சோஷலிஸமும் , அமெரிக்க அதிபர் டொனல்டு றரம்பும்! ‘மக்களாட்சியே சமதர்மத்தின் மார்க்கம்’.

எழுத்தாளர் க.நவம்“சோஷலிஸம் அமெரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானது; அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளுடனும் ஆதிக்கங்களுடன் பிறந்த நாடல்ல. பூரண சுதந்திரத்துடனும் விடுதலையுடனும் பிறந்த நாடு; ஆகவே அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோஷலிஸ நாடாகப் போவதில்லை.” இது அண்மையில் இடம்பெற்ற ‘State of the Union’ உரையில் அமெரிக்க அதிபர் டொனல்டு ற்ரம்ப் விடுத்த அறைகூவல். 2020இல் மீண்டும் அதிபராகும் எண்ணத்தின் எதிரொலி. ஜனநாயகக் கட்சியினரைச் சோஷலிஸவாதிகள் எனக் கூறி, அவர்களது முகங்களில் சேறுபூசும் முயற்சி. சோஷலிஸம் என்னும் சொல்லைச் சொல்லிச் சொல்லியே, அமெரிக்க மக்களை அச்சமூட்டித் தம்வயப்படுத்தும் தந்திரம்.

பனிப்போர்க் காலத்தில் சோவியத் யூனியனையும் நேசநாடுகளையும் உதாரணங்காட்டி, அமெரிக்க அரசியல்வாதிகளால் மக்கள் மனங்களில் சோஷலிஸ வெறுப்பை விதைக்க முடிந்தது. சோவியத் யூனியன் சிதறுண்டு, இப்போது மூன்று தசாப்தங்களாகிவிட்டன. ரஷ்யா, சீனா, வடகொரியா, கியூபா மற்றும் முன்னாள் வார்ஸோ ஒப்பந்த நாடுகள் ஒருசிலவும் வார்த்தையளவில்தான் இன்று சோஷலிஸ நாடுகள். இவ்வாறு சோஷலிஸத்தை நடைமுறைப்படுத்துவதில் வழுக்கி விழுந்த நாடுகளைச் சுட்டிக்காட்டி, ‘சோஷலிசம் செத்துவிட்டது’ என அமெரிக்கா தலைமையிலான அனைத்து முதலாளித்துவ நாடுகளும் உலக மக்களை மூளைச் சலவை செய்துவந்தன. ஆயினும் இத்தந்திரோபாய வியூகத்தில் இப்போது ஆங்காங்கே விரிசல்கள் வெளித் தெரியத் துவங்கியுள்ளன.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்கர்களும் ஐரோப்பிய தாராண்மைச் சீர்திருத்தவாதிகளும் ஒன்றிணைந்து, முதலாளித்துவத்தால் தீர்த்துவைக்க முடியாதிருந்த சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றை, சோஷலிஸத்தைப் பயன்படுத்தித் தீர்க்க முயன்றனர். இதையொத்த, இந்நாளைய முயற்சிகளின் பலாபலன்களை நோர்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறுவடை செய்துவருகின்றன. இவ்வாறே முதலாளித்துவத்தின் முதுகெலும்பான அமெரிக்காவிலும் சோஷலிஸம் எனப்படும் சமதர்மம் பின்பற்றப்பட வேண்டும் எனும் குரல் இன்று ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

அனைவருக்குமான இலவச ஆரோக்கியப் பராமரிப்பு, இலவசக் கல்வி, பணி ஓய்வுகால உதவி, சமூகநல உதவிக் கொடுப்பனவு போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய சமதர்ம அம்சம் கொண்ட அரசாங்கமே இப்போது அமெரிக்காவுக்குத் தேவை என்ற கருத்து – குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் – பரவி வருகின்றது. செல்வந்தர்களுக்கு மட்டுமன்றி, சகலருக்குமான ஒரு பொருளாதார முறைமையை உருவாக்குவதுதான் சமதர்மம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 2016இல் அமெரிக்க அதிபர் பதவிக்கென, ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறங்கிய Bernie Sanders சுமார் 12 மில்லியன் மக்களது ஆதரவைப் பெற்றிருந்தார். இதே கொள்கைகளின் அடிப்படையில் காங்கிரசுக்கான 2018 இடைக்காலத் தேர்தலில், நியூயோர்க்கில் போட்டியிட்ட Alexandria Ocasio-Cortez, மிச்சிக்கனிலிருந்து போட்டியிட்ட Rashida Tlaib ஆகிய இரு இளம் பெண் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். ‘சோஷலிஸம் என்பது கடுமையான அரச கட்டுப்பாட்டுடன் கூடிய முன்னாள் சோவியத் ஆட்சி முறையல்ல; சோஷலிஸம் என்பது பொதுசன நன்மைகளே’ என்னும் இவர்களது கருத்தினை அமெரிக்க இளந்தலைமுறையினருள் 54 சதவீதத்தினர் நம்புகின்றனர்; 43 சதவீதனர் மட்டுமே இதனை மறுக்கின்றனர்.

