பொதுசன நன்மைகளே’ என்னும் இவர்களது கருத்தினை அமெரிக்க இளந்தலைமுறையினருள் 54 சதவீதத்தினர் நம்புகின்றனர்; 43 சதவீதனர் மட்டுமே இதனை மறுக்கின்றனர்.