Continue Reading →

கவிதை: எண்ணியெண்ணி அழுகின்றோம் !

இரக்கமின்றி கொலைசெய்ய
எம்மதமும் சொன்னதுண்டா
வணக்கத்தலம் வன்முறைக்கு
வாய்ததென்றும் சொன்னதுண்டா
அரக்ககுணம் மனமிருத்தி
அனைவரையும் அழிக்கும்படி
அகிலமதில் எம்மதமும்
ஆணையிட்டு சொன்னதுண்டா   !

ஈஸ்டர்தின நன்னாளில்
இலங்கையினை அதிரவைத்த
ஈனச்செயல் தனைநினைக்க
இதயமெலாம் நடுங்கிறதே
துதிபாடி துதித்தவர்கள்
துடிதுடித்தார் குருதியிலே
அதையெண்ணி அகிலமுமே
அழுதேங்கி நிற்கிறதே   !

பிராத்தனைக்குச் சென்றவர்கள்
பிணமாகிக் கிடந்தார்கள்
பேயாட்டம் நடந்தேறி
பெருந்துயரே எழுந்ததுவே
இன்னுயிரை ஈந்தளித்த
யேசுபிரான் சன்னதியில்
இரத்தவெறி அரங்கேறி
எடுத்ததுவே பலவுயிரை   !

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 341: அண்மைய கிறித்தவ ஆலயத் தாக்குதல்களும், ஒரு கவிதையும்!

அண்மையத் தாக்குதற் காட்சியொன்றுஅண்மையில் இலங்கையில்  ‘இஸ்லாமிய அரசின்’ (ஐஎஸ் அல்லது இஸ்) அனுசரணையுடன், வஹாபிஸத்தை நம்பும் தீவிரவாத முஸ்லிம் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு கிறிஸ்தவ ஆலயங்களில், நட்சத்திர ஹொட்டல்களில் நடாத்திய குண்டுத்தாக்குதல்கள் 9-11 தாக்குதலையொத்தது. மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்பட்ட தாக்குதல்கள். வசதியான, படித்த இளைஞர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள். இந்த இஸ்லாமிய அமைப்பினை நடாத்தி வந்தவர் ஜஹ்ரான் ஹாசிம்.

ஒரு நாட்டில் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கிளர்ந்தெழுவார்கள். தற்கொலைத்தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறைகள் , இனக்கலவரங்கள் நடைபெற்றிருந்தாலும் அவை இலங்கைத்தமிழர்கள் கடந்த காலங்களில் அனுபவித்தவை போன்றவையல்ல. இருந்தாலும் எதற்காக இவ்வளவு மூர்க்கமாகக் கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும், வெளிநாட்டவர்கள் அதிகமாகத் தங்கியிருந்த நட்சத்திர ஹொட்டல்களிலும் தம் உயிரைத் துச்சமாக மதித்து இம்முஸ்லிம் அமைப்பினர் தற்கொலைத்தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.

உண்மையில் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் வஹாபிசத்தை நம்புபவர்கள் அல்லர். அவர்கள் பிற இனங்களுடன் இணைந்து வாழ்பவர்கள். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருபவர்கள். இலங்கையின் முஸ்லிம் மக்களைப்பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள் எல்லாம் கடந்த காலங்களில் தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு பற்றியும், அதன் போதனைகளின் அபாயம் பற்றியெல்லாம் காவல் துறையினருக்கு அறியத்தந்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றையெல்லாம் காவல் துறையினர் உரிய முறையில் கவனத்துக்கெடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அண்மைய தாக்குதல்கள் பற்றிய அபாய முன்னறிவிப்புகளை, தகவல்களைக்கூட அவர்கள் அவ்விதம் கவனத்தில் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் கூட அறிவித்திருக்கவில்லை.

இவ்விதமான சூழலில் எதற்காக இவ்விதம்  தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு தாக்குதல்களை நடாத்தியுள்ளது? இதற்கு முக்கிய காரணம் அவர்கள் இஸ்லாமிய அரசு அமைப்பின் கொள்கைகளை உள்வாங்கி அதனை இலங்கையில் செயற்படுத்தியதுதான்.  ‘இஸ்லாமிய அரசு’ அவ்விதமானதொரு  அரசினை ஈராக்கிலிருந்து சிரியா வரை நடாத்தியிருந்தது. அதனை அது இழந்து விட்டாலும் அவ்வமைப்பு செயலிழந்து போகவில்லை. அவ்வமைப்பில் மேற்கு நாடுகளிலிருந்தெல்லாம் பலர் இணைந்து கொண்டார்கள். அவ்விதம் இணைந்து கொண்டவர்களெல்லாரும் தாம் வாழ்ந்த நாடுகளில் தமக்கேற்பட்ட அடக்குமுறைகளால் இணைந்துகொண்டவர்கள் அல்லர். அவர்கள் உலகளாவியரீதியில் இஸ்லாமிய அரசொன்றைனை ஸ்தாப்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசின் போதனைகளை, தத்துவங்களை ஏற்றுக்கொண்டு இணைந்தவர்கள்.

Continue Reading →

காதுகளை மறைத்து மேலெழும்பும் கொம்புகள்! கேட்டதும் தப்பில்லை ! சொன்னதும் தப்பில்லை ! நடப்பதும் தப்பில்லையா?!

எழுத்தாளர் முருகபூபதி -இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் சென்னையிலிருந்து ஒரு திரைப்பட நடிகரும் அவரது காதலியான நடிகையும் கொழும்புக்கு வந்து கலதாரி மெரிடீன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்களை அழைத்தவர் செட்டியார் தெருவில் ஒரு பிரபல நகைக்கடை முதலாளி. அவர் மற்றும் ஒரு கிளையை திறக்கும்போது குறிபிட்ட நடிகரையும் அவரது காதலியையும் அந்தத்  திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினர்களாக  அழைத்து,  எங்கள் பத்திரிகையில் அரைப்பக்கம் விளம்பரமும் கொடுத்திருந்தார். விளம்பரத்திற்குரிய கட்டணமும் செலுத்திய  அந்த வர்த்தகப்பிரமுகர், குறிப்பிட்ட நடிகர் – நடிகையை யாராவது ஒரு நிருபர் சந்தித்து பேட்டிகண்டு பத்திரிகையில் எழுதி,  தனது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும்  மேலும் பரவலான தகவல் தரவேண்டும் என்று பிரதம ஆசிரியரிடம் வினயமாக கேட்டுக்கொண்டார். அந்தவேலைக்கு பிரதம ஆசிரியர் என்னை அனுப்பியபோது வேண்டா வெறுப்பாகச்சென்றேன். ” ஒரு சினிமா நடிகரிடம் சென்று எதனைக்கேட்பது? அரசியல்வாதி – இலக்கியவாதியிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. அந்த சினிமா நடிகரிடம் என்ன கேட்கமுடியும்?  அடுத்து எந்தப்படத்தில் நடிக்கிறீர்கள்? உடன் வந்திருக்கும் காதலியைத்தான் மணம் முடிக்கப்போகிறீர்களா?  இலங்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ” இதனைத்தானே கேட்கமுடியும். இந்த பொறுப்பான(?) கேள்விகளுக்கும் அர்த்தமுள்ள இந்தக் கடமைக்கும் (?) நானா கிடைத்தேன். வேறு எவரும் இல்லையா? என்று எனது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினேன். என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாகவும் நன்கு தெரிந்துவைத்திருந்த ஆசிரியர், ” ஐஸே, நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும். பத்திரிகையாளருக்கு எல்லோரும் ஒன்றுதான். அது நாட்டின் அதிபராக இருந்தால் என்ன, சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களாக இருந்தால் என்ன எல்லோரும் ஒன்றுதான். பத்திரிகைக்கு செய்தி முக்கியம். அத்துடன் வரும் விளம்பரங்களும் அவசியம்” என்றார்.

அலுவலக படப்பிடிப்பாளரையும் அழைத்துக்கொண்டு அந்த நடிகர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். வரவேற்பு உபசரணைப்பெண்ணிடம் தகவல் கொடுத்தேன். அங்கிருந்து நடிகர் தங்கியிருந்த அறைக்கு இன்டர்கொம்மில் தகவல் சொல்லப்பட்டதும், நடிகர் என்னுடன் பேசினார். பத்திரிகையின் பெயரும் சொல்லி வந்தவிடயத்தையும் சொன்னேன். பதினைந்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். அவ்வாறே நானும் படப்பிடிப்பாளரும் காத்திருந்து சென்றோம். அவரும் அந்த நடிகையும் தங்களை அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்தார்கள்.

தமிழ்ப்பத்திரிகை என்றவுடன் நடிகர் தமிழ் இனம், தமிழ் மொழி என்று ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். உடனிருந்த நடிகை தமிழ் தெரியாதவர்.  அவர் தெலுங்கில் நடிகரிடம் ஏதோ சொன்னார். எமக்குத் தெலுங்கு தெரியாது. அலுவலகத்தில் ஆசிரியரிடம் குறிப்பிட்ட கேள்விகளையே அந்த நடிகரிடமும் கேட்டேன். ஆசிரியர் சொன்னவாறு நாய்வேடம் தரித்தேன்.

” எம்.ஜி. ஆர் – ஜானகி –  என்.எஸ். கிருஷ்ணன் –  மதுரம் – எஸ். எஸ். ராஜேந்திரன் – விஜயகுமாரி – ஏ.வி. எம். ராஜன் – புஷ்பலதா – ஜெமினி கணேசன் – சாவித்திரி – ஏ.எல். ராகவன் – எம். என். ராஜம்  ஆகியோரைப்போன்று நீங்களும் மணம்முடித்து தொடர்ந்தும் திரையுலகில் நடித்துக்கொண்டிருப்பீர்களா? “

Continue Reading →

தேவகாந்தனின் ‘கதாகாலம்’ – மற்றொரு மகாபாரத மறுவாசிப்பு

– கேரளத்தின் துஞ்சன்பறம்பில் 2018 டிசம்பர் 21-23 நடந்த மகாபாரத சர்வதேச மகாநாட்டில்  கவிஞர்  சோ.பத்மநாதன் ஆற்றிய உரை. –

தேவகாந்தனின் 'கதாகாலம்'-   கவிஞர் சோ.பத்மநாதன்  -மகாபாரதம் என்பது என்ன? வியாசரால் சம்ஸ்கிருத மொழியில் சொல்லப்பட்ட ஃ எழுதப்பட்ட ஒரு கதை. அரசுரிமை பற்றி தாயாதிகளிடையே எழுந்த தகராறு கொடிய போராய் விளைந்து பேரழிவில் முடிந்ததை இக்கதை கூறுகிறது.  கி.மு  1000 அளவில் இன்றைய தில்லிக்கு  அண்மையில் இருந்த அஸ்தினாபுரமே இக்கதைக்குக் களம். பல நூற்றாண்டுகளாக உபகண்டத்தின் பல பகுதிகளில் வாய்மொழியாக வழங்கியதாதலின், என்ன தான் வரலாற்றடிப்படை இருந்தாலும், மகாபாரதம் புனைவாகவே எம்மை வந்தடைந்துள்ளது எனக் கொள்வது தவறாகாது.

பாரதக் கதையைச் சொன்னவர்கள் சூதர்கள்.  இக்கதை சொல்லிகள் சொன்னவை ‘ஜெய கதைகள்’ எனப்பட்டன.  சைவசம்பாயனர், உக்கிரசிரவஸ் முதலிய புகழ்பெற்ற கதை சொல்லிகளோடு பேரறியாக் கதை சொல்லிகள் பலர் நாடுமுழுவதும் திரிந்து பாமர மக்களுக்குப் பாரதக் கதை சொன்னார்கள்.

தன் தந்தை பரீக்ஷித்து பாம்பு தீண்டி இறந்ததால், பாம்பினத்தையே பழிவாங்குதற்காக, ஜனமேஜயன் ஒரு ஸர்ப்பயாகம் செய்யத் தொடங்குகிறான்.  அவனுக்கு வைசம்பாயனர் பாரதக் கதையைச் சொல்கிறார்.

மகாபாரதம் வாய்மொழி மரபுவழி வந்து பிற்காலத்தில் எழுத்துருவம் பெற்றது என்பது வெளிப்படை. கதை சொல்லியான வியாசர் (கிருஷ்ண துவைவபாயனர்) ஒரு கதாபாத்திரமாகவும் வருகிறார்.

மகாபாரதத்தைத் தமிழ் செய்யும் முயற்சிகள் மிகப்பழைய காலத்திலிருந்து நடைபெற்று வந்துள்ளன. ‘மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்பது கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குரிய சின்னமனூர்ச் செப்பேடு.  9ஆம் நூற்றாண்டில் எழுந்த பெருந்தேவனாருடைய பாரதவெண்பா – முழமையானதாய் இல்லாதபோதும் – தமிழில் கிடைக்கும் மகாபாரதங்களுள் காலத்தால் முந்தியது.

வில்லிபாரதம் என வழங்கும் வில்லிபுத்தூராழ்வார் பாரதம் 15ஆம் நூற்றாண்டில் வந்தது.  செய்யுள்களால் அமைந்த இந்நூலை அச்சுவாகனமேற்றியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர்.

மகாபாரதத்தின் நாயகியாகிய பாஞ்சாலி (திரௌபதி)யை மையப்படுத்தி சூதாட்டத்தில் அவள் பணயமாக வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதையும் அவள் சபதத்தையும் ஐந்து சருக்கங்களில், எளிய நடையில் ஒரு நவீன காவியமாகப் பாடியவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்.  பாஞ்சாலிக்கு நேர்ந்த அடிமை வாழ்வையும் அவமானத்தையும் அந்நியர் ஆட்சியில் பாரதநாட்டுக்கு நேர்ந்த இழிநிலையாக, பூடகமாகச் சுட்டி, தேசவிடுதலைக் குரலாக தன் படைப்பை ஆக்கியது பாரதியின் சாதனை எனலாம்.

மகாபாரதத்தை மீளக்கூறும் முயற்சிகள் நெடுங்காலமாக நடைபெற்று வந்துள்ளன.  என் பார்வைப் பரப்புக்கெட்டியவற்றுள் மிகப் பழைய மீள்கூறல் ஐராவதி கார்வேயினுடையது (1967) இது மராத்தியில் எழுதப்பட்டது.  அமெரிக்காவின் பென்ஸில்வேனிய பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்ட காலத்தில் (1969) இப்பெண்மணி ‘யுகாந்தா’ என்னும் தலைப்பில் இதை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்னர் மேலும் பல மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டது.

திரௌபதி பாண்டவர் ஐவருக்கும் மனைவியாவது வேண்டும் என்றே செய்யப்பட்டதல்ல என்றும், குந்தி உள்ளே இருக்க வெளியே பாண்டவரும் நிற்க, ‘அம்மா, ஒரு கனி கொண்டு வந்தோம்!’ என்று யுதிஷ்ரன் சொன்னான் என்றும், ‘நீங்கள் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று குந்தி சொன்னதாகவும், தாயின் கட்டளையைப் பாண்டவர்கள் நிறைவேற்றியதாகவும், காலம் காலமாகக் கதை சொல்லப்பட்டு வந்தது.  இதைப் புறந்தள்ளி, பாண்டவர்களை ஒற்றுமையாக வைத்திருப்பதற்காக, குந்தி செய்த சூழ்ச்சியாக இதை கார்வே காட்டுகிறார். ‘தன் மக்கள் மூவரை மட்டுமன்றி மாத்ரியின் மக்களையும் பிரிக்க முடியாதபடி குந்தி பிணைத்தாள்’

திருதராஷ்டிரன் பாண்டவர்களையும் குந்தியையும் வாரணாவதம் அனுப்புகிறான்.  அரக்கு மாளிகையில் வைத்து அவர்களை எரிக்க, புரோசனன் என்றொருவன் ஏற்பாடு செய்யப்படுகிறான்.  இச்சதியை முன்கூட்டியே அறிந்த விதுரன், யுதிஷ்டிரனை எச்சரித்ததுமன்றி, அவர்கள் தப்பும் மார்க்கத்தையும் சொல்லி இருந்தான்.  வாரணாவதத்தில் வசித்த காலத்தில், தன்னோடு நெருக்கமாகப் பழகிய ஒரு வேட்டுவப் பெண்ணுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் உணவும் மதுவும் கொடுத்து உறங்கச் செய்தபின், சுருங்கை வழியே குந்தியும் பிள்ளைகளும் தப்பிச் செல்ல, வேட்டுவப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அரக்கு மாளிகையில் எரிந்து ஒழிந்தனர்.

Continue Reading →

இலங்கையின் துயரம்: குண்டு வெடிப்புகள் ஏற்படுத்திய பேரழிவு!

இலங்கையில் குண்டு வெடிப்பு

அண்மைக்காலமாக அமைதியாக விளங்கிய இலங்கையின் தலைநகரான கொழும்பிலும், கொழும்புக்கு அண்மையிலுள்ள நீர்கொழும்பிலும் , மட்டக்களப்பிலும் கிறித்தவ ஆலயங்களில் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹொட்டல்கள் சிலவற்றில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிறித்தவர்களின் புனித நாளான ஈஸ்ட்டர் ஞாயிறான இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மீண்டும் யுத்தச்சூழல் நினைவுகளையெழுப்புகின்றன. குண்டு வெடிப்புகள் கிறித்தவ ஆலயங்களிலும், கொழும்பிலுள்ள ஹொட்டல்களிலும் நடைபெற்றதாக இன்னுமோர் ஊடகம் தெரிவிக்கின்றது.

ஆட்சியைப்பிடிக்க முனைவதற்காகத் தீய சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பாவித்து , நாட்டில் உறுதியற்ற நிலையினை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் பெற முயற்சிகள் செய்யக்கூடுமென்ற நிலையில், மத, இன வெறி பிடித்த அமைப்புகள் தம் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் பெற இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடுமென்ற நிலையில் இக்குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் உறுதியற்ற நிலை தோன்றாத வகையில் இலங்கை அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமென எதிர்பார்ப்போம். விரைவில் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான சக்திகளை இனங்கண்டு , நாட்டில் சட்ட ஒழுங்கினை நிலை நாட்டிட விரைவான , உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.

Continue Reading →

கவிஞர் மழயிசையின் கவிதைகள் இரண்டு!

- கவிஞர் மழயிசை -

1. காற்று கரைந்துவிட
நிலம் சடமாக…..                              
நீர் உறைந்துவிட…         
எத்தனித்து உமிழ்கிறது வானம்.
குளிரும் இரவுகளில்….           
எரியும் மனமுல்லை.                          
எரியும் மனமதனில்…            
விரியும் பகற்கொள்ளை.

Continue Reading →

கவிதை: வாக்களிப்போம் வாருங்கள் !

தேர்தல்தேர்தல் தேர்தலென்று
தெருவெல்லாம் திரிகிறார்
ஆளைஆளை அணைத்துபடி
அன்புமுத்தம் பொழிகிறார்
நாளைவரும் நாளையெண்ணி
நல்லகனவு காண்கிறார்
நல்லதெதுவும் செய்துவிட
நாளுமவர் நினைத்திடார்  !

மாலை மரியாதையெல்லாம்
வாங்கிவிடத் துடிக்கிறார்
மக்கள்வாக்கை பெற்றுவிட
மனதில்திட்டம்  தீட்டுறார்
வேலைபெற்றுத் தருவதாக
போலிவாக்கை விதைக்கிறார்
வாழவெண்ணும் மக்கள்பற்றி
மனதிலெண்ண மறுக்கிறார்  !

ஆட்சிக்கதிரை ஏறிவிட
அவர்மனது துடிக்குது
அல்லல்படும் மனதுபற்றி
அவர்நினைக்க மறுக்கிறார்
அதிகசொத்து பதவியாசை
அவரைசூழ்ந்து நிற்குது
அவரின்காசை அனுபவித்தார்
அவர்க்குத்துதி பாடுறார் !

Continue Reading →